சரித்திர நாயகன் ஸ்ரீகாந்த்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்குள் நுழைந்த முதல் இந்தியர்!

By செய்திப்பிரிவு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியின் இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சரித்திரத்தைப் படைத்துள்ளார் ஸ்ரீகாந்த் கிடாம்பி. ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்‌ஷ்யா சென்னுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வரலாற்றுச் சாதனை படைத்தார். சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ள கிடாம்பி சக வீரரான லக்‌ஷ்யா சென்னை 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். 1 மணி நேரம் 9 நிமிடங்களில் அவர் வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர பெருமையைப் பெற்றார் ஸ்ரீகாந்த். 28 வயது ஸ்ரீசாந்த், இந்தியாவின் 20 வயது இளம் வீரரை தனது அனுபவத்தால் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். இது த்ரில்லிங்கான போட்டியாக அமைந்ததும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்த ஒன்றாக இருந்தது.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு நுழைந்து மகத்தான வரலாற்றைப் படைத்துள்ள ஸ்ரீகாந்த், இறுதிப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சரித்திரத்தையும் பதிவு செய்வார். அல்லது, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் நாடு திரும்புவார்.

இதனிடையே, இந்தியாவின் லக்‌ஷயா சென் தனது முதல் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலேயே வெண்கலம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தியாவின் புகழ்பெற்ற வீரர்களான பிரகாஷ் படுகோன் (1983-ல் வெண்கலம்) மற்றும் சாய் பிரணீத் (2019-ல் வெண்கலம்) ஆகியோர் இந்திய ஆடவர் பிரிவில் இப்பெருமையைப் பெற்றிருந்தது நினைகூரத்தக்கது.

இந்தத் தொடரின் மற்றொரு ஆடவர் அரையிறுதி சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரின் லோக் கீன் யூவ், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சென்னும் மோதினர். 23-21, 21-14 என்ற நேர் செட்டில் லோ கீன் யூவ், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஆண்டர்ஸ் ஆன்டன் சென்னை வீழ்த்தி அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

24 வயதான லோக் கீன் யூவ், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் நுழைந்த முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுவிட்டார். ஆனால், நடப்புத் தொடரில் அவருக்கு வரலாற்றுப் பெருமை பெற்றுத்தந்தது உலக சாம்பியன் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்ஸில் சென்னை 14-21, 21-9, 21-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதுதான்.

லோக் கீன், கடந்த அக்டோபரில் டச் ஓபன், நவம்பரில் ஹைலோ ஓபன் சாம்பியன் பட்டங்களை வென்றார். கடைசியாக இந்தோனேசியா ஓபனில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பியும், சிங்கப்பூர் வீரர் லோக் கீன் யூவும் மோதவுள்ளனர். இந்திய நேரப்படி இன்றிரவு இந்தப் போட்டி நடைபெறுகிறது. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE