இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெய்லின் அன்றைய சதம் அவரது வழக்கமான ‘காட்டடி’ தர்பார் இன்னிங்ஸ் அல்ல. மாறாக அவரது ஒவ்வொரு இன்னிங்ஸிலுமே ஒரு முறைமை உள்ளது.
அந்த முறைமையை எதிரணியினர் அவ்வளவு எளிதில் புரிந்து கொண்டு முன் கூட்டியே திட்டமிட முடியாத வகையில் அதனை அவர் திறம்பட மறைத்து விடுகிறார். அதாவது தான் அவ்வாறு சாதுரியமாக மறைக்கிறோம் என்று அவருக்கே தெரியாமலேயே அவரிடம் ஒரு முறைமை உள்ளது.
ஐபிஎல், பிக்பாஷ் என்று ஏகப்பட்ட டி20 லீகுகளில் ஆடிவரும் கிறிஸ் கெய்ல் இவையெல்லாவற்றிலும் சர்வதேச டி20 உட்பட 17 சதங்களை இதுவரை எடுத்துள்ளார். இதில் 11 இன்னிங்ஸ்களில் அவர் நாட் அவுட் என்பதும் கவனிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக 239 டி20 போட்டிகளில் கிறிஸ் கெய்ல் 8,826 ரன்களை விளாசியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் பிராட் ஹாட்ஜ் உள்ளார். கெய்லின் சராசரி 43, ஸ்ட்ரைக் ரேட் 150. ஒட்டுமொத்தமாக 639 சிக்சர்களை அடித்துள்ளார்.
கெய்லிடம் ஒரு விஷயத்தை நாம் முன்னாள் மேற்கிந்திய தொடக்க வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸுடன் ஒப்பிடலாம். அதாவது டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் எந்த போட்டியில் அடித்து ஆடுவார், எந்த போட்டியில் நிதானம் கடைபிடிப்பார் என்று கூற முடியாது, இவரிடம் உள்ள இன்னொரு எதிர்பார்க்காத விஷயம் என்னவெனில் ஒரே இன்னிங்சில் திடீரென ஒரு 5-6 ஓவர்களுக்கு அடித்து நொறுக்குவார், பிறகு 20-30 பந்துகளில் சாதாரணமாக ஆடுவார்.
ஆனால் கெய்லைப் பொறுத்தவரை அவர் தன் அதிரடி உந்துதலை மறைத்து வைத்துக் கொள்கிறார், எந்த பவுலரைத் தாக்குவார் என்று எதிர்பார்க்க முடிவதில்லை. திடீரென ஒரு சாதாரண பவுலரை சிங்கிள்களாக எடுத்து அமைதிகாப்பார், ஆனால் சரி சாதாரண பவுலரையே அவர் நிதானமாக ஆடுகிறார் எனவே இந்த மூடில் நாம் நல்ல பவுலரைக் கொண்டு வரலாம் என்று ஒரு கேப்டன் முடிவெடுப்பாரேயானால் அது நாசத்தில் போய் முடிவதைப் பார்க்க முடிகிறது.
அன்று இங்கிலாந்துக்கு எதிராகக் கூட அவர் மர்லன் சாமுயேல்ஸ் ஆடும் போது மறுமுனையில் அப்பாவி போல் நின்று கொண்டிருந்தார், அவரைப்பொறுத்தவரையில் தான் இருக்கும் போது எதிர் முனை வீரரும் அடிக்க வேண்டியதுதான், ஏனெனில் அவர் விரைவு சிங்கிள்களை ஓடமாட்டார், 2 ரன்கள், 3 ரன்கள் ஒருபோதும் கெய்ல் அகராதியில் இருந்ததில்லை.
இங்கிலாந்துக்கு கொஞ்சம் கற்பனை வளம் இல்லை. மோர்கன் போன்றோர் அடிதாங்கிகள், இடிதாங்கிகள். அந்த அணிக்கே இப்படித்தான் நடக்கிறது. உலகக்கோப்பை 50 ஓவர் போட்டியில் 2015-ல் இங்கிலாந்து அன்று மெக்கல்லம்மிடம் சிக்கி சின்னாபின்னமானது, இந்த உலகக் கோப்பையில் கெய்லிடம் சிக்கிச் சின்னாபின்னமானது, 2007 டி20 கிரிக்கெட்டில் யுவராஜிடம் சிக்கி சின்னாபின்னமானது, முந்தைய தொடர்களை எடுத்துக் கொண்டால் பலமுறை ஜெயசூர்யாவிடமும், மேலும் பலமுறை கில்கிறிஸ்ட்டிடமும், லாராவிடமும் வாங்குவது அந்த அணியின் கிரிக்கெட் வரலாற்றின் அழிக்க முடியாத பக்கங்களாகும்.
ஒரு நல்ல கேப்டனாக இருந்தால், கெய்ல் போன்றவர்களை தொடக்கத்தில் அதிக பந்துகளை சந்திக்கச் செய்ய வேண்டும், பவுலர்களை மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும். மர்லன் சாமுயேல்ஸுக்கு சுலபமாக ஒரு சிங்கிளை விட்டுக் கொடுத்து கெய்லை 5 பந்துகளைச் சந்திக்க வைக்க வேண்டும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் வீசிப்பார்த்தால் நிச்சயம், அதுவும் அதிர்ஷ்டம்தான், கெய்ல் ஒரு பந்தில் அவுட் ஆக வாய்ப்புள்ளது. வாய்ப்புகளை கேப்டன் தான் உருவாக்க வேண்டும். மோர்கன் அப்படிச்செய்யவில்லை மாறாக கெய்ல் பேட்டிங் முனைக்கு வந்த தொடக்க பகுதிகளில் வைடாக வீசினர். இது ஒரு மோசமான உத்தி. கடைசி ஓவர் வீசுகிறோம் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் வைடாக வீசி தோனியை கட்டுப்படுத்துவது போல் செய்யலாம், முதல் 6 ஓவர்களில் வைடாக வீசினால்... அன்று நடந்தது சாமுயேல்ஸ் அடித்த அடியினால் கெய்ல் நம்பிக்கை பெற்றார்.
அதிக பந்துகளை கெய்ல் போன்ற வீரர்களை ரன்னர் முனையிலிருந்து பார்க்க அனுமதிப்பது தவறு. அதுதான் அன்று நடந்தது. கெய்லிடம் உள்ள ஒரு முறைமைக்கு இங்கிலாந்து அன்று தன்னையறியாமல் துணை போனது.
அன்று மட்டுமல்ல எந்த ஒரு டி20 மகா சுழற்றல் இன்னிங்ஸ்களிலும் கெய்ல் ஒரு முறைமையைச் செயல்படுத்தியே ஆடுகிறார். அன்று இங்கிலாந்துக்கு எதிராக பேக்புட்டே அவர் அதிகம் செல்லவில்லை ஃபிரண்ட் புட் ஷாட்களே பெரும்பங்கு வகித்தது. இது அவரது முறை. ஒரு சில இன்னிங்ஸ்களில் உதாரணமாக பிக் பாஷ் போன்ற தொடர்களில் பின்னங்காலை அதிகம் பயன்படுத்தி பவர் ஹிட்டிங் செய்வார்.
அவர் ஏதோ மூர்க்கமாக அடிப்பது போல் தெரியும் ஆனால் அதனை கூர்ந்து கவனித்தால் அவருக்கேயுரிய ஃபுட் வொர்க் இருக்கும். சேவாகை விட கெய்லிடம் ஃபுட் வொர்க் அதிகமே. இன்னும் ‘டைட்’ஆன உத்தி கெய்லினுடையது.
அன்று மெக்கல்லம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக சாதனை சதம் அடித்த போது, ‘ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரிக்கு அனுப்ப முடிவெடுத்தேன்’ என்றார் அது போன்ற எந்த வித முன் கூட்டிய திட்டம் கெய்லிடம் இல்லை, ஒரு அமைதியான செல்வாக்கு களத்தில் அவரது இருப்பு. மூர்க்கமாக எல்லா பந்தையும் மைதனத்துக்கு வெளியே அனுப்பவதல்ல அவரது முறைமை, அவரைக் கட்டுப்படுத்தினால் மரியாதை கொடுப்பார். உலகக்கோப்பையில் மொகமது ஷமி அப்படித்தான் அவரைக் கட்டுப்படுத்தினார். அன்று கூட ஜோர்டான் இரண்டு அற்புதமான யார்க்கர்களை வீசிய போது அவர் சுற்றியிருந்தால் பவுல்டு ஆகியிருப்பார் ஆனால் மரியாதையுடன் அதனை தடுத்தாடினார்.
பவுலர்கள் அவர் நிற்க நிற்க டென்ஷனாகி தவறுகளைச் செய்கின்றனர் இதனால் சாத்துமுறை நடக்கிறது. தனக்கான அதிரடி கணம் வரும் வரை காத்திருப்பார், அன்றும் கூட அடில் ரஷீத் வரும் வரை காத்திருந்தார். அதுவும் 2-வது ஓவரைத்தான் குறிவைத்தார். பிறகு பென் ஸ்டோக்ஸ், பிறகு மொயின் அலி என்று குறிவைத்தார்.
சிக்சர் அடிக்கும் வெறிக்கு நடுவே கூட கெய்ல் 18 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை, 14 சிங்கிள்கள் எடுத்துள்ளார். ஆனால் 2, 3 வேண்டாம் அதுதான் அவரது முறைமையின் அடிப்படை.
எனவே 48 பந்து சதத்தில் 18 பந்துகள் ரன் இல்லை, 14 சிங்கிள்கள், என்றால் அது எப்படி மூர்க்கமான அடியாகும், அவரது மூர்க்கத்திற்குப் பின்னால் ஒரு முறைமை ஒளிந்திருக்கிறது.
அந்த முறைமையை கண்டுபிடிக்கும் போதுதான் கெய்லை எதிரணியினர் தொடர்ச்சியாக சோபிக்க முடியாமல் செய்யலாம். மற்றபடி அவர் அவுட் ஆவதற்கு பெரும்பாலும் அவரேதான் காரணம் என்ற நிலை ஏற்படும், 2 போட்டிகள் ரன் குறைவாக எடுப்பார், மீண்டும் வந்து ஒரு அசுர சதம் எடுப்பார், எனவே அவரிடம் உள்ள மறைமுக முறைமையை சிதைக்காமல் எதிரணியினர் அவர் தவறு செய்து தானே அவுட் ஆக காத்திருக்க வேண்டியதுதான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago