புதுடெல்லி: குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் கதறுகிறார். ஒவ்வொருவரின் வேதனைக்கும் வெண்ணை தடவிப் பேசுவது என் வேலையல்ல என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கடந்த 2018-19ஆம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில் சிட்னியில் 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவைப் புகழ்ந்து, வெளிநாடுகளில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் எனப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதால் நான் நொறுங்கிவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''ஒவ்வொருவரின் வேதனைக்கும் நான் வெண்ணை தடவிக் கொடுப்பதுபோல் பேசுவது என் வேலையல்ல. என்னுடைய பணி எந்தவிதமான திட்டமும் இல்லாமல் உண்மையைப் பேசுவதுதான். குல்தீப் யாதவ் குறித்த என்னுடைய கருத்து அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான்.
நான் குல்தீப் யாதவைப் பற்றிப் புகழ்ந்து பேசியதால், பேருந்துக்குக் கீழே தூக்கி வீசியதுபோல் உணர்ந்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அப்படியெல்லாம் அஸ்வின் கவலைப்படத் தேவையில்லை. நான் பேருந்து ஓட்டுநரிடம் முன்கூட்டியே கூறி 4 அடி முன்பாகவே நிறுத்தக் கூறிவிடுவேன்.
நான் குல்தீப் யாதவைப் புகழ்ந்தது என்பது இளம் வீரருக்கு உற்சாகமாக இருக்கும், சிறப்பாக அடுத்தடுத்து விளையாடுவார் என்பதற்காகத்தான். ஆனால், அஸ்வின் சிட்னி டெஸ்ட்டில் அப்போது விளையாடவில்லை, குல்தீப் நன்றாகப் பந்துவீசினார். அதனால்தான் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் அஸ்வின் ஏன் துடிக்கிறார். உங்களுடைய பயிற்சியாளர் உங்களிடம் சவால் விடுத்தால் என்ன செய்வீர்கள். வீட்டுக்குச்சென்று தனியே அமர்ந்து அழுவீர்களா. நான் திரும்ப வரமாட்டேன் எனப் பேசுவீர்களா. திறமையான வீரராக இருப்பவர், அந்தச் சவாலை எதிர்கொண்டு, பயிற்சியாளர் கூறியது தவறு என நிரூபிக்க வேண்டும்.
நான் பேசியது அனைத்தும் அணியின் நலனை மனதில் வைத்துதான். இந்திய அணியில் நான் 7 ஆண்டுகளாகப் பயிற்சியாளர் அனுபவத்தில், எந்த வீரரையும் உள்நோக்கத்தோடு தேர்வு செய்யது இல்லை. அந்த நேரத்தில் யார் நன்றாக விளையாடுகிறார்களோ அந்த வீரரால் அணிக்கு நல்லது நடக்குமென்றால் அணிக்குள் வருவார்.
2018-ம் ஆண்டு பிசிசிஐ நிர்வாகம் அஸ்வினிடம் உடற்தகுதியுடன் இருக்கவேண்டும் எனத் தெளிவாகக் கூறியது. அதன்பின் அவர் சிறப்பாகப் பயிற்சி செய்து இன்று அஸ்வின் எவ்வாறு பந்துவீசுகிறார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக அஸ்வின் இருக்கிறாரே. 2019-ம் ஆண்டு அஸ்வின் பந்துவீசியதற்கும், 2021-ம் ஆண்டு அவர் பந்துவீசியதற்கும் வேறுபாடு இருக்கிறது. அணியில் ஈகோ இருக்கத்தான் செய்யும். அதை எவ்வாறு கையாள்கிறோம், கடந்து செல்கிறோம் என்பதில் இருக்கிறது''.
இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago