ராகுல், ரோஹித்தின் விளாசல், ஷமி, ஜடேஜாவின் பந்துவீச்சு ஆகியவற்றால், துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 17.4 ஓவர்களில் 85 ரன்களில் ஆட்டமிழந்தது. 86 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி்க்கு கிடைத்த வெற்றிதான் என்றாலும் பெருமைப்படத்தக்க ெவற்றி என்று சொல்லிவிடமுடியாது. இந்தப் போட்டியில் நிச்சயம் இந்திய அணி தோற்காது என்பது ரசிகர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஒரு போட்டியின் முடிவை தெரிந்து கொண்டு ஆட்டத்தைப் பார்ப்பது சுவாரஸ்யம் அற்றதாகவே இருக்கும்.
அதுபோல்தான் நேற்றைய ஆட்டமும் இருந்தது. ஸ்காட்லாந்து அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டி, இந்திய அணியினர் குறைந்த ஓவரில் சேஸிங் செய்வார்கள் என்று எழுதிவைக்கப்படாமல் போட்டி தொடங்கியது, அதைப்போலவை அனைத்தும் இனிதாக நடந்து முடிந்தது.
இந்திய அணிக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 1.619 ரன் ரேட்டுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் நியூஸிலாந்து அணிதான் 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கருகிவிடவில்லை, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆட்டத்தைப் பொறுத்துதான் இந்திய அணியின் அரையிறுதிவாழ்வு அமைந்துள்ளது. ஒருவேளை நியூஸிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வென்றுவிட்டால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு குறித்த பேச்சு இருக்கும்.
அப்போதுகூட, அடுத்துவரும் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்காட்லாந்து அணியை வென்றதுபோல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரன்ரேட்டை உயர்வாக வைத்திருந்தால் இந்திய அணி நிகர ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குச் செல்லும்.
ஆனால், ஆப்கானிஸ்தானை நியூஸிலாந்து அணி வென்றுவிட்டால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புக் குறித்த பேச்சுக்கு இடமில்லை. ஆப்கானிஸ்தான், இந்திய அணி மூட்டை, முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பிவிடலாம். ஆனால், ஆப்கானிஸ்தானிடம் நியூஸிலாந்து அணி தோற்கும் எனும் லாஜிக் பெரிய பாறை போன்று நடுவில் இருக்கிறது. மற்றவகையில் இந்திய அணியின் அரையிறுதிக் கனவு என்பது இன்னும் கானல்நீர்தான்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் பிறந்தநாள் பரிசாக இரு விஷயங்கள் நடந்தன. முதலாவதாக இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதன்முதலில் டாஸில் கோலி வென்றார், 2-வதாக போட்டியிலும் கோலி தலைமை வென்றது.
பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் தாங்கள் ஜாம்பவான்கள் என்பதை கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணியிடம் நிரூபித்துவிட்டார்கள். இதேபோன்ற ஆட்டத்தை பாகிஸ்தான், நியூஸிலாந்து அணியிடம் வெளிப்படுத்தியிருந்தால், மற்ற அணியின் வெற்றி, தோல்வியை வைத்து இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யத் தேவை இருந்திருக்காது.
4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 5 பேரும் சேர்ந்து 61 டாட் பந்துகளை நேற்று வீசினர். ஸ்காட்லாந்து அணி பேட் செய்தது 17.4 ஓவர்கள் இதில் 61 பந்துகள் டாட்பந்துகள் என்றால், 45 பந்துகளில்தான் இந்த 85 ரன்களையும் அடித்துள்ளனர்.
இந்திய அணியின் பும்ரா, ஷமி ஆகியோரின் வேகப்பந்துவீ்ச்சு, யார்கர் முன் ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. ஜடேஜாவீசிய 7வது ஓவரில் 2 விக்கெட்டுகளும், ஷமி வீசிய 17வது ஓவரில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளும் வீழ்ந்தபோதே ஸ்காட்லாந்து அணியின் பேட்டிங் பராக்கிரமம் தெரியவந்தது.
சர்வதேசத் தரத்தில் பந்துவீச்சை அடுத்தடுத்து சந்தித்திராத ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அஸ்வின், ஜடேஜா, ஷமி என அடுத்தடுத்து மாறி,மாறி பந்துவீச வந்தபோது சூழலுக்கு ஏற்ப தங்களை ஆட்படுத்துக்கொள்ள முடியவில்லை.
வேகப்பந்துவீச்சை ஓரளவுக்கு சமாளித்து ஆடிய ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள தயக்கம்காட்டினர். ஆனால் அஸ்வின் பந்துவீச்சு நேற்று நொறுக்கப்பட்டாலும், ஜடேஜா, வருண் பந்துவீச்சை எதிர்கொள்ள ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் தயங்கினர்.
ஜடேஜா வீசும் பந்துகள் எல்லாம் டர்ன் ஆவதே பெரியவிஷயம். அதிலும் துபாய் போன்ற மைதானத்தில் நேற்று பந்து டர்ன் ஆனவுடன் 3 விக்ெகட்டுகளை வீழ்த்திவிட்டார். பும்ரா 3.4 ஓவர்கள் வீசி ஒருமெய்டன் ஓவர் 10 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஷமி 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
86 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் கூட்டணி களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே இருவரும் பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டனர். ரோஹித் சர்மாவுக்கு எப்படி பந்துவீசக்கூடாதோ அந்த திசையில் பந்துவீசி சிக்ஸர்,பவுண்டரிகளாக விளாச ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்கள் உதவினர்.
ராகுல் நேற்று காட்டடி ஆட்டம் ஆடினார். 18 பந்துகளில் ராகுல் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 30 ரன்களில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரி அடக்கம்.முதல்விக்கெட்டுக்கு இருவரும் 4.5 ஓவர்களில்70 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதைத் தொடர்ந்து கேஎல்.ராகுல், 3 சிக்ஸர், 6 பவுண்டரி உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 2 ரன்னிலும், சூர்யகுமார் 6 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்
ஸ்காட்லாந்து அணியைப் பொறுத்தவரை இந்திய அணி போன்ற ஜாம்பவான் அணிக்கு எதிராக வெற்றி பெற முடியாது, ஆனால் முடிந்தவரை போராடுவோம் என்ற எண்ணத்தில்தான் களமிறங்கியிருப்பார்கள். தோல்வியை உறுதி செய்துகொண்டு ஒரு அணி களமிறங்குவதும், சாகும்நாளை தெரிந்து கொண்டு வாழ்வதும் ஒன்றுதான் சுவாரஸ்யமற்றதாக மாறிவிடும். அப்படித்தான் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஒருவிதமான போர்க்குணம் காணப்படவில்லை.
பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் ஸ்காட்லாந்து மோசமாகச் செயல்பட்டது. கத்துக்குட்டி ஸ்காட்லாந்து பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இன்னும் பாலபாடங்களைத்தான் கற்றுள்ளது. சர்வதேச தளத்தில் விளையாடும்போது அதற்குரிய பந்துவீச்சைச் சமாளிக்க பேட்டிங் இல்லை, பேட்டிங்கை வீழ்த்த பந்துவீசும் இல்லை. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முன்சே(24),மெக்லியாட்(16), லீஸ்க்(21), மார்க் வாட்(21) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன் சேர்த்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago