மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய மண்ணில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்ற இதுவாகும். ஆட்டநாயகனாக மயங்க் அகர்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 எனக் கைப்பற்றியது.
4-வது நாள் ஆட்டம் தொடங்கிய 43 நிமிடங்களில் நியூஸிலாந்து அணி மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. 540 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 56.3 ஓவர்களில் 167 ரன்களில் ஆட்டமிழந்து 372 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
» வெற்றியை நோக்கி இந்திய அணி: நியூஸி. போராட்டம்: 41 ஆண்டுகள் சாதனையை முறியடித்த அஜாஸ் படேல்
ரவிச்சந்திரன் அஸ்வின் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் என மொத்தம் 42 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் சிறந்த பந்துவீச்சு இதுவாகும். இதற்கு முன் கடந்த 2002-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸி. ஜாம்பவான் ஷேன் வார்ன் 24 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்குப் பின் சிறந்த பந்துவீச்சு அஸ்வினுடையதாகும்.
அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் அஸ்வின் தனது 300-வது விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கான்பூர் டெஸ்ட்டிலே இந்திய அணி வெற்றி பெற வேண்டியது. ஆனால், கடைசியில் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வெற்றியை நழுவவிட்டது. அந்தத் தவறை இதில் செய்யாமல் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேலின் சாதனை பொறிக்கப்பட வேண்டியது. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராகவே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரின் சாதனை நினைவில் கொள்ளத்தக்கது.
கிரிக்கெட் உலகிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே, லேக்கருக்கு அடுத்தாற்போல், படேலும் இணைந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் 41 ஆண்டுகளாக இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம் வைத்திருந்த சாதனையையும் படேல் முறியடித்துவிட்டார்.
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வகையில் 1980-ம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் 106 ரன்களுக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஜாஸ் படேல் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 41 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சுழற்பந்துவீச்சாளர் என்ற வகையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஓ கீஃபே சாதனையை 70 ரன்களுக்கு 12 என்ற மைல்கல்லையும் அஜாஸ் படேல் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் பஸால் மெகமது, வேகப்பந்துவீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ், ஆலன் டேவிட்ஸன், ப்ரூஸ் ரீட், ஆலன் டொனால்ட், ஜெப் டைமைக் ஆகியோர் ஒரு டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் போட்டி முழுவதுமே சுழற்பந்துவீச்சாளர்கள் ராஜ்ஜியமாகவே இருந்தது. இரு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்களைவிட சுழற்பந்துவீச்சாளர்களே கோலோச்சினர். ஒட்டுமொத்தமாக இரு அணிகளிலும் சேர்த்து 36 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. இதில் 33 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் நிச்சயம் இந்திய அணிக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். ஆனால், அடுத்துவரும் தென் ஆப்பிரிக்கத் தொடரில், இந்திய அணியின் முக்கிய 3 பேட்ஸ்மேன்கள் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே, புஜரா மூவரும் ஃபார்மின்றித் தவிப்பது பெரிய கவலையாகும்.
ஸ்ரேயாஸ் அய்யர், ஷுப்மான் கில் இந்தத் தொடரில் தங்களின் திறமையை நிரூபித்துவிட்டனர். ஹனுமா விஹாரிக்கு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 540 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்திருந்தது.
நியூஸிலாந்து அணியில் ஹென்றி நிகோலஸ் 36 ரன்களுடனும், ரச்சின் ரவிந்திரா 2 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஆடுகளம் காலை நேரத்தில் ஈரப்பதத்துடன் இருந்ததால், அஸ்வின், ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் பந்து நன்றாக எழும்பி, சுழன்றது. இதனால் தொடக்கத்திலேயே இருவரின் பந்துவீச்சை சமாளித்து ஆட நியூஸிலாந்து வீரர்கள் சிரமப்பட்டனர்
ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் 18 ரன்னில் ரவிந்திரா, புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜெயந்த் யாதவ் வீசிய 54-வது ஓவரின் 2-வது பந்தில் ஜேமிஸன் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் சவுதி கால்காப்பில் வாங்கி டக் அவுட்டில் வெளியேறினர்.
அடுத்துவந்த சோமர்வில்லே ஒரு ரன்னில் யாதவ் பந்துவீச்சிலும், நிகோலஸ் 44 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்கள். 162 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 5 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
2-வது இன்னிங்ஸில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளையும், படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago