2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு இந்த அளவுக்கு மோசமானதாக இருக்கும் என எந்த இந்திய ரசிகரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
அதீதமான நம்பிக்கை, நல்ல ஃபார்ம், ஐபிஎல் போட்டிகள் என நல்ல நிலைமையில்தான் உலகக் கோப்பையில் கோலிப் படை தடம்பதித்தது. ஆனால், சுவற்றில் அடித்த பந்துபோல், சென்ற வேகத்திலேயே சூப்பர்-12 சுற்றோடு வெளியேறி இந்திய அணி மூட்டை முடிச்சுகளுடன் தாயகம் புறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு ஐசிசி 50 ஓவர்கள் உலகக் கோப்பையில் இதுபோன்று மோசமான தோல்வியைச்சந்தித்து, முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறி, ரசிகர்களின் கடுமையான அதிருப்தியை வாங்கிக்கட்டிக் கொண்டது. அதன்பின் 14 ஆண்டுகளுக்குப்பின் இந்த முறை மிகமோசமான தோல்வியைச் சந்தித்து முதல் சுற்றிலேயே கோலிப்படை வெளியேறுகிறது.
டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து அணிகளை இந்திய அணி வென்றுவி்ட்டதே எவ்வாறு மோசமான தோல்வி என்று சொல்ல முடியும் என்று கேட்பது புரிகிறது.
இந்த 3 அணிகளையும் வென்றுவிட்டால் அரையிறுதிக்குள் செல்லலாம், என்றால், இந்திய அணியின் முதல் இரு தோல்வியை மோசமானது என்று கூறாமல் இருக்கலாம்.
ஆனால், இந்திய அணியின் உலகக் கோப்பை தலைவிதியை நிர்ணயித்ததே பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிதானே. அந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் செயல்பாட்டை எவ்வாறு மோசமான தோல்வி என்று கூறாமல் இருக்க முடியும்.
பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டில் தோல்வி, நியூஸிலாந்துக்கு எதிராக கேப்டன் கோலி முதல் 11 வீரர்களும் நம்பிக்கையிழந்து களத்தில் நின்று தோற்று வெளியேறியதை யாரும் மறக்க முடியாது.
இந்த இரு தோல்விகளுக்குப்பின்பும், மற்ற 3 கத்துக்குட்டி அணிகளை வென்றால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும் என்று ஆறுதல் வார்த்தை திணிக்கப்பட்டது.
அதிலும் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இந்திய அணியிடம் இல்லை ஆப்கானிஸ்தானிடம்தான் இருக்கிறது என்று கூறப்பட்டது. எவ்வளவு கொடுமையானது….
திறமையான வீரர்களைக் கொண்ட இந்திய அணியின், அரையிறுதி தலைவிதியை நிர்ணயிப்பது வேறு இரு அணிகளின் வெற்றி, தோல்விதான் என்று சொல்வது இந்திய வீரர்களின் திறமையை இதைவிட மோசமாக சித்தரிக்க முடியாது.
ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணியை துவைத்து எடுத்து ரன்ரேட்டை இந்திய அணி உயர்த்திக்கொண்டு தயாரானது. அனைவரின் எதிர்பார்ப்பும் ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து ஆட்டத்தை நோக்கி இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள், இன்று ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு பிரார்த்தனை செய்தார்கள்.
எதிர்பார்ப்புடன் போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டில் அபாரமாக வென்று நியூஸிலாந்து அணியை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. அரையிறுதியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்து அணியும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.
இந்திய அணிக்கு நாளை நமிபியாவுடன் கடைசி ஆட்டம் இருக்கிறது. இதில் இந்திய வென்றாலும், தோற்றாலும் அது எந்தவிதத்திலும் பாதிக்காது. இளம் வீரர்கள், ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி ஃபார்மில் இருந்தனர், அப்படி இருந்தும் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் . விரிவான அலசல் இதோ…..
அதீதமான நம்பிக்கை
இந்திய அணி வீரர்கள் உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்தே அதீதமான நம்பிக்கையுடன் காணப்பட்டதும் தோல்விக்கு முக்கியக் காரணம். அதீதமான நம்பிக்கை வைத்தது தவறா என்று கேட்கலாம், தவறில்லை.
இந்த நம்பிக்கையோடு எதிரணியின் திறமையையும் மதித்திருக்க வேண்டும், சரியாகக் கணித்திருக்க வேண்டும். இந்த இரு அம்சங்களையும் கவனிக்க இந்திய அணி தவறிவிட்டது. பயிற்சி ஆட்டத்தில் வென்றுவிட்டோம், ஐபிஎல் தொடரில் விளையாடி ஃபார்மில் இருக்கிறோம் என்ற மிதப்புதான் பிளைப்பைக் கெடுத்தது. பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட வைத்தது.
டாஸ் தோல்வி
இந்திய அணி கேப்டன் கோலிக்கும், ஐசிசி போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் ராசியில்லை என்று தெரியும். ஆனால் கோலிக்கும், டாஸுக்கும் கூடவா ராசியில்லை. என்ன கொடுைம....
இந்த உலகக் கோப்பைத் தொடரில் பெரும்பாலும் டாஸில் வென்ற அணிகள் சேஸிங் செய்துதான் வென்றுள்ளன.
இந்த தார்மீகரீதியான நம்பிக்கை, டாஸில் தோல்வி அடைந்தவுடன் வீரர்களை மனரீதியாக பாதித்துவிட்டது, கேப்டன் கோலி 4 போட்டிகளில் 3 முறை டாஸில் தோல்வி அடைந்து டாஸில் தோற்ற 3 ஆட்டங்களில் 2 போட்டிகளில் அணியும் தோல்வி அடைந்தது. டாஸ் தோல்வி, போட்டியில் தோல்வியில் முடிந்தது
பாகிஸ்தானை குறைத்துமதிப்பிட்டது
பாகிஸ்தான் அணியுடன் அடிக்கடி இந்திய அணி விளையாடியிருந்தால் அந்த அணி வீரர்களின் திறமைப் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் கடந்தகால வரலாற்றை தோளில் சுமந்து கொண்டு உலகக் கோப்பை என்றாலே இந்திய அணியை பாகிஸ்தான் வெல்ல முடியாது என்ற கண்மூடித்தனமாக நம்பிக்கையுடன், குறைத்து மதிப்பிட்டது இந்தியஅணி தோல்விக்கு முக்கியக் காரணம்.
பாபர் ஆஸம், ரிஸ்வான், அப்ரிடி, இமாத் வாசிம் போன்ற பந்துவீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் சந்தித்திராத இந்திய அணியினருக்கு களத்தில் இவர்களின் செயல்பாடும், அடைந்த தோல்வியும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
நம்பிக்கையிழத்தல்
பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்தவுடனே இந்திய வீரர்கள் ஏதோ இமாலய தவறுசெய்துவிட்டதுபோல், தோல்வி அடைந்ததுபோல் நம்பிக்கையிழந்தனர். கிரிக்கெட்டில் தோல்வி என்பது ஒருபகுதி, இதுவும் ஒருநாள் என்று சகஜமாக கடந்து செல்ல வீரர்கள் தவறிவிட்டனர்
பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணிதோல்வி அடைந்ததை பெரிய குற்றமாகக் கருதி சமூக வலைத்தளங்களி்ல் இந்திய அணியை நெட்டிஸன்கள் வறுத்தெடுத்தது அவர்களை மேலும் நம்பிக்கையிழக்கச் செய்தது. விளையாட்டில் பாகிஸ்தானுடன் தோல்வி அடைவது தவறில்லை என்ற மனநிலைக்கு வராமல் இருந்தது முக்கியக் காரணம்.
அணித் தேர்வில் குழப்பம்
இந்திய அணித் தேர்விலும் பெரும் குழப்பம் நிலவியது. 100 சதவீதம் உடற்தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவுக்கு தேர்வாளர்களும், அணி நிர்வாகமும் பல்லக்குத் தூக்கி, அவரை அணிக்குள் கொண்டுவந்தனர். ஆனால் இரு முக்கிய ஆட்டங்களிலும் பாண்டியா சொதப்பினார். நடுவரிசைக்கு சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும், ஸ்ரேயாஸ் அய்யரை வெளிேய அமர வைத்து, உடற்தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவைச் சேர்த்தது தோல்விக்கு முக்கியக் காரணம்.
பேட்டிங் வரிசை மாற்றம்
பாகிஸ்தான் அணியுடன் தோல்விஅடைந்தவுடன் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்றியது மிகமோசமான தவறு. தொடக்க வீரராக களமிறங்கி பல போட்டிகளை தனிஒருவனாக வென்று கொடுத்த ரோஹித் சர்மா, தொடக்க வீரராக 4 சதங்கள் அடித்துள்ளார், இவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, 3-வது வீரராக களமிறக்கியது தோல்விக்கு பெரிய காரணம்.
அதிலும் அனுபவம் இல்லாத பின்ச் ஹிட்டரான இஷான் கிஷனை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் தொடக்கவீரராக களமிறக்கியது பெரிய தவறு. கேப்டன் கோலி தனது 3-வது இடத்தில் களமிறங்கி பலமுறை ஆட்டத்தை வென்று கொடுத்துள்ளார், ரன்கள் குவித்துள்ளார். ஆனால், அவரும் தனதுஇடத்தை மாற்றி களமிறங்கியதும் தவறு. முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் பரிசோதனை முயற்சிகள் அணியை தோல்விக்குழியில் தள்ளின.
அஸ்வின் புறக்கணிப்பு
இந்திய அணியில் அனுபவமான ஆஃப் ஸ்பின்னர் தேவை என்றுதான் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கிரிக்கெட்டைத் தாண்டிய தனிப்பட்ட காரணங்களால் என்னவோ கோலியால் தொடர்ந்து அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த பாகிஸ்தான்,நியூஸிலாந்து ஆட்டத்திலும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்காமல் புறக்கணிக்கப்பட்டார். ஒருவேளை பாகிஸ்தானுக்கு எதிராக அஸ்வின் களமிறக்கப்பட்டிருந்து, பவர்ப்ளே ஓவருக்குள் பாபர்ஆஸம், ரி்ஸ்வானை வீழ்த்தியிருந்தால், ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியிருக்குமே.அஸ்வினை புறக்கணித்தது இந்திய அணியின் தோல்விக்கு காரணம்
பயோபபுள், இடைவிடாத போட்டி
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வீரர்கள் தொடர்ந்து கிரிக்ெகட் விளையாடி வருகிறார்கள். டெஸ்ட் தொடரில் பயோபபுள் சூழலில் இருந்த இந்திய வீரர்கள், அங்கிருந்தவாரே ஐக்கியஅரபுஅமீரகம் வந்து, ஐபிஎல்டி20 தொடரில் பங்கேற்றனர். தொடர்்ந்து ஓய்வின்றி கிரிக்கெட் விளையாடியது, பயோபபுள் சூழலில் தொடர்ந்து இருந்தது, குடும்பத்தை பிரிந்துஇருத்தல் போன்றவை வீரர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும்.
ஐசிசி நடத்தும்முக்கியமான போட்டித் தொடருக்கு முன் வீரர்களுக்கு போதுமான அளவு ஓய்வும், குறிப்பாக குடும்பத்தினருடன் நேரத்தைசெலவிட வாய்ப்பு வழங்குவதுஅவர்கள் புத்துணர்ச்சியுடன் விளையாட வழிவகுக்கும். இவை எதுமே இ்ல்லாதது தோல்விக்கு காரணம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago