வரலாறு மாறியது; 29 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வென்றது பாகிஸ்தான்: பாபர், அப்ரிடி அபாரம்

By க.போத்திராஜ்

ஷாகின் ஷா அப்பிரிடியின் அபாரமான பந்துவீச்சு, கேப்டன் பாபர் ஆஸம், ரிஸ்வானின் அற்புதமான பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வி்க்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

13-வது முறை

இதுவரை 50 ஓவர்கள், டி20 உலகக் கோப்பையில் 12 முறை இந்திய அணியை எதிர்கொண்டு தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, 13-வது முறையாக வென்றுள்ளது. ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப்பின் , கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்துவரும் பாகிஸ்தான் இதுவரை ஒருமுறைகூட வெல்லமுடியாமல் பெரும் சுமையை சுமந்துவந்தது. அந்தப் பிரச்சினை பாபர் ஆஸம் மூலம் தீர்க்கப்பட்டது.

அதிலும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றியே பிரமாண்ட வெற்றியாக 10 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்துள்ளது.

ஆட்டநாயகன்

வரலாற்றில் கஜினி முகமது இந்தியா மீது படையெடுத்து 17 முறை தோற்று 18-வது முறையாக இந்தியாவின் செல்வங்களை அள்ளிச்சென்றார் என்று கூறப்படுவதுண்டு. அதுபோல் 12 முறை தோற்ற பாகிஸ்தான் 13-வது முறையாக அபாரமாக வெற்றி பெற்று ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிச் சென்றது.

இந்திய அணியின் மூன்று முக்கியத் தூண்களான ரோஹித் சர்மா, ராகுல், சூர்யகுமார் யாதவ் விக்கெட்டைச் சாய்த்த ஷாகின் ஷா அப்பிரிடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிநாயகன்

துபாயில் இதுவரை பாபர் ஆஸம் தலைமையில் பாகிஸ்தான் அணி11 முறை விளையாடி அனைத்திலுமே வென்றுள்ளது, 12 முறையாக நேற்றும் வென்று அதைத் தக்கவைத்துக் கொண்டது.அதேநேரம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலி இதுவரை ஆட்டமிழந்தது இல்லை என்பதை பதிவு செய்திருந்த நிலையில் நேற்றுதான் முதல்முறையாக ஆட்டமிழந்தார்.

சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்

விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்று. தோல்வியே சந்திக்காத அணி இல்லை, தோல்வியை மட்டும் சந்திக்கும் அணியும் இல்லை. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், வெற்றி, தோல்வி என்பது இரு அணிகளுக்கு இடையிலானது என மட்டும்தான் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணி வென்றவுடன் அந்த அணி வீரர் ரிஸ்வானை கேப்டன் கோலி கட்டியணைத்து பாராட்டுத் தெரிவித்தது உண்மையில் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு உதாரணம்.
தோனி களத்துக்குவந்து பாகிஸ்தான் வீரர்களுடன் பேசி, அவர்களுக்கு ஆலோசனை வழங்கியது போன்றவை பிரிந்த உறவினர்களை மீண்டும் சந்தி்க்கும்போது ஏற்படும் உணர்வை மகிழ்ச்சியை அளித்தது. இந்தியா, பாகிஸ்தான் வீரர்களும் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினர்.

தோல்விக்கு காரணம்

இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம், நாம் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடததுதான். பாகிஸ்தான் அணியில் இன்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் இளம் தலைமுறையினர் இவர்களின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டதும் இல்லை, விளையாடியதும் இல்லை. அந்த சூழலில் அவர்களின் பந்துவீச்சை இதுபோன்ற மிகப்பெரிய அழுத்தமான சூழலில் எதிர்கொள்வது கடினம்தான்.

அருமையான ஹோம் ஒர்க்

பாகிஸ்தான் அணியைப் பொறுத்துவரை இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஏராளமான “ஹோம் ஓர்க்” , திட்டங்களை வகுத்துள்ளனர். அதை எந்தவிதமான பிசகலும் இல்லாமல் பாபர் ஆஸம் சரியாக நிறைவேற்றியதற்குத்தான் இந்த வெற்றி கிடைத்தது.

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் எதில் பலவீனம் என்பதை தெரிந்து கொண்டு பந்துவீசி அவர்களை ஆட்டமிழக்கச் செய்தனர். குறிப்பாக அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து வீசும் பந்துவீச்சாளர்ரகளை பந்துகளைச் சந்சிக்க ரோஹித் சர்மா, ராகுல் திணறுவார்கள் என்பதை அறிந்து அப்ரிடி சரியாக ஸ்விங் செய்தும், யார்கர் வீசியும் இருவரையும் தூக்கியது அற்புதம்.

ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் இந்த தவறுகளைத் தொடர்ந்து செய்கிறார்கள் என பலமுறை உலக கிரிக்கெட்டில் வர்ணனையாளர்கள், விமர்சகர்கள் சுட்டிக்காட்டியும் அதைத் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் திருத்தவில்லை.

அப்ரிடி அபாரம்

பாகிஸ்தான் இளம் வேகப்பந்துவீச்சாளர் அப்ரிடி இதற்கு முன் பலமுறை உலக அரங்கில் பேசப்பட்டாலும், முதல்முறை அனைவரையும் தனது பந்துவீச்சால் வியக்கவைத்துள்ளார். 2018ம் ஆண்டிலிருந்து டி20 போட்டிகளில் பந்துவீசும் அப்ரிடி தான்வீசும் முதல் 2 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது கிடையாது. அதை இந்திய அணிக்கு எதிராகவும் அப்ரிடி நிரூபித்துவிட்டார்.

பந்துவீச்சில் ஏராளமான வேரியேஷன்களை அப்ரிடி வெளிப்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். 140 கி.மீ வேகத்தில் ஒரு பந்துவீசப்படுகிறது என்றால், அடுத்த பந்தை 120கி.மீ வேகத்தில் வீசுவது என்பது கடினமானது, அந்த ரிதத்தை சரியாக அப்ரிடிகையாண்டார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என 3 பிரிவுகளிலுமே தாங்கள் வேறு ரகம், பழைய பாகிஸ்தான் நாங்கள் இல்லை என்பதை நிரூபித்தனர்.

திருப்பிபார்க்க வைத்த பாக்.

நியூஸிலாந்து அணி கடந்த மாதம் ஒருபோட்டித் தொடர் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாதுகாப்பு காரணங்களைக் கூறி தொடரை ரத்து செய்து வீரர்களைதிரும்ப அழைத்தது. உலக கிரிக்கெட்டின் முன் கூனிக் குறுகி, தங்கள் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை, தரமான அணியாக இருக்கிறோம் விளையாட வாருங்கள் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா அளித்த பேட்டியில் “ உலகக் கோப்பையில் நாம் பெறும் வெற்றிதான் உலக அணிகளை நம்மை திரும்பிப்பார்க்க வைக்கும்” என்று தெரிவித்திருந்தார். அதை இப்போது பாகிஸ்தான் அணி சரியாகச் செய்துள்ளது.

தவறு செய்யவில்லை

152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான், பாபர் ஆஸம் இருவரும் அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் வழங்காமல் விளையாடியதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஏதேனும் சிறிய தவறு செய்திருந்தாலும் அது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆனால், அவர்கள் எந்த தவறையும் தங்கள் ஷாட்களில் வெளிப்படுத்தவில்லை.

நிதானமாகத் தொடங்கிய பாபர் ஆஸம், ரஸ்வான் ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேயில் 43 ரன்களை பாகிஸ்தான் சேர்த்தது. இந்திய அணி பவர்ப்ளேக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தநிலையில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி நகர்ந்த போதே இந்திய அணி தோல்வியின் பிடிக்குள் மெல்ல சிக்கத் தொடங்கியது.

அதிரடி ஆட்டம்

ஜடேஜாவின் 9-வது ஓவரில் பாபர் ஆஸம் ஒரு சிக்ஸரும், வருண் ஓவரில் பவுண்டரியும் அடித்த பின்புதான் தனது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பினார். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகள் பவுண்டரி சிக்ஸர்களகப் பறந்தன. பாபர் ஆஸம் 40 பந்துகளிலும், ரிஸ்வான் 41 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.
பாபர் ஆஸம் 52 பந்துகளில் 68 ரன்களுடனும் (2 சிக்ஸர், 6 பவுண்டரி), ரிஸ்வான் 55 பந்துகளில் 79 ரன்களுடனும் (3சிக்ஸர், 6 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கோலி "கிங்" தான்

இந்திய அணியைப் பொறுத்தவரை முதலில் கேப்டன் விராட் கோலிக்கு பெரிய ஹாட்ஸ் ஆஃப் கூற வேண்டும். நிச்சயமாக, உலக அரங்கில் கிங் கோலி (57 ரன்கள்) என்பதை நேற்றைய ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார். 3 பெரிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதிலும் ஒற்றை மனிதராக களத்தில் இருந்து அணியை தோளில் சுமந்து பெரிய ஸ்கோரை எட்ட உதவியதற்கு அவரை பாராட்டியே தீர வேண்டும். இதுபோன்ற தருணங்களில்தான் கோலியின் பேட்டிங் அணுபவம் பளிச்சிடுகிறது.

சறுக்கல்இயல்பு

மற்றவகையில், ரோஹித் சர்மா(0), ராகுல்(3) இருவருமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சச்சினுக்கு ஏற்படாத சறுக்கல்களா, ஆதலால், அடுத்தப் போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்பலாம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு, அழுத்தம் ஆகியவற்றைச் சுமந்து களமிறங்கும்போது பேட்ஸ்மேன்கள் தவறுகளை எளிதாகச் செய்யத் தள்ளப்படுகிறார்கள். சாதரணப் போட்டிதான் என்ற மனநிலைக்கு வராதவரை, இயல்பான ஆட்டத்துக்குள் செல்ல முடியாது. அந்த அழுத்தம்தான் ரோஹித் சர்மாவை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்தது.

அவசரம் தேவையில்லை

ஆனால், சூர்யகுமார் யாதவ்(11) சிக்ஸர், பவுண்டரி அடித்து தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பிய போதிலும் ஷாட்களை தேர்வு செய்து அடித்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஹசன் அலி வீசிய பந்தை பாடி லைனில் சென்றதை தேவையில்லாமல் தொட்டு சூர்யா ஆட்டமிழந்தார்.

ரிஷப் பந்த், கோலி ஜோடிதான் இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. இருவரும் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிஷப் பந்த்(39) பொறுமையிழந்து பேட் செய்வதையும், அவசரப்பட்டு தவறான ஷாட்களை ஆடுவதையும் வழக்கமாகச் செய்து வருகிறார்.

ஹர்திக் பாண்டியா தேவைதானா

ஆல்ரவுண்டர் வரிசையில் சேர்க்கப்பட்ட ஜடேஜா(11) ரன்னிலும், ஹர்திக் பாண்டியா(11) ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். ஹர்திக் பாண்டியாவை இந்த அளவுக்கு இந்திய அணி நிர்வாகம் தூக்கிப் பிடிக்க வேண்டியதில்லை. ஏராளமான இளம் தகுதியான வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும்போது, உடற்தகுதியில்லாத பாண்டியாவை ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாக வைத்திருப்பது தேவையில்லாதது. அதற்கு பிதலாக ஷர்துல் தாக்கூர், அல்லது ஸ்ரேயாஸ் அய்யரை கொண்டுவரலாம்.

பேட்டிங் ஏமாற்றம்

இந்திய அணியின் பேட்டிங்கில் நேற்று கோலியைத் தவிர அனைவரும் ஏமாற்றிவிட்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் நேற்று மட்டும் 46 டாட் பந்துகளை கொடுத்துள்ளனர், அதாவது 8 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்கவில்லை. இ்ந்திய பேட்ஸ்மேன்கள் சேர்த்த 151ரன்கள் என்பது 12 ஓவர்களில் அடிக்கப்பட்டது. இந்த 8ஓவர்களில் 4 ஓவர்களில் கூடுதலாக 40 ரன்கள் சேர்த்திருந்தால், ஆட்டம் சவாலாக மாறியிருக்கும்.

பல் இல்லாத பந்துவீச்சு

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எந்த விதத்திலும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிரமம் கொடுக்கவில்லை, பந்துவீச்சு எடுபடவே இல்லை. ஒட்டுமொத்தத்தில் பல் இல்லாத பந்துவீச்சாக மாறியது.

சிறந்த வேகப்பந்துவீச்சளர்கள் என கூறப்படும் பும்ரா, ஷமி, இருவருக்கும் நேற்று என்ன ஆச்சு எனத் தெரியவில்லை. இருவருமே லைன் லென்த் கிடைக்காமல் பந்துவீசி ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர் குமார் ஐபிஎல் தொடரிலிருந்தே ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார், அவரின் மோசமான பந்துவீச்சு நேற்றும் தொடர்ந்தது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அடித்து ஆடவைக்கும் ஆசையைத் தூண்டும் பந்துவீச்சை வீசாமல் டிபென்ஸ் பந்துவீச்சையே இந்திய பந்து வீச்சாளர்கள் வீசியது மிகப்பெரிய தவறாகும்.

அஸ்வின் இல்லாதது தவறு

ஜடேஜா, மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் இருவரின் பந்துவீச்சும் எடுபடவி்ல்லை. இருவரும் சேர்ந்து 61 ரன்களை வாரி வழங்கினர். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் அணி்க்கு அவசியம் எனும்போதுதான் அஸ்வின் நினைவுக்கு வருவார். அஸ்வினை அழைத்து எவ்வாறு பந்துவீசுவது என கோலி நேற்று ஆலோசனை கேட்டதை இங்கே குறிப்பிட வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக இதுபோன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளி்ல் அஸ்வினை நீக்கியது பெரிய தவறாகும்.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்