அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நாளை (செவ்வாய்) நாக்பூரில் இந்தியா-நியூஸிலாந்து போட்டியுடன் தொடங்குகிறது.
2007 உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தனது உச்சகட்ட ஃபார்மில் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐசிசி டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியிடம் தோல்வியடையாத ஒரு டெஸ்ட் விளையாடும் அணி உள்ளதென்றால் அது நியூஸிலாந்துதான்.
வாண்டரர்ஸ் மைதனத்தில் 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு நியூஸிலாந்து நிர்ணயித்த இலக்கு 190. 2009-ல் வெலிங்டனில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த இலக்கான 149 ரன்களை துரத்தி வெற்றி கண்டது. 2012-ல் சென்னையில் நடைபெற்ற டி20 போட்டியில் நியூஸிலாந்து இந்திய அணிக்கு நிர்ணயித்த இலக்கு 168. ஆனால் இந்திய அணி 166/4 என்று நெருக்கமாக வந்து தோற்றது.
2007-ம் ஆண்டு மே.இ.தீவுகளில் நடைபெற்ற 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறி கடும் பாதிப்புக்குள்ளான அணி அதன் பிறகு கடுமையாக உழைத்து அதற்குப் பிறகான ஒருநாள் போட்டிகளில் குறிப்பாக அயல்நாட்டில் வென்று ஓரளவு ஸ்திரப்படுத்திக் கொண்ட நிலையில் முதல் டி20 உலகக்கோப்பை இளம் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் அப்போது கோப்பையை இந்தியா வெல்லும் என்று ஒருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. இளம் அணியைக் கொண்டு தோனி அதனை சாதித்தார்.
2010-லும் இங்கிலாந்து வெல்லும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல்தான் மே.இ.தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் வென்ற போதும் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை, எனவே இந்த டி20 வடிவம் ஓரிரு பந்துகளில் அணியின் அதிர்ஷ்டங்களை மாற்றவல்லது.
அந்த வகையில் இந்த உலகக்கோப்பை ஃபா டு பிளெஸ்ஸிஸ் கூறுவது போல், “அனைத்து அணிகளுக்குமே வாய்ப்பு உள்ள ஒரு திறந்த டி20 உலகக்கோப்பை தொடர்” ஆகும்.
தோனியும், டி20 கிரிக்கெட்டில் அணிகளுக்கு இடையிலான இடைவெளியை பெரிதாக பார்க்க முடியாது என்று தெளிவுபட கூறியுள்ளார். ஏனெனில் 2007 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா தோற்கவில்லையா?
எனவே இந்த உலகக்கோப்பை தொடர் முழுதும் சுவாரசியம் மிகுந்த திருப்பங்களைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
மெக்கல்லம் வழியில் நியூஸிலாந்து:
டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எந்த வடிவமாக இருந்தாலும் அதில் சிறப்பாக ஆட, எதிரணியினரை அச்சுறுத்த சிறந்த வழி ‘மெக்கல்லம் வழியே’ என்று நியூஸிலாந்து அணி முடிவெடுத்து ஆடி வருகின்றனர். மார்டின் கப்தில் (ஐபிஎல் ஏலத்தில் சீண்டப்படாதவர்), கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கொலின் மன்ரோ, கோரி ஆண்டர்சன், கிராண்ட் எலியட், ஹென்றி நிகோல்ஸ், லூக் ரோங்கி, சாண்ட்னர், டிம் சவுதி என்று மிக நீண்ட அதிரடி பேட்டிங் வரிசை கொண்டது.
அந்த அணியின் சமீபத்திய தாரக மந்திரம், என்ன சூழ்நிலையாக இருந்தாலும் அதிரடி வழிமுறைகளை விட்டுவிடக் கூடாது என்பதாகவே உள்ளது. இது டி20 மட்டுமல்ல, டெஸ்ட், ஒருநாள் என்று அந்த அணி கடைபிடித்து வருகிறது, தோல்வியைக் கண்டும் அஞ்சுவதில்லை, அணுகுமுறையே முக்கியம் முடிவு முக்கியமல்ல என்று ஆடும் எந்த ஒரு அணியும் மிக மிக அபாயகரமான அணியாகும். அந்த வகையில் நியூஸிலாந்து இந்திய அணிக்கு ஒரு தொடக்க சவாலாகும், சோதனையாகும்.
பவுலிங்கில் டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர், மெக்லினாகன், கோரி ஆண்டர்சன், அதிவேக ஆடம் மில்ன என்று ஆல்ரவுண்ட் திறமை வாய்ந்ததாக இருக்கிறது. இலங்கைக்கு எதிராக (226) நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் அதிரடி காட்டி அச்சுறுத்தினர், ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக மொயீன் அலி (1/30), அடில் ரஷீத் (3/15) ஆகிய ஸ்பின்னர்களிடம் தடுமாறினர். எனவே இந்தியாவுக்கு இதுதான் சரியான இடம். ஜடேஜா, அஸ்வின் ஆகியோரை தோனி எவ்வளவு சிறப்பாக பயன்படுத்துகிறாரோ அந்த அளவுக்கு வெற்றி சாத்தியம் இந்திய அணிக்கு உள்ளது.
இன்னொரு சாதகம் இந்திய அணி சார்பாக உள்ளது என்னவெனில் 2014க்குப் பிறகு ஆசிய மண்ணில் நியூஸிலாந்து ஆடவில்லை. எனவே ஸ்பின் மற்றும் நியூஸிலாந்து அணியின் தயாரிப்பின்மை ஆகியவை இந்திய அணிக்குச் சாதகமாக இருப்பதோடு, இந்திய அணி இந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக 11 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது, ஆசியக் கோப்பையையும் வென்று வலுவாக உள்ளது.
பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவுகளை எளிதில் வீழ்த்திய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை அருகில் வந்து அச்சுறுத்தி தோற்றது. கிறிஸ் மோரிஸ் தோனியின் அந்த பெரிய ஷாட்டை ஆட விடாமல் செய்தார். ஆனால் அந்தப் போட்டியும் அறிவுறுத்துவது என்னவெனில் எவ்வளவு பெரிய இலக்கிற்கும் தற்போதைய இந்திய அணி அஞ்சாது என்பதே. தோனி கூறுவது போல் இப்போதைய இந்திய அணி எந்த ஒரு அணியையும் எங்கு வேண்டுமானாலும் வீழ்த்தும் திறமை கொண்டது.
ஆனாலும் அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா 4 ஓவர்களில் 51 ரன்களை கொடுத்தது சற்றே கவலையளிக்கக் கூடியதாகும் அணித் தேர்வில் மீண்டும் சோடை போய் விடக்கூடாது, மொகமது ஷமியின் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாக ஆஷிஷ் நெஹ்ராவை கைவிட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
ஏனெனில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மொகமது ஷமி, அணியில் தன் இடத்தைத் தக்க வைக்க கூடுதல் முயற்சிகளில் ஈடுபடுவது அணிக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம், மாறாக அனுபவமிக்க ஆஷிஷ் நெஹ்ரா, தொடக்க ஓவர்களில் பெரிய ஹிட்டர்கள் விக்கெட்டுகளை நமக்கு சமீபகாலங்களாக வீழ்த்திக் காண்பித்து வருகிறார். இந்தியா பெற்ற இந்த 10 வெற்றிகளில் ஆஷிஷ் நெஹ்ராவின் பங்களிப்பை மொகமது ஷமிக்காக விட்டுக் கொடுக்கும் முடிவை எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.
தோனி அருமையாக கீப்பிங் செய்து வருகிறார், அது இந்தத் தொடரில் ஒரு முக்கிய பலமாக இந்திய அணிக்கு உள்ளது. அதே போல் கேப்டன்சியில் ஒன்று அஸ்வினை தொடக்கத்தில் வீசச் செய்வது இல்லையேல் 12-வது ஓவர் கொண்டு வருவது என்ற இரண்டு துருவ முரண் கையாளுதலை விடுத்து ஒரு விக்கெட் விழுந்தவுடனேயே அஸ்வினை கொண்டு வந்து எதிரணியினரை நசுக்க வேண்டும். அஸ்வினை ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும், அதாவது அஸ்வினிக்கு இன்னும் ஓவர் உள்ளது என்ற அச்சத்தை எதிரணியினர் எப்போதும் கொள்ளுமாறு அவரை தோனி பயன்படுத்துவது நலம். அதே போல் பும்ரா அடிவாங்கினால் அவரை உடனே கட் செய்து தாக்குதலிலிருந்து காப்பதும் அவசியம். ஏனெனில் அவரது தன்னம்பிக்கை இந்தத் தொடரில் மிக முக்கியமானது.
இலங்கை அணி ஒருகாலத்தில் வெற்றி தோல்வியைக் கண்டு அஞ்சாமல் ஆக்ரோஷமாக ஆடி உலக அணிகளை அச்சுறுத்திய வழியில் தற்போது நியூசிலாந்து ஆடி வருகிறது. இத்தகைய மனநிலை கொண்ட அணியை வீழ்த்துவது கடினமே. ஆனால் இந்த மனநிலையே அந்த அணிக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தவல்லது.
அதாவது தோனி எதிரணியினரின் பலத்தில் புகுந்து விளையாடப் போகிறாரா? அல்லது அதன் பலவீனத்தில் புகுந்து விளையாடப் போகிறாரா என்பதே ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago