உலகக்கோப்பை டி20 தொடரை இந்திய அணி சற்றும் எதிர்பாராதவிதமாக தோல்வியில் தொடங்கியுள்ளது. தொடர் வெற்றிகளுடன் வந்த இந்திய அணிக்கு இந்தத் தோல்வி ஒரு அதிர்ச்சிப் பின்னடைவுதான்.
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தனது முன்னணி பவுலர்களான சவுதி, மெக்லினாகன், போல்ட் ஆகியோரை தேர்வு செய்யாமல், சோதி, சாண்ட்னர், நேதன் மெக்கல்லம் ஆகியோரை தேர்வு செய்தது முதலில் பார்ப்போருக்குமே ஆச்சரியமாகவே இருந்தது. அதே போல் என்ன ஸ்பின் எடுத்தாலும் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது என்று ரசிகர்கள் நம்பலாம், ஆனால் அணி வீரர்களே அப்படி நம்புவது உயர் மட்ட கிரிக்கெட்டில் சாத்தியமில்லை.
நேற்று அதுதான் இந்தியாவுக்கு நடந்தது. மேலும் இந்தப் பிட்சில் 126 ரன்கள் என்பதே கடினமான ஸ்கோராக இருக்கலாம் என்பது பற்றிய எந்த ஒரு விழிப்பும் இல்லாததாகவே இந்திய அணி ஆடியது. சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், நமக்குத்தான் வெற்றி என்று அதீத நம்பிக்கையில் இந்திய அணி ஆடியதாகவே படுகிறது.
நியூஸிலாந்து அணியின் சமீப கால ஆட்டங்கள் பற்றிய உணர்வு இந்திய அணிக்கு இருந்ததா இல்லையா என்பது பற்றி நாம் எதுவும் கூற முடியவில்லை. ஆனால் அந்த அணி மிகப்பெரிய போட்டித் தொடர்களில், குறிப்பாக உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சவாலாகவே திகழ்ந்து வந்துள்ளது என்பதை இந்திய வீரர்கள் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஷிகர் தவண் முதலில் அவர் மீது அவருக்கே இருக்கும் அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும். பிட்சை அருகிலிருந்து பார்த்து விட்டு 5-வது பந்து அதுவும் ஸ்டம்புக்கு நேராக ஸ்வீப் முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு அவர் தன்னம்பிக்கை மிகுந்த பேட்ஸ்மென் இல்லை என்பதை அவருக்கு யாராவது எடுத்துக் கூறினால் நல்லது.
அதே போல் ரோஹித் சர்மா குறைவாகவே சாதித்திருந்தாலும் பேச்சு அதிகமாகியுள்ளது. மொகமது ஆமீரைத் தடவி விட்டு அவர் ஒன்றும் பெரிய பவுலர் இல்லை, சாதாரண பவுலர் என்கிறார். சாண்ட்னர் சமீபகாலமாக நியூஸிலாந்து அணிக்கு ஒரு சக்தியாக இருந்து வருவது தெரியாமல் தடதடவென இறங்கி வந்தார், பேட்டை முன்னமேயே ஸ்ட்ரோக்குக்காக கொண்டு சென்றார் பந்து நன்றாகத் திரும்பியது. பவுன்சும் இருந்ததால் விக்கெட் கீப்பர் லுக் ரோங்கி கூட தடுமாறித்தான் பந்தைச் சேகரித்து ஸ்டம்ப்டு செய்தார், ஆனால் ரோஹித் சற்று அதிகமாகவே வெளியே வந்திருந்தார்.
பிட்சில் சுழற்பந்துகள் பயங்கரமாக திரும்பும்போது உடலுக்கு நெருக்கமாக மட்டையை வைத்து, பந்து வந்தவுடன் முறையான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடுவதுதான் சிறந்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மென்கள் இதற்கான பொறுமை அற்றவர்கள் என்பதை விட, இதற்கான உத்திகளை மறந்து விட்டனர் என்பதே சாலப்பொருந்தும், புனேயில் வேகப்பந்து வீச்சு ஆட்டக்களத்திலும் சாதாரண இலங்கையின் ஸ்விங் பவுலிங்கைக் கூட ஆடத் திராணியில்லாமல் தோல்வி தழுவினர்.
ரெய்னாவும் பிட்சின் தன்மை அறியாமல் பந்துகள் திரும்பிக் கொண்டிருக்கும் போது மட்டையை ஊருக்கு முன்னாலேயே தன் இஷ்டத்துக்குத் திருப்பி முன் விளிம்பில் பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். யுவராஜ் சிங்கும் அதே போல்தான் மெக்கல்லமின் பந்திற்கு தவறான உத்தியைக் கடைபிடித்து பந்து மெக்கல்லமே கேட்ச் ஆனது.
விராட் கோலி 27 பந்துகளுக்கு தன்னை உத்தி ரீதியாக சரியாக வைத்துக் கொண்டார், ஒரே நம்பிக்கை அவர்தான் எனும்போது லெக்ஸ்பின்னர் சோதி அவரது ஒழுங்கைக் குலைத்தார். கோலியை தனது உடலுக்கு விலகி வருமாறு ஒரு டிரைவை ஆடுமாறு செய்து, ஒரு பந்தை வீசி திருப்ப எட்ஜ் ஆனது. 39/5 என்று ஆனது இந்திய அணி. ஹர்திக் பாண்டியாவுக்கு ஒன்றும் புரியவில்லை, ரவுண்ட் த விக்கெட்டில் வீசும் போது பந்து உள்ளே வரும் என்பதைக் கூட கணிக்க முடியாமல் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ஜடேஜாவும் தனது மட்டையை முன்னமேயே பந்தைத் திருப்ப கொண்டு சென்றதால் விளிம்பில் பட்டு சோதியிடமே கேட்ச் ஆனது. அஸ்வினுக்கு சோதி வீசியது அற்புதமான பந்து ஸ்டம்ப்டு ஆனார், இவரும் நடந்து வந்து ஆட முயன்றார்.
தோனி 30 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆடி வந்த நிலையில் எதிர் முனையில் விக்கெட்டுகளைத் தூக்கி கொடுத்து சென்ற பேட்ஸ்மென்களைக் கண்டு கடுப்பாகிவிட்டார் போலும். நேதன் மெக்கல்லம்மை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்தார். நெஹ்ரா கடைசியில் அதிவேக பவுலரான மில்ன பந்துக்கு ஒதுங்கிக் கொண்டு பவுல்டு ஆனது இந்திய பேட்டிங்கின் தலைகுனிவின் குறியீடாக அமைந்தது.
முதலில் அணியை மாற்றாமல் 10, 15 போட்டிகளுக்கு ஆடுவதை தோனி மறுபரிசீலனை செய்ய வேண்டும், நிச்சயம் யுவராஜ் அல்லது ரெய்னாவுக்குப் பதில் மணீஷ் பாண்டே உள்ளே வர வேண்டும், அதே போல் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் ரத்தங்களை உள்ளே கொண்டு வர வேண்டும்.
ஏனெனில் இப்போதைக்கு இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் அதீத நம்பிக்கையில் ஆடி வருகின்றனர், இதனால் அவர்களது அணுகுமுறைகளில் திமிர் தலைதூக்குவதை உணர முடிகிறது.
அதனால்தான் அவ்வப்போது அணியிலிருந்து நீக்கி, உட்கார வைத்து சில வீரர்களுக்கு அதிர்ச்சி மருத்துவம் அளிப்பது அவசியம். இதனை கங்குலி செய்தார். சச்சின் டெண்டுல்கரையே 4-ம் நிலையில் களமிறங்க வலியுறுத்தினார். தோனி அது போன்ற ஒரு கடினமான அணுகுமுறையைக் கையாளவில்லையெனில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம்.
மொத்தத்தில் பிட்சின் தன்மையையும், நியூஸிலாந்து பவுலர்களையும் அலட்சியமாகக் கருதிய அணுகுமுறையின் தோல்வியே இது.
இனி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வேண்டும், பாகிஸ்தானை எப்போதும் வென்று விட முடியும் என்று நாம் கருத முடியாது, எனவே தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வி தழுவியுள்ளது இந்திய அணிக்கு இந்தத் தொடரில் மேலும் விஷயங்களை கடினமாக்கியுள்ளது.
மேலும் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் தட்டுத்தடுமாறி ஜெயிப்பது அல்லது தோல்வியடைவது எந்த வித கிரிக்கெட் வடிவமாக இருந்தாலும் இந்திய அணிக்கு நல்ல அறிகுறியாக இல்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago