டி20 தொடரை வென்றது இந்தியா: நியூஸிலாந்து ஒயி்ட்வாஷ்: டாஸ் ராஜா ரோஹித்; அக்ஸர் அசத்தல்

By க.போத்திராஜ்


ரோஹித் சர்மாவின் அரைசதம், அக்ஸர் படேலின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால் கொல்கத்தாவில் நேற்று நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 17.2ஓவர்களில் 111 ரன்களில் ஆட்டமிழந்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 2-வது டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றிய பெருமையைப் பெறுகிறது. கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை வென்றநிலையில் அடுத்த நடந்த இந்தத் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.

இந்திய அணிக்கு முழுநேரக் கேப்டனாகப் பதவி ஏற்றுள்ள ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோரின் வழிகாட்டலுக்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணிக்கு இந்தத் தொடரில் வென்றது அடுத்துவரும் டெஸ்ட் தொடரையும், அதன்பின் தென் ஆப்பிரி்க்கத் தொடரையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.

ஆனால்,அதேநேரம், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி களைப்படைந்த நியூஸிலாந்து அணியில் பல முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் பலவீனமான அணிதான் களமிறங்கியது. நியூஸிலாந்து வீரர்களிடையேயும் ஒருவிதமான சோர்வு காணப்பட்டது. எந்த போட்டியிலும் வெற்றியை எதிரணிக்கு எளிதாக வழங்கிவிடாத நியூஸிலாந்து அணி, இந்த போட்டியில் மோசமாக ஆடியது வீரர்களின் மனச்சோர்வைக் காட்டுகிறது.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். டி20 போட்டியில் அக்ஸர் படேலின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணி சில பாஸிட்டிவ் விஷயங்களை அடையாளம் கண்டது. டி20 ஃபார்மெட்டுக்கு நீண்ட காலத்துக்குப்பின் அஸ்வின், புவனேஷ்வர் குமார் கொண்டுவரப்பட்டு அவர்களும் சிறப்பாகப் பந்துவீசினார்கள்.

வெங்கடேஷ் அய்யர் நேற்று 3 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்திய அணிக்கு டி20 அல்லது ஒருநாள் போட்டியில் 6-வது பந்துவீச்சாளர் வாய்ப்புக்கும் வீரர்அடையாளம் காணப்பட்டுள்ளார். டாப்ஆர்டர் மற்றும் நடுவரிசையில் களமிறங்கி விளையாடக்கூடிய இளம் வீரரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹர்சல் படேலுக்கு நல்ல அறிமுகம் கடந்த போட்டியில் கிடைத்தாலும் இன்னும் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் அளவில் நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீசிவில்லை. ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான் இருவருக்கும் இந்தத் தொடரில் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் ரோஹித், ராகுல் தலைமையில் நிச்சயம் பயன்படுத்தப்படுவார்கள்.

அணியில் ஒரே மாதிரியான வீரர்களை பயன்படுத்தி, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்த கோலியின் கேப்டன்ஷியில் இருந்த சலிப்புத்தன்மை ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் இல்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது, சரியாக செயல்படாத வீரர்களை உடனடியாக நீக்காமல் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி ஊக்கப்படுத்துவது, சரியான நேரத்தில் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது போன்ற சிறந்த அம்சங்கள் கோலியைவிட ரோஹித்திடம் தூக்கலாகவே தென்படுகிறது.

அதற்கு சில உதாரணங்கள் அஸ்வின், அக்ஸர், ஹர்சல் படேல், வெங்கடேஷை எந்தெந்த நேரத்தில் ரோஹித் சர்மா பயன்படுத்தினார் என்பதிலேயே அவரின் திறமையை ஒளிர்கிறது.
அதுமட்டுமல்லாமல் கேப்டனாக இருந்தாலும், அல்லது சாதாரண வீரராக இருந்தாலும் என்னுடைய பேட்டிங்கில் மாற்றம் இருக்காது என்பதை ரோஹித்சர்மா நேற்றும் நிரூபித்தார். கடந்த 6 சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா, 74, 30, 56, 48,55 என ரன்கள் சேர்த்துள்ளார். 6 போட்டிகளில் 3 அரைசதங்களை ரோஹித் சர்மா அடித்துள்ளார்.

இஷான் கிஷன், ரோஹித் சர்மா நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரின் அதிரடியாக தொடக்கத்திலிருந்தே 10 ரன்ரேட்டில் பறந்தது. சான்ட்னர் பந்துவீச்சில் 29 ரன்னில் இஷான்கிஷன் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 69 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த சூர்யகுமார்(0) ரிஷப் பந்த்(4) என விரைவாக ஆட்டமிழந்தனர்.

நடுவரிசையின் பலத்தை பரிசோதிக்க இந்த ஆட்டத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் வந்து, ரோஹி்த்துடன் சேர்ந்தார். ஸ்ரேயாஸ் நிதானமாக ஆட ரோஹித் சர்மா வழக்கம்போல் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி 27 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி 11 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

ரோஹித் சர்மா 56 ரன்கள்(3 சிக்ஸர், 5 பவுண்டரி) சேர்த்தநிலையில் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். வெங்கடேஷ்(20), அதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் (25) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரிசை வீரர்களான ஹர்சல் படேல்(18), தீபக் சஹர்(21) அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் பாதுகாப்பான நிலைக்குச் சென்றது. அதிலும் தீபக் சஹர் கடைசி ஓவரில் அடித்த 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்கள் சேர்த்தார்.

185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. கப்தில், மிட்ஷெல் அதிரடியாகத் தொடங்கினர். வழக்கம் போல் கப்தில் பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார். ரன்வேகத்தைப் பார்த்த ரோஹித் சர்மா 3-வது ஓவரிலேயே அக்ஸர் படேலுக்கு வாய்ப்பளித்தார். அதற்கு பலன் கிடைத்தது போல் முதல் பந்தில் மிட்ஷெல்(5) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சாப்மேன் இறங்கி அடிக்க முற்பட்டு ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அக்ஸர் படேலின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் கிடைத்தது. அடுத்து வந்த பிலிப்ஸ் டக்அவுட்டில் அக்ஸரின் 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த நடுவரிசை, கடைசி வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.

டிம் ஷீபெர்ட்(17), நீஷம்(3), சான்ட்னர்(2), மில்னே(7), சோதி(9), பெர்குஷன்(14) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால், விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதிரடியாக ஆடிய கப்தில் 33 பந்துகளில் அரைசதம் அடித்து, 51 பந்துகளில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை அக்ஸர் படேல், வெங்கடேஷ், புவனேஷ் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். சஹல், சஹர் இருவருமே இன்னும் ரன்களை வாரி வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்