பேட்ஸ்மென்கள், மொகமது சமியால் காலியான பாகிஸ்தான்

By ஆர்.முத்துக்குமார்

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் நேற்று வங்கதேச அணி நெருக்கடியை தைரியத்துடன் கடந்து பாகிஸ்தானை வீழ்த்தி இறுதியில் இந்தியாவை மீண்டும் சந்திக்கிறது.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் சொதப்ப, பீல்டிங்கும் மோசமாக அமைந்தது, தேவையில்லாத ஓவர் த்ரோக்கள், மிஸ்பீல்டுகள் சமியின் மோசமான 19-வது ஓவர் என்று பாகிஸ்தான் திக்கித் திணறி தோல்வியடைந்தது, ஆமிர் மட்டுமே மீண்டும் மீண்டும் அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார், ஆனால் மஹமுதுல்லா, மொகமது இர்பானை அடித்த எக்ஸ்ட்ரா கவர் சிக்ஸும், மஷ்ரபே மோர்டசா, ஆமிரை அடித்த 2 பவுண்டரிகளும் வங்கதேச வெற்றியை உறுதி செய்தன. பாகிஸ்தான் 129/7 என்று முடிய வங்கதேசம் 131/5 என்று வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.

முழுதும் புற்களே இல்லாத ஒரு பிட்சில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி, முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் மீண்டும் டாப் ஆர்டர் நொறுங்க பாகிஸ்தான் 8.2 ஓவர்களில் 28/4 என்று தட்டுத்தடுமாறியது. இத்தனைக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லை. டஸ்கின் அகமது, அல் அமின் ஹுசைன் சிறப்பாக வீசினர்.

குரம் மன்சூர் முதல் ஓவரை சாப்பிட்டார், 2-வது ஓவரின் முதல் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே எழும்ப குரம் மன்சூர் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்தார். 4-வது ஓவரில் ஷர்ஜீல் கான், அரபாத் சன்னி பந்தை சுற்று சுற்றினார் சிக்கவில்லை பவுல்டு ஆனார். இவர் 10 ரன்களில் ஒரு பவுண்டரி 1 சிக்சர் அடித்தார். மொகமது ஹபீஸ் 2 ரன்களில் மஷ்ரபே மொர்டாசாவிடம் எல்பி ஆனார். ஆனால் நிச்சயம் பந்து ஸ்டம்புக்கு மேலே செல்வது, அது நாட் அவுட், ஆனால் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. உமர் அக்மல் 4 ரன்களில் டஸ்கின் அகமதுவிடம் வீழ்ந்தார்.

பிறகு சர்பராஸ் அகமது (58 நாட் அவுட்), ஷோயப் மாலிக் (41) ஆகியோர் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 50 பந்துகளில் 78 ரன்களைச் சேர்த்தனர். ஷாகிபை மாலிக் நேராக நூல்பிடித்தாற்போல் ஒரு சிக்ஸ் அடித்தார், ஆஃப் திசையில் 3 பவுண்டரிகள் விளாசினார். பல ஷாட்கள் இந்திய முன்னாள் ஸ்டைலிஷ் வீரர் மொகமது அசாருதீனை நினைவூட்டியது. சர்பராஸ் அகம்து 2 சிக்சர்களை மிட்விக்கெட்டில் விளாசினார். 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அணியை மீட்ட ஷோயப் மாலிக் 5-வது விக்கெட்டாக வெளியேறினார். சர்பராஸ் அகமது லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு அடித்த பவுண்டரி மூலம் அரைசதம் எட்டினார்.

ஷாகித் அப்ரீடி புல்டாஸை நேராக கேட்ச் கொடுத்து ஒரு கேப்டனாக டக் அவுட் ஆனதும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் அணி ஒரு வழியாக 20 ஓவர்களில் 129/7 என்று முடிந்தது.

சவுமியா சர்க்கார், மஹமுதுல்லா அபாரம்:

தொடர்ந்து இறங்கிய வங்கதேச அணியில் சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிம் இக்பால் தொடக்கத்தில் களமிறங்கியதை காண முடிந்தது. அதோடு மட்டுமல்லாமல் அச்சுறுத்தும் மொகமது ஆமீரை முதல் ஓவரின் கடைசி பந்தில் ஒரு ஜெயசூரியா பாணி லெக் திசை பிளிக்கில் சிக்ஸ் அடித்தது ஆமீரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் 7 ரன்களில் இவர் மொகமது இர்பானின் அபாரமான இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆனார்.

அப்போது சபீர் ரஹ்மான், சவுமியா சர்க்காருடன் இணைந்தார். இருவரும் பொறுமையாக ஆடினர், விக்கெட்டுகளை மளமளவென இழக்காமல் பார்த்துக் கொண்டு ஸ்கோரை 46 ரன்கள் வரைக் கொண்டு சென்றனர். சபீர் ரஹ்மான் 15 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த போது ஷாகித் அப்ரீடி பந்தில் பவுல்டு ஆனார்.

முஷ்பிகுர் ரஹிம் களமிறங்கிய போது சவுமியா சர்க்கார் சில ஸ்ட்ரோக்குகளை ஆடத் தொடங்கினார், ஆமீர லெக்திசையில் அபார பவுண்டரி அடித்த அவர் அன்வர் அலியின் ஒரு ஓவரை தாக்கத் தொடங்கினார். குறிப்பாக மேலேறி வந்து மிட்விக்கெட்டில் அடித்த சிக்ஸ் அற்புதமானது என்பதோடு, எந்த பவுலரை அடித்துப் பார்க்கலாம் என்ற சாதுரியமும் தெரிந்ததற்கான அறிகுறியானது. பிறகு அதே ஓவரில் ஒரு பவுண்டரி வர அந்த ஓவரில் 15 ரன்களை வழங்கினார் அன்வர் அலி. இவர் 2 ஓவர்களில் 21 ரன்களை கொடுத்தார்.

பிறகு அப்ரீடி தவறாக லெக் திசையில் வீச ஒரு சக்தி வாய்ந்த ஸ்வீப் பவுண்டரி விளாசினார் சவுமியா சர்க்கார். இப்படியாக சவுமியா சர்க்கார் 47 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்த போது 13-வது ஓவரில் வங்கதேசம் 82/2 என்று இருந்தது வெற்றிக்கு 42 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போதுதான் மொகமது ஆமிர் ஆட்டத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். 14-வது ஓவரின் 2-வது பந்து அதிவேக யார்க்கராக மிடில் ஸ்டம்பில் அமைய ஸ்டம்ப் எகிறியது. முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்கள் எடுத்து ஷோயப் மாலிக்கின் ஒன்றுமில்லாத பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.ஆனார்.

15 ஓவர்களில் 90/4 என்று சற்றே நெருக்கடி ஏற்பட்டது. 16-வது ஓவரில் மொகமது சமி 5 ரன்களையே கொடுத்தார். 16-வது ஓவரில் 95/4. வெற்றிக்குத் தேவை 35 ரன்கள். கிரீஸில் மஹமுதுல்லா மற்றும் ஷாகிப் அல் ஹசன்.

இந்நிலையில்தான் மொகமது இர்பானின் பந்து ஒன்றை மஹமுதுல்லா அடித்த சிக்ஸ், இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே சிறந்த ஷாட் என்று கூறவைத்தது. தன்னைக் குறுக்காகக் கடந்து செல்லும் இர்பானின் பந்துக்கு சற்றே ஒதுங்கிக் கொண்டு அருமையாக மிட் ஆஃப் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் அடித்த ஷாட் சிக்ஸ் ஆனது, அதிர்ச்சிகரமான ஷாட், சற்றும் எதிர்பாராத ஷாட்.

3 ஓவர்களில் 26 ரன்கள் என்று இந்த சிக்ஸுக்கு பிறகே வங்கதேசத்துக்குச் சாதகமான தருணத்தில் மொகமது ஆமிரே மீண்டும் நம்பிக்கை அளித்தார். 18-வது ஓவரின் முதல் பந்து யார்க்கர் ரன் இல்லை. அடுத்த பந்து 8 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன் பவுல்டு ஆனார். வெறுப்படைந்து ஸ்கூப் ஷாட்டைத் தேர்வு செய்து பந்தை கோட்டை விட்டார். ஆமிரிடம் எப்போதும் அத்தகைய ஷாட்கள் பலிக்கப்போவதில்லை.

சரி பாகிஸ்தானை ஆமிர் தன் கடைசி ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் மஷ்ரபே மோர்டசா ஆமீரை அடித்த 2 பவுண்டரிகள் ஆட்டத்தை திசை திருப்பின.

ஷாகிப் அவுட் ஆனவுடன் அடுத்த பந்தை மோர்டசா சற்றே ஒதுங்கிக் கொண்டு ஒரு விளாசு விளாச பவுலருக்கும் மிட் ஆஃபுக்கும் இடையே பந்து பறக்க மொகமது சமியின் காலதாமதமான டைவால் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. இந்த இடத்தில் ஷாகித் அப்ரீடி கொஞ்சம் யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும், காரணம் யார்க்கர்களை வீசுகிறார் ஆமிர், நிச்சயம் ஒரு பந்தோ, இரண்டு பந்தோ ஓவர் பிட்சாக மாற வாய்ப்புள்ளது அப்போது ஆஃப் திசையில் செல்லவே வாய்ப்பு, இந்நிலையில் லாங் ஆஃபில் மொகமது சமியை நிறுத்தியிருந்தால் அது ஒரு ரன்னாகவே ஆகியிருக்கும், ஆனால் பவுண்டரியானது.

அடுத்தபந்தை ஆமிர் பவுன்சராக வீச லெக் திசையில் ஒதுங்கிய மோர்டசா, ஒதுங்கிய நிலையில் குனிந்த படியே மட்டையை மட்டும் சுழற்ற பைன் லெக் திசையில் ஒரு பவுண்டரி ஆனது. 8 ரன்கள் இந்த ஓவரில் வர, ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 112/5.

2 ஓவர்கள் 18 ரன்கள் என்றால் அது எந்த அணியும் வெற்றிபெறும் வாய்ப்புள்ள நிலையே. அப்போது மொகமது சமி மோசமாக ஒரு ஓவரை வீச நேர்ந்தது. முதல் 3 பந்துகள் யார்க்கர்கள் 3 ரன்களே வந்தது. 4-வது பந்து மஷ்ரபே அடித்த ஷாட் லாங் ஆஃபில் கேட்ச் ஆனது ஆனால் சமி மிக நீண்ட நோபாலை வீசியிருந்தார். அது 2 ரன்களானது. அதாவது பீல்டர் நோ-பாலை கவனிக்காமல் கொண்டாட்டத்தில் பந்தை தூக்கி எறிய இன்னொரு ரன் வந்தது. ஃப்ரீ ஹிட்டில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 5-வது பந்தை மஹமுதுல்லா நேராக தூக்கி அடித்து 2 ரன்கள் ஓடினார். அடுத்த பந்தும் சமி நோ-பால் வீச அது தேர்ட் மேன் திசையில் பவுண்டரி ஆனது மஹமுதுல்லா விளாசினார். ஷாகித் அப்ரீடி தேர்ட் மேன் இல்லாமல் பீல்டிங் அமைத்தது தவறாக முடிந்தது. 15 ரன்கள் அந்த ஓவரில் வர ஆட்டம் வங்கதேச வெற்றியை உறுதி செய்தது. கடைசி ஓவரை அன்வர் அலி வீச மிடில் ஸ்டம்பில் புல்டாஸ் மிட்விக்கெட் பவுண்டரியுடன் மஹமுதுல்லா வெற்றியைச் சாதித்தார் வங்கதேசம் இறுதிக்கு முன்னெறியது.

ஆட்ட நாயகனாக சவுமியா சர்க்கார் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்