நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துக: பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

இந்திய கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகளை தூய்மைப்படுத்தி நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முன்னாள் நீதிபதி லோதா கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் மீது குறைகள் காணும் பிசிசிஐ மீது உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரைகள் மீது குறைகள் காணும் பிசிசிஐ உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் நிர்வாகிகள் இந்திய கிரிக்கெட்டின் தூய்மை உறுதி செய்யும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கண்டித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்த இந்த விவகாரத்தின் போது தலைமை நீதிபதி தாக்கூர் கூறும்போது, “கிரிக்கெட் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்ய நீதிபதி லோதா கமிட்டியை நாங்கள் அமைத்தது என்ன சர்வதேச செய்தியா? உலகத்திற்கே இது தெரிந்த விஷயம். இப்போது வந்து கூறுகிறீர்கள் உங்களை கலந்தாலோசிக்கவில்லை என்று. இது நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எழுத்து பூர்வ அழைப்பிதழுக்காக எல்லைக்கோட்டருகே காத்துக் கொண்டிருந்தீர்களா?” என்று சற்றே கேலி தொனியில் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகள் மீது பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் தெரிவித்த ஆட்சேபங்களும் பிசிசிஐ கருத்தை எதிரொலித்தன.

இதனையடுத்து நீதிபதி கூறும்போது, “நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள், அதாவது உச்ச நீதிமன்றம் சில மட்டுப்படுத்தப்பட்ட விவகாரங்கள் குறித்து கமிட்டியிடம் மீண்டும் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்யும் விருப்பம் எங்களிடமே உள்ளது, அதுவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள்தான். லோதா கமிட்டி பிசிசிஐ-க்கு நிறைய செலவை ஏற்படுத்துகிறது. அது எளிதான கமிட்டி அல்ல” என்றார் தாக்கூர்.

பிஷன் பேடி, கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட, பிற மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் இந்த வழக்கில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ஆட்சேபணைகள் மீது உச்ச நீதிமன்றம் காரசாரக் கேள்விகள்:

2 மணி நேரம் நீடித்த விசாரணையில் லோதா கமிட்டி பரிந்துரைகள் மீதான பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் கவலைகளை உச்ச நீதிமன்றம் கேள்விக்குட்படுத்தியது, இதில் குறிப்பாக பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஏன் அமைச்சர்கள் உள்ளனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. லோதா கமிட்டி அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களை பிசிசிஐ-யில் செயல்படக்கூடாது என்று தடை விதித்துள்ளது. ஆனால் உதாரணமாக முன்னாள் அமைச்சர் என்.கே.பி. சால்வே போன்றவர்கள் தங்கள் தலைமைத்துவத்தையும் அனுபவத்தையும் அளிக்கின்றனர் என்று பிசிசிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மறு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி தாக்கூர், “எனவே என்.கே.பி.சால்வே இருக்கிறார் என்பதற்காக மற்ற ஒவ்வொரு அமைச்சரும் இருப்பதை விரும்புகிறீர்கள் இல்லையா? உங்கள் நிர்வாகக் கவுன்சிலில் மத்திய தலைமை தணிக்கையாளர் பிரதிநிதி ஒருவர் இருப்பதை குறைகூறும் நீங்கள் அமைச்சர்கள் இருப்பது பற்றி ஆட்சேபணை தெரிவிக்க மறுக்கிறீர்கள் இல்லையா?” என்றார்.

இந்தக் கேள்வியை மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை நோக்கி நீதிபதி தாக்கூர் கேட்க, அவரிடம் பதில் இல்லை, மவுனம் காத்தார்.

கிரிக்கெட் நிர்வாகிகளுக்கு வயது உச்ச வரம்பை 70-ஆக லோதா கமிட்டி பரிந்துரை செய்து நிர்ணயித்துள்ளது, இது பற்றி ஆட்சேபம் எழுந்ததற்கு பதில் அளித்த நீதிபதி தாக்கூர், “வழக்கறிஞர்கள் வயதாக வயதாக சிறந்து விளங்குவார்கள். கிரிக்கெட் விஷயத்திலும் இது சாத்தியமா? ஓய்வு பெறுவதற்கு 70 வயது என்பது சரிதான் என்று நாங்கள் கருதுகிறோம். 70 வயதில் ஒருவர் வீட்டில் அமர்ந்து டிவியில் கிரிக்கெட் பார்க்க வேண்டியதுதான்” என்றார்.

கேள்விகளின் கூர்மை தீவிரமடைய, பிசிசிஐ தரப்பு வாதம் ஒரு சமயத்தில், நீதிபதி லோதா கமிட்டி பிசிசிஐ-யின் சில நல்ல செயல்திட்டங்களையும் பாராட்டியுள்ளது என்றும் இந்திய அணி உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு ஆதிக்கச் சக்தி என்றும் டி20 மற்றும் பிற வடிவங்களில் முன்னிலையில் உள்ளது என்று கூறியது, இதற்கும் விடாது இடமறித்த தாக்கூர், “பிசிசிஐ-யை மீறி வீரர்கள் இதனைச் சாதித்துள்ளனர்” என்றார்.

மாநில வாரியம் ஒன்றுக்கு ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு குறித்த லோதா கமிட்டி பரிந்துரை உலகக் கால்பந்து கூட்டமைப்பான பிஃபா போன்ற ஊழலுக்கு வித்திடும் என்று வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்த போது, “இதற்கு முன்பாக பிஃபா எத்தனை முறை இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது?” என்று இடைமறித்தார்.

மேலும் பிசிசிஐ தரப்பு கூறும்போது, லோதா கமிட்டி வாக்கு உரிமைகளை மாநிலங்களின் புவியியல் எல்லையை வைத்து பரிந்துரை மேற்கொண்டுள்ளார் என்றும் ஆனால் பிசிசிஐ கிரிக்கெட்டை வைத்து எல்லைகளை வகுத்துள்ளது என்றும் இதனால் மகாராஷ்டிரா, குஜராத்தில் இரண்டு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றும் முன்வைத்தனர்.

இதற்கு மறுகேள்வி எழுப்பிய நீதிபதி தாக்கூர், “பகுதிகளைப் பிரிக்க யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தது? எப்படி ஒருவர் கிரிக்கெட் சங்கம் ஒன்றை ஆரம்பித்து நாட்டை தங்களுக்கேற்ப பகுதிகளாக பிரிக்க முடியும்?

நீங்கள், அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியதிகாரத் துறையைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் அளிக்கிறீர்கள், இது பற்றி கேள்விகள் எதுவும் கேட்கப்படுவதில்லை...அதாவது வாக்கை ஒரு குறிப்பிட்ட விதத்தில் அளிக்கப்படுவதை உறுதி செய்ய இவ்வாறு செய்யப்படுகிறதா?” என்று கடுமையாக கேள்வி கேட்டார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் பிசிசிஐ மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு அளித்த தொகை விவரங்கள், அதன் செலவு விவரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பின் போது விளம்பரங்களைக் கடுமையாகக் குறைக்கக் கூறியுள்ளதே லோதா கமிட்டி, இது பிசிசிஐ-யின் வருவாயை கடுமையாக பாதிக்கும் என்ற ஆட்சேபம் எழுப்பப் பட்டது.

இதற்கு, “பார்வையாளர்களின் மகிழ்ச்சியே முக்கியமான விஷயம். ஆட்டத்தை ரசித்துப் பார்ப்பதை விட உங்கள் வருவாய்தான் முக்கியம் என்கிறீர்களா?” என்றார் தலைமை நீதிபதி தாக்கூர்.

மேலும் கடுமையாக கூறிய தலைமை நீதிபதி தாக்கூர், “உங்களது மனசாட்சியத் தக்கவைக்கும் சி.ஏ.ஜி. உறுப்பினரைக் கூட நீங்கள் விரும்பவில்லை. நிர்வாகக்குழுவில் சிஏஜி நாமினியை நீங்கள் நியமிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டால் ஐசிசி உங்கள் உரிமைகளை பறித்து விடும் என்று அஞ்சுகிறீர்களா? நிச்சயமாக நல்ல அறிவுரை மீது உங்களுக்கு ஆட்சேபம் இருக்காது.. இருக்கிறதா என்ன?” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்