உ.கோ.டி20: நியூஸிலாந்தை 126 ரன்களுக்கு மட்டுப்படுத்திய இந்திய பந்து வீச்சு

By இரா.முத்துக்குமார்

நாக்பூரில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

டாஸ் வென்ற வில்லியம்சன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். முன் கூட்டிய திட்டத்தின் படி அடித்து ஆடுவது என்ற முன் முடிவுடன் களமிறங்கினார் மார்டின் கப்தில், மற்றொரு முனையில் வில்லியம்சன்.

பந்து வீச்சை அஸ்வினைக் கொண்டு தொடங்கினார் தோனி. முதல் பந்தையே மார்டின் கப்தில் அபாரமாக நேராக சைட் ஸ்க்ரீனுக்கு மேல் சிக்சர் விளாசி தொடங்கினார்.

ஆனால் கொஞ்சம் நிதானித்திருக்கலாம் அடுத்த அஸ்வின் பந்து லேசாக ஆஃப் ஸ்பின் ஆக உள்ளே வந்த பந்தை ஸ்வீப் செய்ய முயன்று தொடைக்கு சற்று மேல் வாங்கினார், பலத்த முறையீட்டுக்கிணங்க நடுவர் தர்மசேனா அவுட் கொடுத்தார். ஆனால் ரீ-ப்ளேயில் பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வதாக காண்பித்தது. எனவே ஒரு தவறான தீர்ப்பு, ஆனால் நேரலையில் பார்க்கும் போது அவுட் என்பது போல்தான் தெரிந்தது. கப்தில் 6 ரன்களில் அவுட்.

அதிரடி வீரர் கொலின் மன்ரோ இறங்கினார். முதல் பந்தை தடுத்தாடிய அவர், 2-வது பந்தில் திடீர் விஸ்வரூபம் எடுத்து ஒரு அதிர்ச்சிகரமான ரிவர்ஸ் ஷாட்டில் அஸ்வினை பாயிண்டில் மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார். ரசிகர்களின் வரிசையில் மேலே 2-வது வரிசையில் போய் பந்து விழுந்தது. அஸ்வினின் தூக்கத்தை கெடுக்கும் ஷாட் ஆகும் அது. முதல் ஓவரில் அஸ்வின் 13 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அடுத்த ஓவர் ஆஷிஷ் நெஹ்ரா வீச 2 பந்தையுமே மன்ரோ அவசர கதியில் சரியாக ஆடாமல், 3-வது பந்தை மேலேறி வந்து விளாச முயன்று மிட் ஆஃபில் பாண்டியா கையில் கேட்ச் கொடுத்தார். இப்போது நியூஸிலாந்து அணியிடம் யாராவது ‘இது 5 ஓவர் மேட்ச் அல்ல, 20 ஓவர்’ என்று நினைவு படுத்தியிருக்கலாம்.

2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என்ற இந்த அவசரகதி தொடக்கச் சரிவிலிருந்து நியூஸிலாந்தை இந்தியா மீளவிடாமல் செய்தது. காரணம் தோனியின் பீல்ட் அமைப்பு, மற்றும் பந்து வீச்சு மாற்றம். 4-வது ஓவரில்தான் நெஹ்ராவை வில்லியம்சன் பவுண்டரி அடித்தார். கோரி ஆண்டர்சன் அஸ்வினை ஒரு பவுண்டரி அடித்தார்.

6-வது ஓவரை பும்ரா வீச வில்லியம்சன் 4 பந்துகளில் ரன் எடுக்க முடியவில்லை காரணம் பும்ராவின் லெந்த் மற்றும் வேகம். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே வர நியூஸிலாந்து 6 ஓவர்களில் 33/2 என்று தடுமாறியது.

தோனியின் சமயோசித முடிவு:

இந்நிலையில் பாண்டியா, யுவராஜ், ஜடேஜா இருக்கும் போது சுரேஷ் ரெய்னாவை பந்து வீச அழைத்தார் தோனி. அதாவது நிச்சயம் இவரை அடிக்கப் போவார்கள் என்று தெரிந்துதான் கொண்டு வந்தார். அதே போல் 8 ரன்கள் எடுத்த வில்லியம்சன் ரெய்னாவை மேலேறி வந்து ஆட பந்து தாண்டிச் சென்றது தோனி வேலையை முடித்தார்.

தோனி ரெய்னாவுக்கு 4 ஓவர்களை கொடுத்து முடித்தார். இதில் ரெய்னா 15 ரன்களையே விட்டுக் கொடுத்து கடைசியில் ராஸ் டெய்லர் ரன் அவுட்டுக்கும் காரணமானார். டெய்லர் 10 ரன்களில் அவுட். ஆண்டர்சன் மட்டுமே அதிகபட்சமாக 42 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். இவரும் ரன் விகிதத்தை ஏற்ற பும்ராவை ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார், ஆனால் பும்ரா ஏற்கெனவே யார்க்கர்களை துல்லியமாக வீசத் தொடங்கியிருந்ததால் மிடில் ஸ்டம்ப் சரிந்தது.

பும்ரா யார்க்கர்களையும், மெதுவான ஆஃப் கட்டர்களையும் கலந்து வீசி அடிக்க முடியாமல் செய்தார். இடையில் சாண்ட்னர் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து உற்சாகம் காட்டினார், ஆனால் அவரும் ஜடேஜா பந்தில் தோனியின் கேட்சுக்கு வெளியேறினார். எலியட் 9 ரன்கள் எடுத்து தவண் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

லூக் ரோங்கி கடைசியில் நெஹ்ராவை மேலேறி வந்து சிக்ஸ் அடிக்க நியூஸிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் என்று முடிந்தது. அஸ்வின் 4 ஓவர்களில் அதிகபட்சமாக 32 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். நெஹ்ரா, பும்ரா, ரெய்னா, ஜடேஜா என்று அனைவரும் அருமையாக வீசினர், இவர்களுக்கு பக்கபலமாக அமைந்தது இந்திய அணியின் பீல்டிங்.

அச்சுறுத்தும் அதிரடி வீரர்களைக் கொண்ட நியூஸிலாந்தை 126 ரன்களுக்கு இந்தியா மட்டுப்படுத்தியுள்ளது, இதனை எப்படி துரத்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்