கோப்பையை வெல்லும் வலுவான நம்பிக்கையுடன் வந்தோம்: டு பிளெஸ்ஸிஸ் வருத்தம்

By இரா.முத்துக்குமார்

நாக்பூர் பிட்ச் நேற்றும் வேலையைக் காட்ட குறைந்த ஸ்கோர் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை போராடி வீழ்த்திய மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பலரும் எதிர்பார்த்த டிவில்லியர்ஸ், கெயில் அதிரடி நேற்று கைகூடவில்லை. டிவில்லியர்ஸ் வேகம் குறைன்த பந்தில் அவுட் ஆக, கிறிஸ் கெயிலுக்கு ரபாதா வீசியது அருமையான பந்தாக குச்சி எகிறியது. 4 ரன்களில் கெயில் அவுட் ஆனார். ஆனால் மே.இ.தீவுகள் இம்ரான் தாஹிரின் கடைசி நேர முயற்சிகளையும் மீறி சாமுயெல்ஸின் நிதானப்போக்கினாலும், கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ரபாதா வீசிய பந்தை மிட்விக்கெட்டில் நம்ப முடியாதபடிக்கு மிகப்பெரிய சிக்சரை பிராத்வெய்ட் அடித்ததாலும் 19.4 ஓவர்களில் 123/7 என்று வென்றது மே.இ.தீவுகள்.

இந்த வெற்றியின் மூலம் மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு முன்னேற, தென் ஆப்பிரிக்கா அணி, இலங்கை-இங்கிலாந்து போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்துவதை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் ஒரு உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் முக்கிய போட்டியில் தென் ஆப்பிரிக்கா சொதப்பல் தொடர்ந்தது.

இலக்கை மே.இ.தீவுகள் துரத்தும் போது 16 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் 99/4 என்ற நிலையில் 24 பந்துகளில் 24 ரன்களே தேவை என்று இருந்தது. சாமுயெல்ஸ் 31 ரன்களுடனும் ஆந்த்ரே ரசல் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பனிப்பொழிவும் இருந்தது.

17-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீச வந்தார். முதல் பந்து அருமையான கூக்ளி, உள்ளே வந்தது, அதனை கவர் திசையில் அடிக்க முயன்றார் சாமுயெல்ஸ் ஆனால் பந்து உட்புறமாக திரும்பியதால் ஷாட் நேராக காற்றில் தாஹிரிடமே கேட்சாக வந்தது. ஆனால் தாஹிர் அருமையான வாய்ப்பை நழுவ விட்டார்.

அதே ஓவரில் ஆந்த்ரே ரசல் மனம் போன போக்கில் தாஹிர் பந்தை சுழற்ற மிட்விக்கெட்டில் மில்லரிடம் கேட்ச் ஆனது. அடுத்த பந்தே கூக்ளியில் டேரன் சமி பவுல்டு ஆக மே.இ.தீவுகள் 17-வது ஓவர் முடிவில் 100/6 என்று தோல்வி முகம் காட்டத் தொடங்கியது. 18-வது ஓவரை டேவிட் வீஸ அருமையாக வீசி 3 ரன்களையே விட்டுக் கொடுக்க 2 ஓவர்களில் 20 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்று பரபரப்பானது.

ஆனால் 19-வது ஓவரில் கிறிஸ் மோரிஸ் மோசமான பவுன்சர் ஒன்றை வீச சாமுயெல்ஸ் அதனை ஸ்லிப் வழியாக பவுண்டரி அடித்தார். மீண்டும் ஒரு பந்தை ஷார்ட் ஆகவும் வைடாகவும் மோரிஸ் வீச அதே தேர்ட்மேன் திசையில் சாமுயெல்ஸ் மேலும் ஒரு பவுண்டரி அடித்து அடுத்த பந்தில், 43 ரன்கள் எடுத்த நிலையில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் மோரிஸ் இந்த ஓவரில் 11 ரன்களை கொடுத்ததால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரபாதா பந்தை பிராத்வெய்ட் சற்றும் எதிர்பாராதவிதமாக பெரிய சிக்ஸ் ஒன்றை அடிக்க மே.இ.தீவுகளுக்கு வெற்றி கிட்டியது.

2015-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் கிராண்ட் எலியட்டுக்கு டிவில்லியர்ஸ் வீசிய ஓவர் போல் தற்போது ரபாதா வீசிய ஓவர் தென் ஆப்பிரிக்காவின் தோல்வியில் முடிந்தது.

தோல்வி குறித்து டு பிளெஸ்ஸிஸ் கூறும் போது, “வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே இன்று எங்களது பேட்டிங் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. 130-135 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நிச்சயமாக 10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

முதலில் பேட் செய்ததற்குக் காரணம் இது நிச்சயம் மும்பை பிட்ச் போல் இருக்காது என்ற நம்பிக்கையில்தான். ரன் அவுட், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தது, ரைலி அவுட் ஆனது, டிவில்லியர்ஸ் அவுட் ஆனது ஆகியவை மென்மையான ஆட்டமிழப்புகளே.

இந்த ஆட்டத்திற்குள் செல்வதற்கு முன்பாக மே.இ.தீவுகள் பவர் ஹிட்டிங் அணி, நாம் சாதுரியமாகச் செயல்படவேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கினோம். நிச்சயம் 10 அல்லது 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம், ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுக்க இந்த மைதானமும் பிட்சும் மிகவும் வசதியானதே.

ஒரு இன்னிங்ஸை ரன் அவுட் மூலம் தொடங்குவது விரும்பத்தக்கதல்ல. இது ஒட்டுமொத்த அணியையும் எதிர்மறை அணுகுமுறைக்குள் தள்ளுகிறது. எதிரணியினருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக 3 அல்லது 4 விக்கெடுகளை உடனடியாக இழந்தால் எந்த அணிக்கும் அது பின்னடைவே.

நாங்கள் எங்கள் சிறப்புத் தன்மைக்கு நெருக்கமாக ஆடவில்லை, இதுதான் வெறுப்பளிக்கிறது. நாம் அனைத்தையும் சரியாகச் செய்தால் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும், மே.இ.தீவுகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது (சாமுயெல்ஸுக்கு தாஹிர் விட்ட கேட்ச்).

நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். கோப்பையை வெல்லும் வலுவான நம்பிக்கையுடன் வந்தோம். ஆனால் தற்போது மற்ற போட்டிகளின் முடிவுகளை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மற்ற அணி எங்களுக்குச் சாதகம் செய்யும் நிலைமைக்கு வந்து விட்டோம், அப்படி நடக்காவிட்டால், தோல்விக்கு மன்னிப்பே கிடையாது” என்றார் டு பிளெஸ்ஸிஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்