உ.கோ.டி20: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது நியூஸிலாந்து

By இரா.முத்துக்குமார்

மொஹாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஷர்ஜீல் கானின் பயங்கர அதிரடித் தொடக்கத்திற்குப் பிறகு பாகிஸ்தானால் அந்த உத்வேகத்தை தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல முடியவில்லை, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது.

இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி 5.1 ஓவர்களில் பவுண்டரி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. கிரீஸில் சர்பராஸ் அகமட், ஷோயப் மாலிக் இருந்தும் இருவராலும் ஒரு பவுண்டரியைக் கூட அடிக்க முடியவில்லை. 15-வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 123/3 என்று இருந்தது 30 பந்துகளில் 58 ரன்கள், அடிக்க முடியாத ஸ்கோர் அல்ல.

ஆனால் 16-வது ஓவரின் முதல் பந்தில், 9 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய ஷாகித் அப்ரிடி, ஐ.எஸ்.சோதியின் பந்தை லாங் ஆஃபில் தூக்கி அடிக்க பவுண்டரி அருகே சிக்ஸிற்குச் சென்ற பந்தை ஆண்டர்சன் மிகச்சரியாக கணித்து எம்பி கையை உயர்த்தி அதிர்ச்சியளிக்கும் கேட்சை பிடிக்க பாகிஸ்தானின் விதி அங்கிருந்து முடிந்தது.

உமர் அக்மல் 26 பந்துகள் நின்று 24 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது என்பதோடு ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இவரது ஆட்டம் பாகிஸ்தான் தோல்விக்கு முக்கியப் பங்களிப்பு செய்தது என்றால் அது மிகையாகாது.

கடைசியில் 24 ரன்களில் அவர் மில்னவின் புல்டாஸை லாங் ஆனில் குறிபார்த்து கப்தில் கையில் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஷோயப் மாலிக், சர்பராஸ் அகமட் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் தோல்வி, அதுவும் 5 ஓவர்களில் 61/0 என்ற நிலையிலிருந்து கோட்டை விட்டது பாகிஸ்தான்.

தொடக்க ஓவரை இடது கை ஸ்பின்னர் சாண்ட்னரிடம், வில்லியம்சன் கொடுக்க ஷர்ஜீல் கான் தைரியமாக ஆடி 3 பவுண்டரிகளுடன் முதல் ஓவரில் 15 ரன்களை விளாசினார். பிறகு மில்ன ஓவரில் பிளிக் மற்றும் ஒரு புல் ஷாட்டில் இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் விளாசினார்.

4-வது ஓவரை மெக்லினாகன் வீச, ஷர்ஜீல் கான் சற்றும் எதிர்பாராத விதமாக கெயில் பாணியில் ஆடத் தொடங்கினார். ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர்லெக்கில் சக்தி வாய்ந்த புல் ஆடி பவுண்டரி அடித்தார், பிறகு ஸ்லோயர் ஒன் பந்தும் மிட்விக்கெட்டில் பவுண்டரிக்கு பறந்தது. பிறகு சரியாக அமையாத பவுன்சர் ஒன்றை பைன்லெக்கில் பவுண்டரி அடித்தார், கடைசியில் ஒரு பிளிக் ஷாட்டில் மிட்விக்கெட்டில் அபாரமான சிக்சரையும் அடிக்க 18 ரன்கள் மெக்லினாகன் ஓவரில் எடுக்கப்பட 4 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 51/0 என்று அதிரடி தொடக்கம் கண்டது. டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் எடுத்த அதிவேக முதல் 50 ரன்கள் ஆகும் இது.

இந்நிலையில் 25 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து அச்சுறுத்திய ஷர்ஜீல் கான், மில்ன பந்தில் ஷாட் சரியாகச் சிக்காமல் ஆஃப் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார். காலித் லதீப் 3 ரன்கள் எடுத்து நெருக்கடி தாங்க முடியாமல் மேலேறி வந்து சாண்ட்னரை அடிக்க முயன்று வெளியேறினார். 4 ஓவர்களில் 51/0 என்ற நிலையிலிருந்து பாகிஸ்தான் 10 ஓவர்களில் 89/2 என்று இருந்தது, ஆனாலும் இதுவே நல்ல நிலைதான்.

ஆனால் சோதி, சாண்ட்னர் இறுக்கிப் பிடிக்க பவுண்டரிகள் வரத்து குறைந்தது, இந்நிலையில்தான் அகமத் ஷெசாத் 30 ரன்களில் சாண்ட்னரிடம் அவுட் ஆகி வெளியேறினார். அப்ரீடி களமிறங்கி சாண்ட்னரை ஒரு பவுண்டரியும் சோதியை ஒரு சிக்சரும் அடித்தார். அப்போதுதான் உமர் அக்மல் தடவல் தொடங்கியது இதனால் அப்ரீடியின் டென்ஷன் அதிகமாகி அவர் 19 ரன்களில் தூக்கி அடித்து ஆண்டர்சனின் அற்புத கேட்சுக்கு வெளியேற, உமர் அக்மலின் வேதனையும் உடனேயே முடிவுக்கு வர பாகிஸ்தான் தோல்வி கண்டது. 158/5 என்று பாகிஸ்தான் முடிய, சாண்ட்னர், மில்ன தலா 2 விக்கெட்டுகளையும் சோதி மீண்டும் சிக்கனம் காட்டி 25 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மார்டின் கப்தில் அதிரடியில் 180 ரன்கள் குவித்த நியூஸிலாந்து:

மொகமது ஆமீரின் முதல் ஓவரில் கொஞ்சம் தடுமாறிய மார்டின் கப்தில், 7 அடி உயர மொகமது இர்பான் வந்தவுடன் மேலேறி வந்து சுத்தமாக நெட் பவுலர் போல் தூக்கி லாங் ஆனில் சிக்ஸ் அடித்ததும் பாகிஸ்தான் மிரண்டே போனது. வழக்கம் போல் லெக் திசையில் நகர்ந்து கொண்டு அவர் வெளுத்துக் கட்ட லாங் ஆன், லாங் ஆஃப் திசையில் அவர் 30-35 ரன்களை எடுத்தார், மூன்று சிக்சர்களும் இப்பகுதியில்தான். 48 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் அவர் 80 ரன்கள் விளாசினார், இந்த இன்னிங்ஸ் சற்று வித்தியாசத்தை ஏற்படுத்தியது,

ஆனால் இடையில் ஷாகித் அப்ரிடி பந்தில் பிளம்ப் ஆக வாங்கினார், நடுவர் நாட் அவுட் என்று கப்திலுக்குச் சாதகம் செய்தார்.

கொலின் மன்ரோ ஒரேயடியாக எல்லா பவுலர்களையும் அடிக்க ஆசைப்படுகிறார், அப்படித்தான் இன்று ரிவர்ஸ் ஸ்வீப்பில் அப்ரீடியிடம் அவுட் ஆனார். வில்லியம்ன்சன் 17 ரன்களில் இர்பான் பந்தை கவர் திசையில் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆண்டர்சன் 21 ரன்களையும் ராஸ் டெய்லர் 23 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 36 ரன்களையும், லுக் ரோங்கி 11 ரன்களையும் எடுக்க நியூஸிலாந்து 180 ரன்களை எட்டியது. ஆமிர், அப்ரிடி, இர்பான் ஆகியோர் ஓவருக்கு 10 ரன்கள் சராசரியில் விளாசப்பட்டனர். மொகமது சமிதான் மீண்டும் அபாரமாக வீசி 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக மார்டின் கப்தில் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்