‘கில்லர்’ மில்லர்; அரங்கிற்கு வெளியே 2 சிக்ஸரில் ஆட்டம் முடிந்தது: தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி: இலங்கை போராட்டம் வீண்

By க.போத்திராஜ்

மில்லர், ரபாடாவின் அதிரடி ஆட்டத்தால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி20 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான ரேஸில் தென் ஆப்பிரிக்க அணி தன்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இதுவரை 2 வெற்றிகள் 4புள்ளிகளுடன் ரன்ரேட்டில் ஆஸியைவிட முன்னிலையில் 2-வதுஇடத்தில் தென் ஆப்பிரிக்கா இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷாம்சிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் வீசிய ஷாம்சி 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஷார்ஜா மைதானத்தைப் பொறுத்தவரை இந்த ஸ்கோர் எளிதாக சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையானது. ஏதாவது ஒரு ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் இந்த ஸ்கைரை விரைவாக சேஸிங் செய்திருக்கலாம். கடைசி வரை எடுத்துவந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு டேவிட் மில்லர் (23), ரபாடா (13) இருவரின் கடைசி நேர பேட்டிங்தான் தெ ஆப்பிரிக்காவிடம் ஆட்டத்தைத் திருப்பியது. இருவரும் விடா முயற்சியுடன் கடைசிவரை ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர்.

கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது.களத்தில் ரபாடா, டேவிட் மில்லர் இருந்தனர். இதில் ரபாடாவை பின்ச் ஹிட்டர் வரிசையில்தான் சேர்க்க முடியுமே தவிர தொழில்முறை பேட்ஸ்மேன் இல்லை, மில்லருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பேட்டிங் சூடுபிடிக்கும் இல்லாவிட்டால் சொதப்பிவிடுவார், இந்தசூழலில்தான் இருவரும் பேட்டிங் செய்தனர்.

சமீரா வீசிய 19-வது ஓவரில் ரபாடா ஒரு சிக்ஸர் உள்பட தென் ஆப்பிரிக்க அணி 10 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. பார்வையாளர்கள் மேடையில் இலங்கை ரசிகர்கள், ஆதாரவாளர்கள் ஏராளமனோர் குழுமியிருந்தனர், தென் ஆப்பிரிக்க ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே காட்சியளித்தனர்.

லஹிரு குமாரா கடைசி ஓவரை வீசினார். ரபாடா ஒரு ரன் எடுத்து மில்லரிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். 2-வது பந்திலும், 3-வது பந்திலும் மில்லர் இரு சிக்ஸர்களை விளாசி இலங்கை அணியை திகைக்க வைத்தார். இரு சிக்ஸர்களுமே அரங்கிற்கு வெளியே சென்று விழுந்தன. 4-வது பந்தில் மில்லர் ஒரு ரன் எடுக்க ஸ்கோர் சமமானது. 5-வது பந்தில் ரபாடா பவுண்டரி அடிக்க தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றது.மில்லர் 23 ரன்களுடனும், ரபாடா 13 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்க அணியிலும் பேட்டிங் ஏமாற்றத்தையே அளித்தது. தொடக்க ஆட்டக்கார்ரகள் ஹென்ரிக்ஸ் (11), டீ காக் (12), வான் டெர் டூசென் (16) ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தனர். கடந்த 3 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணியில் பேட்டிங் நிலைத்தன்மையுடன் இல்லை. தொடக்க வீரர்கள் நிலைத்தால் நடுவரிசை சொதப்புவது, நடுவரிசை நிலைத்தால் தொடக்கம் மோசமாக இருப்பது என்ற நிலைதான் நீடிக்கிறது.

கேப்டன் பவுமா, மார்க்கரம் ஜோடி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். இந்த ஜோடி 47 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. மார்க்ரம் (19) ரன்னிலும், கேப்டன் பவுமா 46 ரன்னிலும் வெளியேறினர். இலங்கை அணியில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், சமீரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை 142 ரன்களை வைத்துக் கொண்டு ஷார்ஜா மைதானத்தில் டிபென்ட் செய்ய நினைப்பது கடினம். டிபென்ட் செய்ய வேண்டுமென்றால், கடைசி நேரத்தில் டெத் ஓவர்கள் வீசக்கூடிய திறமையான பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும். சுழற்பந்துவீச்சாளர்கள் அதிலும் ஹசரங்கா, தீக்சனா இருவரை மட்டும் வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று நினைப்பது தவறு.

தொடக்க வீரர் நிசாங்கா(72), அசலங்கா(21) ரன்கள் சேர்த்ததுதான் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் சேர்த்த இரட்டை இலக்க ரன்களாகும்.

மற்ற அனைத்துப் பேட்ஸ்மேன்களும் தங்களுக்கும், அணிக்கும் தொடர்பில்லாத வகையில் வருவதும் போவதும் என ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்துச் சென்றனர்.ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் என்ற நிலையில் வலுவாக இருந்த இலங்கை அணி,110 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

நடுவரிசை பேட்ஸ்மேன்களான ராஜபக்ச (0), பெர்னான்டோ (3), ஹசரங்கா (4) ஆகியோரை ஷாம்ஸி வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ஷாம்ஸி, பிரி்ட்டோரியஸ் தலா 3 விக்கெட்டுகளையும், நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்