ஷாருக்கானின் கடைசிப் பந்தில் அபாரமான சிக்ஸர் விளாசியதால் புதுடெல்லியில் இன்று நடந்த சையது முஸ்தாக் அலி டி20 போட்டித் தொடரில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது.
முதலில் பேட் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு சையது முஸ்தாக் அலி கோப்பையில் ஒரு ரன்னில் கர்நாடகத்திடம் அடைந்த தோல்விக்குத் தமிழக அணி பழி தீர்த்துக் கொண்டது. சையத் முஸ்தாக் அலி கோப்பை வரலாற்றில் ஓர் அணி 3 முறை பட்டம் வெல்வது இதுதான் முதல் முறை. அந்தப் பெருமை தமிழக அணிக்கே சாரும்.
தமிழக அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் ஷாருக்கானின் அதிரடி ஆட்டம்தான். 6-வது வீரராகக் களமிறங்கியபோது தமிழக அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் சஞ்சய் யாதவ், ஷாருக்கான் இருந்தனர்.
கர்நாடக வீரர் தர்ஷன் வீசிய 17-வது ஓவரில் சஞ்சய் ஒரு பவுண்டரி, ஷாருக்கான் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்தனர். ஜெயின் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் சஞ்சய் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த முகமது, ஷாருக்கானுடன் சேர்ந்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.
19-வது ஓவரை பாட்டீல் வீசினார். இந்த ஓவரில் முகமது 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக்கான் சிக்ஸர், பவுண்டரியால் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. தமிழக அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஷாருக்கான், ஷாய் கிஷோர் இருந்தனர்.
20-வது ஓவரை கர்நாடக வீரர் ஜெயின் வீசினார். முதல் பந்தில் கிஷோர் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் கிஷோர் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்து வைடாக வீசப்பட்டது. மறுபடியும் வீசப்பட்ட பந்தில் ஷாருக்கான் ஒரு ரன் எடுத்தார்.
4-வது பந்தை சந்தித்த கிஷோர் ஒரு ரன்னும், 5-வது பந்தில் ஷாருக்கான் 2 ரன்னும் எடுத்தனர். கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி தமிழக அணியைப் பட்டம் வெல்ல வைத்தார் ஷாருக்கான்.
ஷாருக்கான் 15 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 33 ரன்களுடனும், ஷாய் கிஷோர் 6 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தமிழக அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர் ஹரி நிசாந்த் (23), ஜெகதீசன் (41) ரன்கள் சேர்த்தனர். நடுவரிசையில் சாய் சுதர்ஸன் (9) கேப்டன் விஜய் சங்கர் (18), சஞ்சய் யாதவ் (5), ஏமாற்றினர். 95 ரன்கள் வரை தமிழக அணி 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாகத்தான் இருந்தது. ஆனால், 16-வது ஓவரில் அடுத்தடுத்த பந்தில் ஜெகதீசன், விஜய் சங்கர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பெரும் நெருக்கடிக்கு ஆளானது.
ஆனால், ஷாருக்கான் களமிறங்கியபின் அவர் அடித்த சிக்ஸர், பவுண்டரியால் ஓரளவுக்கு நம்பிக்கை கிடைத்தது. ஆனால், ஷாருக்கானுக்கு உறுதியாக சஞ்சய் யாதவ், முகமது இருவரும் ஒத்துழைக்காமல் விரைவாக ஆட்டமிழந்தனர். நம்பிக்கையுடன் ஆடிய ஷாருக்கான் கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடித்த சிக்ஸர் தமிழகத்தை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தது.
தமிழக அணியில் பந்துவீச்சில் நடராஜன் காயத்துக்குப் பின் வந்தாலும் ரன்களை வாரி வழங்கினார். 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஷாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வகையில் முருகன் அஸ்வின் கட்டுக்கோப்பாக வீசினாலும் விக்கெட் எடுக்கவில்லை.
சந்தீப் வாரியர் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும், சஞ்சய் யாதவ் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
கர்நாடக அணியைப் பொறுத்தவரை அச்சுறுத்தலாக இருந்த கேப்டன் மணிஷ் பாண்டே (13) கருண் நாயர் (18) ஷரத் (16), ரோஹன் (0) என சொற்ப ரன்களில் வீழ்ந்தது தமிழகத்துக்கு சாதகமாக அமைந்தது. ஆனால், நடுவரிசையில் பிரவிண் துபே (33), மனோகர் (46) இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago