ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ள மரியா ஷரபோவா, தன்னுடைய வலைதளம் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக, அவரின் டென்னிஸ் ரசிகர்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், 'ஊக்க மருந்து குறித்து தனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி தவறானது' என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஊக்க மருந்து சோதனையில், ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் ஷரபோவா, தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டதாகக் கூறி, அவர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து மரியா ஷரபோவா, தன் டென்னிஸ் ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
"என்னுடைய ரசிகர்களுக்கு,
மீடியாக்களில் தவறாகக் கையாளப்பட்ட சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஊக்க மருந்து விவகாரத்தால் விளையாட தடை ஏற்பட்டபோது, உங்களில் ஏராளமானோர் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். அதற்கு எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன். அதே நேரத்தில் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிய சில தவறான, ஆதாரமற்ற தகவல்களை நான் மறுக்கிறேன்.
தடையை ஏற்படுத்தும் மருந்துகள் குறித்து, எனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை. அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை.
அது, கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்து திரிக்கப்பட்ட செய்தியாக இருக்கலாம் அல்லது காரணங்களே இல்லாமல், புனையப்பட்ட கதையாகவும் இருக்கலாம்.
நான் தடை செய்யப்பட்ட மருந்து குறித்து தெரியாமல் இருந்ததை நியாயப்படுத்தவில்லை. ஏற்கெனவே டிசம்பர் 22, 2015-ல் வந்திருந்த இ-மெயில் குறித்துக் கூறியிருக்கிறேன். அதன் முக்கியக் கருப்பொருள், "2016-ம் ஆண்டின் டென்னிஸ் ஊக்க மருந்து எதிர்ப்புத் திட்டத்தின் முக்கிய மாற்றங்கள்" என்பதாகும். அதைப்படிப்பதில் நான் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
தவறான செய்திகள்
மற்ற இடங்களில் முக்கியமாக செய்தித்தாள்களில், வலைத்தளங்களில் தவறான செய்திகளே உலவுகின்றன. டிசம்பர் 18-ம் தேதியன்று, 'வீரர் செய்திக்குறிப்பு' என்ற பெயரில் எனக்கு இ- மெயில் வந்தது. அதில் ஏராளமான பயணங்கள் குறித்த செய்திகள், வரப்போகும் போட்டிகள் குறித்த அறிவிப்புகள், தரவரிசையியல், புள்ளியியல், தகவல் பலகை அறிவிப்புகள், பிறந்த நாள் வாழ்த்துக்கள் உள்ளிட்டவை கொட்டிக்கிடந்தன. ஆமாம் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து குறித்த செய்தியும் அதில் இருந்தது!
அந்த மெயிலில் இருந்த தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து குறித்த தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும்மென்றால் முதலில் டஜன் கணக்கில் இருக்கும் தேவையில்லாத யூ.ஆர்.எல். இணைப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். அதில் 'வீரர் பகுதி' லிங்கைச் சொடுக்கி, பயனர் பெயர், கடவுச் சொல்லை உள்ளீடு செய்யவேண்டும். திறக்கும் முதல் பக்கத்தில், மூன்று டஜன்களுக்கும் மேலாக இருக்கும் வித்தியாசமான இணைப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஏராளமான தகவல்களைத் தாண்டி, "2016-ம் ஆண்டின் டென்னிஸ் ஊக்க மருந்து எதிர்ப்புத் திட்டத்தின் முக்கிய மாற்றங்கள்" என்னும் இணைப்பைச் சொடுக்க வேண்டும். அதற்குப் பின்னர், அதைத் திறந்து இரண்டு பக்கங்களைக் கடந்து, தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துகள் குறித்த புதிய தகவல்களைப் படிக்க வேண்டும். இதைத்தான் பெரும்பாலான ஊடகங்கள், எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறுகின்றன என்று நினைக்கிறேன்.
ஊக்க மருந்துத் தடை அமல்படுத்தப்பட்ட பிறகு, 2016-ன் தொடக்கத்தில் நடந்த வெவ்வேறு போட்டிகளில், வாலட் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. அந்த ஆவணத்தில், தொழில்நுட்ப ரீதியிலான ஆயிரக்கணக்கான வார்த்தைகள், சிறிய எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. அதை அவசியம் நான் படித்திருக்க வேண்டுமா? ஆமாம். ஆனால் இக்கடிதத்தோடு நான் இணைத்திருக்கும் அந்த ஆவணத்தைப் பார்த்தீர்கள் என்றால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரியும்.
திரும்பவும் சொல்கிறேன், என் செயலை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் நான் ஐந்து முறை எச்சரிக்கை செய்யப்பட்டேன் என்று கூறுவது பொய்யான கருத்து.
ஒரு கட்டுரையின் தலைப்புச் செய்தியில், 'மரியா ஷரபோவாவின் போதை மருந்துக்கான 4-6 வார இயல்பான சிகிச்சை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற பல செய்தியாளர்கள் அதையே திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள், அந்தக் கட்டுரையின் மீதியை படிக்காமல் விட்டு விட்டனர். அதில் நான் எடுத்துக் கொண்டிருந்த மருந்தின் தயாரிப்பாளர் சொன்ன விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அது, ''சிகிச்சைக்கான மருந்துகளை வருடத்துக்கு இரண்டு முறையோ, மூன்று முறையோ மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தகுந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில், நோயாளியின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டே மெல்டோனியம் மருந்தைப் பயன்படுத்த வேண்டும்'' என்பதாகும்.
அதேதான் என் விஷயத்திலும் நடந்தது. நான் தினந்தோறும் அந்த மருந்தை எடுக்கவில்லை. என்னுடைய மருத்துவரின் அறிவுரையின் பேரில், பரிந்துரைக்கப்பட்ட மிகக்குறைவான அளவிலேயே எடுத்துக்கொண்டேன்.
என்னுடைய விளையாட்டை, நான் விளையாடிய விதத்தை எண்ணிப் பெருமை கொள்கிறேன். இதுவரை நான் நேர்மையாகத்தான் இருந்திருக்கிறேன். சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக, நான் காயமடைந்ததைப் போல நடிக்கவில்லை.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன். அவர்கள் என்னுடைய மருத்துவ ஆவணங்களைப் பார்ப்பார்கள்; என்னை திரும்பவும் விளையாட அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன். எது என்னவாக இருந்தாலும், என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள், உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார் ஷரபோவா.
மெல்டோனியம் - பின்னணி
மரியா ஷரபோவா கடந்த 10 ஆண்டுகளாக மெல்டோனியம் என்ற மருந்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார், அவரது குடும்பத்தின் பரம்பரை நோயான நீரிழிவு நோய் ஷரபோவாவையும் விட்டுவைக்கவில்லை. மேலும் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவர் இந்த மருந்தை சிபாரிசு செய்துள்ளார். அது இப்போதைய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
மெல்டோனியம் என்பது நீரிழிவு மற்றும் குறை மெக்னீசியம் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படும் மருந்தாகும். கடந்த ஜனவரி 1-ம் தேதி உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம், மெல்டோனியத்தை தடை செய்தது. ஷரபோவா மெல்டோனியம் அடங்கிய மருந்தை எடுத்துக் கொள்ள தொடங்கிய போது உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் மெல்டோனியம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
26 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago