ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகுகிறார்?- ரவி சாஸ்திரி சூசகம்

By செய்திப்பிரிவு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விரைவில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிவிடுவார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் தொடங்கும் முன்பே கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை கோலி அறிவித்துவிட்டார். மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளிடம் ஏற்பட்ட தோல்வி கோலியிடம் கேப்டன்ஷி மீது பெரிய கேள்வியை எழுப்பியது. ஏற்கெனவே டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் கோலி விரைவில் இருந்து ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்தும் விலகலாம் எனத் தகவல் வெளியானது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் நியூஸிலாந்து தொடருக்கு இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி அடுத்தடுத்து மாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''விராட் கோலி தலைமையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன்னாக இருந்தது. ஆதலால், கோலி தொடரந்து எதிர்காலத்தில் தனது பேட்டிங்கிலும், டெஸ்ட் போட்டி கேப்டன்ஷியில் மட்டும் கவனம் செலுத்தக் கூடும்.

அவ்வாறு அவர் முடிவெடுத்தால் விரைவில் ஒருநாள் அணி கேப்டன்ஷி பதவியிலிருந்து விலகலாம். இது உடனடியாக நடக்குமா என எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் கூட நடக்கலாம். கோலி தனது மனது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கலாம்.

கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகும் முதல் வீரர் அல்ல. இதற்கு முன் பல ஜாம்பவான்கள் கேப்டன் பதவியிலிருந்து விலகி பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போயிருக்கிறார்கள். ஆதலால், ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகுவதில் சர்ச்சையில்லை”.

இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பதவியேற்ற விராட் கோலி, 2017-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றார். டி20 போட்டிகளில் 50 போட்டிகளுக்கு அணியை வழிநடத்திச் சென்ற கோலி, தோனிக்கு அடுத்து அதிகமாக கேப்டன்ஷி செய்த வீரர் என்ற பெருமையும் உண்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE