விராட் கோலியின் கேப்டன்ஷி ராஜ்ஜியம் முடிந்தது என்று சொல்வதைவிட, தென் ஆப்பிரிக்கத் தொடரிலிருந்து ரோஹித் சர்மா சகாப்தம் தொடங்குகிறது என்று இந்திய கிரிக்கெட்டில் நடந்த மாற்றங்களைப் பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை படுதோல்விக்குப் பின் உடனடியாகவே கோலியின் கேப்டன்ஷி பதவிப் பறிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ இந்த முடிவு எடுக்கும் முன்பாக 48 மணி நேரம் அவகாசத்தை கோலிக்குக் கொடுத்த பின்பும் அவர் பதவி விலக மறுத்துவிட்டார்.
உச்ச அமைப்பான பிசிசிஐ வேறு என்ன செய்யும். அதிலும் கொல்கத்தா இளவரசர் சவுரவ் கங்குலி தலைமையில் இயங்கும்போது, இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும். 49-வது மணி நேரம் தொடங்கியபோது, கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது, கோலி நீக்கப்பட்டார்.
கோலியின் பதவி நீக்கம் குறித்து இதுவரை பிசிசிஐகூட முறைப்படி அறிவிக்கவில்லை. கோலிக்குரிய காலம் முடிந்துவிட்டது. அதனால் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அடுத்ததாக ரோஹித் சர்மாவின் காலம் என்று மிகவும் இயல்பாகக் கூறுவது போல் தேர்வுக் குழுவினர் அறிக்கை இருந்தது. இதன் மூலம் கோலியின் கேப்டன்ஷி பறிப்பை, நீக்கத்தை பிசிசிஐ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
2023-ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிவரை கேப்டனாகத் தொடர்வேன் என்ற கனவில்தான் விராட் கோலி இருந்திருக்க வேண்டும். ஒருவேளை டி20 போட்டியில் இந்திய அணி அரையிறுதி அல்லது இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றிருந்தால்கூட கோலியின் பதவிக்கு கத்தி வந்திருக்காது. ஆனால் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஏற்பட்ட மோசமான அடி, அவரின் பதவி நீக்கத்தை உறுதி செய்தது.
மகேந்திர சிங் தோனியின் பயிற்சிப் பள்ளியில் படித்து வந்ததால் கோலிக்கு எளிதாக டெஸ்ட் கேப்டன்ஷி பதவி கிடைத்தது. தோனியால் தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடிக்க முடியாத சூழல் இருந்தபோது ஒட்டுமொத்த அணிக்கும் கேப்டன் என்ற மகுடத்தை கோலிக்கு பிசிசிஐ சூட்டியது.
விராட் கோலி சக்திவாய்ந்த கேப்டனாகத்தான் வலம் வந்தார். கோலியால் அணிக்குள் எதையும் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. பயிற்சியாளர் நேர்முகத்துக்குக் கூட வராத ரவி சாஸ்திரிதான் பயிற்சியாளராக வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகளிடம் கோலி கேட்டுப் பெற்றார். பல நியாயமான கோரிக்கைகள், நியாயமற்ற கோரிக்கைகளும் கோலிக்கு நிறைவேறின.
இந்திய அணிக்குள் வெளிப்புறத்தில் வெற்றிகரமான கேப்டனாக, வீரர்களை ஊக்குவிக்கும் கேப்டனாக வலம் வந்தாலும், ஓய்வறையில் அவர் வீரர்களிடம் பெருந்தன்மையுடன் நடக்கவில்லை, நெருக்கமாக இருந்ததில்லை என்ற அதிருப்தி நிலவியது.
ஓய்வறையில் விராட் கோலியின் நடவடிக்கைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் இந்திய வீரர் ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், விராட் கோலியிடம் இருக்கும் பிரச்சினையே நம்பிக்கை சார்ந்த விஷயம்தான். தெளிவாகப் பேசுவார், ஆனால், ஒரு கேப்டனாக எதையும் தெளிவாகப் பேசமாட்டார். அதனால்தான் அவர் மரியாதையை இழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஒரு பேட்டியில், “கோலி விரைவில் கேப்டன்ஷியில் இருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம்” என்றார். கோலி கேப்டன்ஷியில் உச்சத்தில் இருந்தபோது, அவரின் மேலாண்மைத் திறன்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
அதுமட்டுமல்லாமல் கோலி கேப்டனாக இருந்தபோது அணியில் உள்ள எந்த வீரருக்கும் எந்த இடமும் உத்தரவாதம் இல்லை. இரு போட்டிகளில் ஒரு வீரர் சொதப்பிவிட்டால், தொடர்ந்து போட்டியில் இடம் கிடைக்குமா என்பது கூடத் தெரியாது. இதுபோன்று வீரர்கள் அனைவரையும் தனது பதவிக் காலத்தில் பதற்றத்தோடு கோலி வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரிஸ்ட் பவுலர் குல்தீப் யாதவைக் கையாண்ட விதமே கோலியின் மோசமான நிர்வாகத் திறனுக்கு உதாரணம். குல்தீப் யாதவின் திறமையைக் கண்டறிந்த அனில் கும்ப்ளே அவரை சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளராக உருமாற்றினார். ஆனால், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்காமல் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமிக்க கோலி காரணமாக இருந்தார்.
குல்தீப் யாதவ் மட்டுமல்ல திறமையான வீரர்கள் பலரையும் எவ்வாறு கையாள வேண்டும், பயன்படுத்த வேண்டும் எனும் சூட்சமம் கோலிக்குத் தெரியவில்லை.
ஆனால், தோனியிடம் கேப்டன்ஷி பாடம் படித்த கோலி இவ்வளவு மோசமாக கேப்டன்ஷி செய்திருக்கிறார் என்பதே வியப்பானது. தோனியின் ஓய்வறை எப்போதும் சக வீரர்களுக்காகத் திறந்தே இருக்கும். எந்த வீரரும் எந்த நேரத்திலும் வரலாம், ரூம் சர்வீஸ் ஆர்டர் செய்யலாம், ப்ளே ஸ்டேஷன் கேம் விளையாடலாம். வீரர்களிடையே தோனி இடைவெளி இல்லாமல் பழகினார், தோனி மீது சக வீரர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அந்த பந்தம்தான் தோனியைச் சிறந்த கேப்டனாக உயர்த்தியது.
ஆனால், கோலியிடம் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதிலிருந்து தன்னைப் பெரிய ஆளுமையாக நினைத்து நடக்கத் தொடங்கினார். வீரர்களிடம் இடைவெளியுடன் பழகியது நம்பிக்கையின்மையை வீரர்களிடம் அதிகப்படுத்தியது. ஆனால், சக வீரர்களிடம் எப்போதுமே அரவணைப்புடன் தோளில் கைபோட்டு அவர்களுக்கு ஏற்றாற்போல் ரோஹித் சர்மா பேசக்கூடியவர்.
ஒரு வீரர் 5 ரன்கள் அடித்தாலும், அதே வீரர் 50 ரன்கள் அடித்தாலும் தான் பழகுவதில், அந்த வீரரை நடத்துவதில் ரோஹித் சர்மா வேறுபாடு காட்டாதவர். மனதளவில் வீரர்கள் நம்பிக்கையிழந்தாலும், கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி அரவணைக்கும் தன்மை ரோஹித்திடம் உண்டு. இது கோலியிடம் இல்லை என்று கூறப்படுகிறது.
இப்போது கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்ட நிலையில் இந்த மாற்றத்தை அவர் எவ்வாறு ஏற்பார், தன்னை எவ்வாறு தகவமைத்துக்கொள்ளப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரியது. டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக கோலி தொடர்ந்து இருந்தாலும், எதிலும் கோலிக்கு நிச்சயமற்ற தன்மை நிலவுமா என்பது அவர் எதிர்வரும் போட்டிகளில் செயல்படும் விதத்தைப் பொறுத்துதான் அமையும்.
ஈகோ எனும் விஷயம் கோலியைச் சீண்டினால், ஒருநாள் போட்டிகளில் இருந்துகூட கோலி திடீரென ஓய்வை அறிவிக்கலாம். இது ஊகமாக இருந்தால்கூட, இதற்கு முன் தோனி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகி அறிவித்த சம்பவத்தையும் பார்க்கவேண்டும். ஆதலால், எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
விராட் கோலியின் கேப்டன்ஷி ராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று சொல்வதைவிட, ரோஹித் சர்மாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது என்று பார்த்தால், நிச்சயம் போட்டிகளைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago