மும்பையில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 229 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து தடாலடி ஆட்டத்தில் 230 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
டி20 விரட்டலில் 2-வது மிகப்பெரிய வெற்றி விரட்டலாகும், இது. உலகக்கோப்பை டி20-யில் இவ்வளவு பெரிய இலக்கை வெற்றிகரமாக துரத்தியது இதுவே முதல் முறை.
பேட்ஸ்மென்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட மும்பை ஆடுகளத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். நடந்தது இதுதான். தென் ஆப்பிரிக்கா அணியில் 3 பேர் அரைசதம். 20 பவுண்டரிகள் 13 சிக்சர்களுடன் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து சாதனை வெற்றி நிகழ்த்தியது.
பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இந்தப் பிட்சில் இம்ரான் தாஹிர் இந்த கண்மூடித்தனமான பவர் ஹிட்டிங்கிலும் 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டியதற்கு தனி விருது அளித்தாலும் தகும். ஜோஸ் பட்லர் விக்கெட்டுடன் பவுண்டரியே கொடுக்காத பவுலராகத் திகழ்ந்தார் இம்ரான் தாஹிர்!!
230 ரன்கள் இலக்கு என்றவுடன், என்ன செய்வது, சுற்ற வேண்டியதுதான், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய், ரபாதா வீசிய முதல் ஓவரிலேயே சில அற்புதமான ஷாட்களின் மூலம் 21 ரன்கள் எடுத்தார். இதில் வைடு 5 ரன்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
டேல் ஸ்டெய்ன் வந்தார், அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் 3 பந்துகளையும் லெக் திசையில் பவுண்டரி விளாசினார். அப்போது ஷார்ட் பைன் லெக் திசையில் கைல் அபாட் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். ஸ்டெய்னை அதே ஓவரில் எதிர்கொண்ட ஜேசன் ராய், ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் முடிக்க 2 ஓவர்களில் ஸ்கோர் 44/0. டி20 கிரிக்கெட்டில் 2 ஓவர்களில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும், அதே போல் டேல் ஸ்டெய்ன் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்களாகவும் இந்த ஓவர் அமைந்தது.
இந்நிலையில் ஹேல்ஸ் 17 ரன்களில் இருந்த போது கைல் அபாட் ஒரு யார்க்கர் லெந்த் பந்தில் ஹேல்ஸை எல்.பி. செய்தார். 2.3 ஓவர்களில் இங்கிலாந்து 48/1.
பென் ஸ்டோக்ஸ் 3-ம் நிலைக்கு முன்னேற்றப்பட்டார். ஜேசன் ராய், கைல் அபாட்டை டி காக் தலைக்கு மேல் சிக்ஸ் அடித்தார். இந்நிலையில் 16 பந்துகளில் அதிரடி 43 ரன்களை எடுத்த ஜேசன் ராய், அபாட் பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவர் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசினார். பென் ஸ்டோக்ஸ் 9 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ரபாதா பந்தில் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர் பிளே முடிவில் இங்கிலாந்து 89 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்கா இதே 6 ஓவர்களில் எடுத்திருந்ததைக் காட்டிலும் 6 ரன்கள் கூடுதலாகும்.
இம்ரான் தாஹிர், ஜே.பி.டுமினி பந்து வீச வந்த பிறகு முதல் முறையாக இம்ரான் தாஹிர் ஓவர் ஒன்ற் பவுண்டரி இல்லாத ஓவராக அமைந்தது. ரன் விகிதமும் காட்டடி நிலைக்குக் கொஞ்சம் தணிந்தது. இந்த அதிரடி பிட்சிலும் மோர்கன் 15 பந்துகளில் பவுண்டரி இல்லாமல் 12 ரன்கள் எடுத்து டுமினி பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார். 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 118/4, இதே நிலையில் தென் ஆப்பிரிக்கா 125/2.
ஆனால் இந்நிலையில் ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் அடிதடி ஆட்டம் ஆட முடிவெடுத்தனர், அடுத்த 3 ஓவர்களில் 42 ரன்கள் வந்தது கிறிஸ் மோரிஸின் ஷார்ட் பிட்ச் பந்துகள் இங்கிலாந்துக்கு கை கொடுக்க, டேல் ஸ்டெய்ன், டுமினி நிறைய வாங்கினர். 13 ஓவர்களில் 160/4 என்று இங்கிலாந்து முன்னேறியது.
ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 14 பந்துகளில் 21 எடுத்த பட்லரை, இம்ரான் தாஹிர் ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். கிறிஸ் மோரிஸ் தத்துப்பித்தென்று வீச ஜோ ரூட் அவரது புல்டாஸை அடித்து 30 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆனால் 44 பந்துகளில் ஜோ ரூட் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 83 ரன்கள் விளாசி, ரபாதாவிடம் ஆட்டமிழந்த போது 18.2 ஓவர்களில் இங்கிலாந்து 219/6 என்று அரிய வெற்றியின் அருகில் வந்தது. ஜோர்டான் தேவையில்லாமல் அவுட் ஆனாலும் மொயின் அலி வெற்றியை உறுதி செய்தார். ஆனால் பரபரப்பாகவெல்லாம் இல்லை, இங்கிலாந்து ஒரு விதத்தில் சவுகரியமாகவே வென்றனர்.
ரபாதா 50 ரன்கள் 2 விக்கெட், ஸ்டெய்ன் 2 ஓவரில் 35 ரன்கள். அபாட் 41 ரன்களுக்கு 3 விக்கெட். இம்ரான் தாஹிர் 4 ஓவர்கள் 28 ரன்கள் 1 விக்கெட். கிறிஸ் மோரிஸ் 3 ஓவர்கள் 39 ரன்கள். ஒருநாள் போட்டி வரலாற்றில் 438 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதைப் போன்று டி20 கிரிக்கெட்டில் இந்தப் போட்டியும் ஒரு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி:
முன்னதாக குவிண்டன் டி காக், ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தின் மோசமான பந்து வீச்சை பிய்த்து உதறினர். பாயிண்டில் தொடர்ந்து டி காக் ஆடியும் மோர்கன் அங்கு பீல்டரை நிறுத்தவில்லை, ஆமலாவுக்கு எளிதான கேட்ச் ஒன்று தொடக்கத்திலெயே விடப்பட்டது.
டி காக் அற்புதமான ஒரு சக்தியாக எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது நேற்றைய அவரது ஆட்டம் நிரூபித்தது. அதுவும் கவர் எக்ஸ்ட்ரா கவரில் அவர் அடித்த 2 மிகப்பெரிய சிக்சர்கள் நேற்றைய ஆட்டத்தின் பிரமாதமான ஷாட்களில் தலை சிறந்தது என்றால் மிகையாகாது. ஜோர்டான் எங்கு போட்டாலும் அடி விழுந்தது. அவர் 3 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்தார். வில்லே, டாப்ளி என்று ஒருவரையும் ஆம்லா, டி காக் ஜோடி பாக்கி வைக்க வில்லை 7 ஓவர்களில் ஸ்கோர் 96 ரன்களை எட்டிய போது 24 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்த டி காக், மொயின் அலியிடம் அவுட் ஆனார்.
டிவில்லியர்ஸ் இறங்கி 2 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 16 ரன்கள் விளாசி அடில் ரஷீத்தை எங்காவது அடித்து நொறுக்க வேண்டும் என்ற உந்துதலில் அவுட் ஆகி வெளியேறினார், இங்கிலாந்து தப்பித்தது, இல்லையெனில் ஸ்கோர் 250 ஆகியிருக்கும். டு பிளெஸ்ஸிஸ் 17 ரன்களை 17 பந்துகளில் எடுக்குமாறு மட்டுப்படுத்தப்பட்டார். ஹஷிம் ஆம்லா 31 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சார்களுடன் 58 ரன்கள் எடுத்தார். ஆம்லாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவெனில் சாதாரண கிரிக்கெட் ஷாட்களையே அழகாக ஆடி விரைவில் ரன்குவிப்பிலும் அவரால் ஈடுபட முடியும் திறமை போற்றத்தக்கது.
இங்கிலாந்து பந்து வீச்சு மொயின் அலி, ரஷீத் தவிர எல்லா இடங்களிலும் வீசப்பட டுமினி 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உட்பட 28 பந்துகளில் 54 ரன்களையும், டேவிட் மில்லர் 12 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்களை எடுக்க தென் ஆப்பிரிக்கா 229 ரன்களை எடுத்தது. ஆனாலும் போட்டியை காப்பாற்ற முடியவில்லை, தோல்வி தழுவியது.
ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago