ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோரின் பேட்டிங், அஸ்வினின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 வி்க்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்து 66 ரன்களில் தோல்வி அடைந்தது.
ரன்ரேட் உயர்வு
நடிகர் வடிவேலு ஒருதிரைப்படத்தில் பேசிய பிரபலமான வசனம்தான் நினைவுக்கு வருகிறது. “ ஒரு புள்ளபூச்சியைப் பிடிச்சு இப்படியாடா அடிப்பிங்க… என்னைய அடிச்சு உங்களுக்கு என்னடா கிடைக்கும்”என்று அழுவார்.. இந்த டயலாக்தான் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி துவைத்து எடுத்தபோது நினைவுக்கு வந்தது.
நியூஸிலாந்திடமும், பாகிஸ்தானிடமும் இதேபோன்ற பேட்டிங்கை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியிருந்தால் சபாஷ் போடலாம்…ஆனால், கண்கெட்டபின் சூரிய வணக்கம் என்றரீதியில் இந்தப் போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் இந்திய அணி தனது நிகர ரன்ரேட்டை பாஸிட்டிவாக 0.073 அளவாக உயர்த்திக் கொண்டது.
ஊசலாட்டம்
அடுத்துவரும் நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளுக்கும் எதிரான போட்டிகளிலும் இந்திய அணி இதேபோன்று மாபெரும் வெற்றியைப் பெறுவது அவசியம். இரு வெற்றிகளைப் பெற்றாலும் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்வது ஆப்கானிஸ்தான் கைகளில்தான் இருக்கிறது.
நியூஸிலாந்துக்கு ஆப்கானிஸ்தானுடன் ஒரு ஆட்டம் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் எப்படியாவது நியூஸிலாந்து அணியை தோற்றுவிட்டால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், இந்தப் போட்டியில் இந்திய அணியிடம் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததால், அதனுடைய நிகர ரன்ரேட் 3.0 லிருந்து 1.481க்கு குறைந்துவிட்டது. நியூஸிலாந்திடம் கடைசி நேரத்தில் போராடி வெல்லும்பட்சத்தில் நிகர ரன்ரேட் சிறிதளவு உயரக்கூடும்.
அதேசமயம், இந்திய அணி அடுத்துவரும் 2 போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று நிகர ரன்ரேட்டை உயர்த்தும்பட்சத்தில் ஆப்கன், இந்திய அணி சமமான புள்ளிகளுடன் இருக்கும் நிகர ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
2007-2021
இவையெல்லாம் நடந்தால்தான் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்புக் கிடைக்கும். இல்லாவிட்டால், நியூஸிலாந்து தோற்கும்வரை இந்திய அணியின் நிலைமை ஊசலாட்டாம்தான்.
இந்திய அணித் தரப்பில் 47 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மாவுக்கு(3சிக்ஸர்,8பவுண்டரி) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
2007ம் ஆண்டு 50ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்திலேயே வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து பெபரிய அவமானத்தைச் சந்தித்தது. ஆனால், அடுத்தபோட்டியில் பாவம்..பெர்முடா அணியைப் போட்டு கொத்துகறிபோட்டு 413 ரன்களைக் குவித்து, உலகக் கோப்பையில் அதிகமான ரன்களைச் சேர்த்த அணி என்று பெருமைப்பட்டுக்கொண்டது.
அதேபோன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் சேர்த்து இந்த உலகக் கோப்பைபப் போட்டியில் அதிகமான ரன்கள் சேர்த்த அணி என்ற பெருமையைப் பெற்றது.
தவறு திருத்தப்பட்டது
இந்திய அணியைப் பொறுத்தவரை மீண்டும் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் கூட்டணி களமிறக்கப்பட்டது, தார்மீக ரீதியாக இருவருக்கும் நம்பிக்கையைக் அளத்திருக்கும். சர்வதேச அளவில் சிறந்ததொடக்க ஜோடி என பெயரெடுத்த இருவரையும் நியூஸிலாந்துக்கு எதிராக பிரித்து புதிய உத்தியைக் கையாண்டு கையை சுட்டுக்கொண்டது இந்திய அணி நிர்வாகம்(மென்ட்டர் வேலையா இருக்குமோ).
ஆனால், அது தவறு என உணர்ந்தபின் மீண்டும் இந்த ஜோடி நேற்று களமிறங்கி நம்பகத்தன்மையை அதிகப்படுத்தியது.முதல் விக்கெட்டுக்கு ராகுல், ரோஹித் இருவரும் 140ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு பெரிய அளவுக்கு தொந்தரவு கொடுக்காது என்பதை தெரிந்துவிட்டது.
ஆடுகளம் சாதகம், அதிரடி ஆட்டம்
அதுமட்டுமல்லாமல் கடந்த 2 போட்டிகளில் இருந்த ஆடுகளத்தைவிட அபுதாபி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், ரோஹித், ராகுல் இருவரும் தொடக்கத்திலேயே அதிரடியை கையாண்டனர்.
பவர்ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது. பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்ட ரோஹித் சர்மா, 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதுபோன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் அடித்தது பெரியவிஷயம் இல்லை என்றாலும், தார்மீக ரீதியாக ரோஹித்தின் ேபட்டிங் நம்பிக்கை வலுப்பெறும், அடுத்தஇரு ஆட்டங்களிலும் அவரின் பேட்டிங் வலிமை பெறும். ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றால் ரோஹித்தின் பேட்டிங் மிகப்பெரிய துருப்புச்சீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கே.எல்.ராகுலும் தனது பங்கிற்கு சிக்ஸர், பவுண்டரி அடித்து 35பந்துகளில் அரைசதம் அடித்தார். ராகுலும்கடந்த 2 போட்டிகளாக பேட்டிங்கில் ரிதம் இன்றி தவித்துவந்த நிலையில் இந்த அரைசதம் அவருக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
ஃபினிஷர் பாண்டியா!
முதல்விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தநிலையில் ரோஹித் சர்மா 74 ரன்னில் கரீம் பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்கினார். அடுத்த சிறிதுநேரத்தில் ராகுல் 48பந்துகளில் 68 ரன்கள் சேர்த்த நிலையில் குல்புதீன் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
ரிஷப்பந்த், ஹர்திக் பாண்டியா இருவரும் கடைசி 5 ஓவர்களை வெளுத்துவாங்கினர். கடந்த இரு போட்டிகளிலும் அடிக்க முடியாத ஷாட்களை, ஆட முடியாத ஷாட்களை இதில் ஆடி பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர். ரிஷப் பந்த் 27 ரன்னிலும், பாண்டியா35 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ரிஷப் பந்த் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்கூட ஓரளவுக்கு நிலைத்து ஆடினார். ஆனால், ஹர்திக் பாண்டியா கடந்த இரு போட்டிகளிலும் ஃபினிஷர் ரோல் செய்கிறேன் என்று கூறி வந்து பெரிதாக எதையும் செய்யவி்ல்லை. இந்த போட்டியில் அடித்த ஷாட்கள் பாண்டியாவுக்கு நிச்சயம் ஊக்கத்தை அளி்க்கும்.
அஸ்வின் நம்பிக்கை
இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, கடந்த 2 போட்டிகளாக என்னை ஒதுக்கிவைத்தது தவறு என்பதை அஸ்வின் நேற்று நிரூபித்துவிட்டார். 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட் பந்துகள் ஏறக்குறைய 2 ஓவர் மெய்டன். அஸ்வினைவிட நேற்று இந்திய அணியில் பந்துவீசிய அனைவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல்தான் விட்டுக் கொடுத்தனர்.
பந்துவீச்சு ஏமாற்றம்
ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணியை பும்ரா, ஷமி, தாக்கூர் போன்ற பந்துவீச்சாளர்கள் எளிதாக சுருட்டியிருக்க வேண்டும். 144 ரன்கள் வரை அடிக்க அனுமதித்ததே இந்திய அணியின் பந்துவீ்ச்சு போதுமான வலிமையை இழந்துவிட்டதோ என்பதையே காட்டுகிறது.
மற்றவகையில் இந்திய அணியின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ரன்சேர்ப்பதில் பெரிய சிரமங்களை அளிக்கவி்ல்லை என்பதையே காட்டுகிறது.
இதெல்லாம் தேவையா
ஹர்திக் பாண்டியாவுக்கு பந்துவீசிப்பயிற்சி எடுத்து பல மாதங்கள் ஆகிறது. அவரை திடீரென பந்துவீச பயிற்சி அளி்த்து கடந்த இரு போட்டிகளிலும் பந்துவீச வைத்தனர். இந்த ஆட்டதில் பாண்டியா 2 ஓவர்கள் வீசி 23 ரன்களும், தாக்கூர் 3 ஓவர்கள் வீசி 33 ரன்களையும் வாரி வழங்கினர். இருவரும் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசியிருந்தால் இன்னும் குறைந்த ரன்னில் ஆப்கனை சுருட்டியிருக்கலாம்
ஷமி, பும்ரா இருவரும் பவர்ப்ளே ஓவருக்குள் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ஒட்டுமொத்தமாக இந்திய அணி சார்பில் 51 டாட்பந்துகள் வீசப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆப்கன் பந்துவீச்சில் பல்இல்லை
ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முஜிப் உர் ரஹ்மான் இல்லாதது பெரிய பின்னடைவுதான். ரஷித்கான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அவராலும் முடியவில்லை. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 9 ரன்கள் சராசரியாக வழங்கினர். ஆப்கானிஸ்தானின்தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், கேப்டன் முகமது நபி, கரீம் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை மிரட்டும் வகையில் பேட் செய்தனர் என்பதை மறுக்க முடியாது.
15 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள்சேரத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும், 56 ரன்கள் சேர்த்தது ஆப்கானிஸ்தான் அணி. பும்ரா, தாக்கூர், பாண்டியா ஓவர்களை கடைசி நேரத்தில் கரீம், நபி இருவரும் வெளுத்துவாங்கிவிட்டனர்
கரீம் ஜனது 22 பந்துகளில் 42ரன்களுடன்(2சிக்ஸர்,3பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது நபி 35 ரன்களில் ஷமி பந்துவீச்சில் விக்ெகட்டை பறிகொடுத்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago