சென்னையிடமும், தமிழகத்திடமும் நிறைய கற்றுக் கொண்டேன்; என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான்: தோனி உறுதி

By செய்திப்பிரிவு

2022ம் ஆண்டிலோ அல்லது 5 ஆண்டுகளுக்குப்பிறகோ எனக்குத் தெரியாது, என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான் நடக்கும் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி வென்றது. இந்த வெற்றி விழாக் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளர் என்.ஸ்ரீனிவாசன், சிஎஸ்கே கேப்டன் தோனி, முன்னாள் கேப்டன் கபில் தேவ், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் வருகின்றன, அணிகள் கலைக்கப்பட்டு புதிய ஏலமும் நடக்க இருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் 2 உள்நாட்டு வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே தக்கவைக்க முடியும். இதனால் சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தோனியும் இதுவரை தெளிவான பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.

ஆனால், தனது கடைசி டி20 போட்டி சென்னையில்தான் இருக்கும், சென்னையில் விளையாடிவிட்டுதான் கடைசி போட்டியிலிருந்து, சென்னை ரசிகர்களிடம் இருந்து விடைபெறுவேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு நேற்று சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளிக்கும் வகையில் அவர் பேசியதாவது:

என்னுடைய கிரிக்கெட்டை நான் எப்போதும் திட்மிட்டுத்தான் விளையாடுகிறேன். என்னுடைய கடைசி ஒருநாள் போட்டி சொந்த நகரான ராஞ்சியில் இருந்தது, அதேபோல என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் இருக்கும் என நம்புகிறேன்.

என்னுடைய டி20 கிரிக்கெட் வாழ்க்கை சென்னையில்தான் முடிய வேண்டும், சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான் முடிய வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த ஆண்டாக இருந்தாலும் சரி அல்லது இன்னும் 5 ஆண்டுகளுக்குப்பின் இருந்தாலும் சரி என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான் இருக்கும்.

சென்னை ரசிகர்கள் எப்போதும் முதிர்ச்சியை வெளிப்படுத்தக்கூடியவர்கள். சிஎஸ்கே வீரர்கள் ஏலத்தில் வேறு அணிக்குச் சென்றாலும் அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். சேப்பாக்கத்தில் நாங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் அதிக அளவில் வந்து எங்களுக்கு ஏகோபித்த ஆதரவு அளித்தார்கள்.

சென்னையில் விளையாடினாலும், இந்தியாவின் எந்த நகரிலும் சரி வெளிநாடுகளிலும் சரி சென்னை ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். பெங்களூரு, ஜோகன்னஸ்பர்க், துபாய் எங்கு நாங்கள் பங்கேற்றாலும் ரசிகர்கள் ஆதரவு அளித்தார்கள். சில பிரச்சினைகளால் சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் விளையாடாமல் இருந்தபோதுகூட, சமூக ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்ட அணி சிஎஸ்கே அணிதான்.

நம்முடைய அணிதான் சிறப்பாக விளையாட வேண்டும், மற்ற அணிகள் சிறப்பாக விளையாடக்கூடாது என்று ஏராளமான முறை, நமக்கு ஒரு மனநிலை இருந்திருக்கும். ஆனால், சென்னை ரசிகர்களுக்கு அந்தமனநிலை இல்லை.

மும்பைஇந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதெல்லாம் விளையாடினாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் அவருக்கு சிறந்த வரவேற்பை அளித்தனர். அதுதான் அன்பு, கிரிக்கெட்டை புரி்ந்து கொள்ளும் உணர்வு, சென்னை ரசிகர்களுக்கு அது அதிகமாகவே இருக்கு, குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமாக இருந்தது, முதல்முறையாக சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்லாமல் திரும்பியது. ஆனால் அனைத்து வீரர்களையும் ஊக்கப்படுத்தி, ஒருங்கிணைத்து, அடுத்த சீசனுக்குத் தயாராகினோம். 2021ம் ஆண்டு சீசனில் வலுவாகத் திரும்பி வருவோம் என சொல்லிச் சென்றோம் அதேபோல வந்தோம்.

அனைத்து சக கிரிக்கெட் வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும், பிசிசிஐ நிர்வாகிகளுக்கும், ஐபிஎல் நிர்வாகிகளுக்கும் நன்றி செலுத்தவும், கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்கும் நன்றிகூறவும் இது சிறந்த மேடையாகக் கருதுகிறேன்.

கிரிக்கெட் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. இருந்தபோதிலும் நாம் கிரிக்கெட் விளையாடி தொடர்ந்து நாம் இங்கு நிற்கிறோம். சென்னையில் நான் மறக்க முடியாத நிகழ்வு என்பது, சென்னையில்தான் டெஸ்ட்போட்டியில் அறிமுகமாகினேன். ஆனால் சிஎஸ்கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்படுவேன் என ஒருபோதும் நினைத்தது இல்லை. ஐபிஎல் ஏலத்தில் என்னை தேர்ந்தெடுத்து சென்னையின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.

நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கிரிக்கெட்டை எவ்வாறு மதிக்க வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை சென்னையும், தமிழகமும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது என நம்புகிறேன்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்