கோபம், வெறுப்பு, அழுத்தம், எந்தவிதமான வெற்றிக் கொண்டாட்டமும் இல்லை, இறுகிய முகம், நடுவருடன் வாக்குவாதம் என இப்படித்தான் கோலியின் கேப்டன் பதவியின் கடைசி நாளும் முடிந்தது.
ஆர்சிபி அணியில் 11 ஆண்டுகள் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து கேப்டனாக இருந்து வரும் விராட் கோலியின் பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் கோலியால் ஒரு கோப்பையைக் கூட ஆர்சிபி அணிக்காக வென்று கொடுக்காமல் வெளியேறினார். 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருந்தபோதிலும் அதில் நினைவு கொள்ளக்கூடிய கடைசி நாள் கோலிக்கு மோசமாகவே அமைந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது, ஆர்சிபி அணியில் 30 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார் விராட் கோலி. அந்த சீசனில் 12 இன்னிங்ஸில் 165 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்தார்.
ஆனால், 2009-ம் ஆண்டு சீசனில் சற்று கோலியின் பேட்டிங்கில் முன்னேற்றம் தென்பட்டு, 246 ரன்கள் சேர்த்தார். 2010-ம் ஆண்டில் ஆர்சிபி அணியிலேயே 3-வது அதிகபட்சமாக ரன் சேர்த்த வீரராக கோலி 307 ரன்கள் சேர்த்தார்.
2011-ம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி அனைத்து வீரர்களையும் ஏலத்தில் கழற்றிவிட்டாலும், கோலியை மட்டும் தக்கவைத்தது. விராட் கோலியைத் துணை கேப்டனாக நியமித்தது. கேப்டன் வெட்டோரிக்குக் காயம் ஏற்பட்டதால், சில போட்டிகளுக்கு கோலி கேப்டனாகவும் செயல்பட்டார்.
அப்போது ஆர்சிபி பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்ஸ், எதிர்காலத்தில் ஆர்சிபி அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் கேப்டனாக கோலி இருப்பார் எனக் கணித்தார். அந்த சீசனில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தார்போல், கோலி 2-வது அதிகபட்ச ரன் சேர்த்த வீரராக மாறி 557 ரன்கள் குவித்தார். 2012-ம் ஆண்டு சீசனில் கோலி 364 ரன்கள் குவித்தார்.
2013்-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து கோலியின் கேப்டன் பயணம் தொடங்கியது. அப்போது இருந்து இந்த சீசன் வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி தொடர்கிறார். 2013-ம் ஆண்டில் கோலி தலைமையில் ஆர்சிபி அணி 5-வது இடத்தைப் பிடித்தது. பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட கோலி 634 ரன்கள் குவித்தார். இதில் 6 அரை சதங்கள் அடங்கும்.
அடுத்த ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி மோசமாக ஆடி 7-வது இடத்தைப் பிடித்தது, கோலி 359 ரன்கள் சேர்த்தார். 2015-ம் ஆண்டு சீசனில் கோலி தன்னுடைய ஆர்சிபி அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று பேட்டிங்கில் 505 ரன்களை கோலி குவித்தார்.
2016-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற கோலி 2-வது இடத்தைப் பெற்றுக் கொடுத்தார், அந்தத் தொடரிலும் 973 ரன்களை 16 போட்டிகளில் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்றார். அதுமட்டுமல்லாமல் நிரந்தரமாகவே ஆர்சிபி அணிக்காக விளையாடப் போவதாகவும் அந்த நேரத்தில் விராட் கோலி அறிக்கை வெளியிட்டார்.
2017-ம் ஆண்டு சீசனில் தோள்பட்டை வலி காரணாக கோலி பல போட்டிகளில் விளையாடாததால், ஆர்சிபி அணி அந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்தது. 10 போட்டிகளில் கோலி 308 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.
2018-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரூ.17 கோடிக்கு கோலியைத் தக்கவைத்தது. அந்த சீசனில் கோலி 530 ரன்கள் குவித்தார். அந்த சீசனிலும் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகாமல் 6-வது இடத்தைப் பிடித்தது. ஏறக்குறைய 2019-ம் ஆண்டுவரை ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கோலியால் அணியை அழைத்துச் செல்ல முடியவில்லை.
கேப்டனாக கோலி பலமுறை தோல்வி அடைந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக வெற்றி பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரராக கோலி உருவெடுத்தார். 2020-ம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியை கோலி ப்ளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.
2021-ம் ஆண்டு சீசனில் கோலி ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். 8 சீசன்களுக்கு கேப்டனாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற அழுத்தம், நெருக்கடி காரணமாக, 2021-ம் ஆண்டு சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது சுற்று தொடங்கும் முன் இந்த சீசனோடு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.
ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ள கோலி, அதில் 66 வெற்றிகள், 70 தோல்விகளைச் சந்தித்துள்ளார். கோலியின் வெற்றி சதவீதம் 50க்கும் கீழ் 48% மட்டுமே இருக்கிறது. இதில் 3 போட்டிகள் டையிலும், 4 போட்டிகளுக்கு முடிவு ஏதும் இல்லை.
ஆர்சிபி அணியோடு கடந்த 11 ஆண்டுகள் பயணத்தில் ஒரு வீரராக, பேட்ஸமேனாக கோலி எப்போதோ வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், கேப்டனாக பதவி ஏற்றபின் அவருக்குத் தொடர்ந்து தோல்விகள்தான் கிைடத்துள்ளன.
இந்திய அணிக்கு கேப்டனாக கோலி பொறுப்பற்றதிலிருந்து பல நாடுகளுடன் பல சீரீஸ் வெற்றிகளைப் பெற்றது. இங்கிலாந்துடன் வரலாற்று வெற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் இரு முறை டெஸ்ட் தொடர் வெற்றி என வரலாற்று வெற்றிகளை கோலி பெற்றுக் கொடுத்தார்.
ஆனால், ஐசிசி நடத்தும் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கோலி தலைமையில் வெல்லவில்லையே என்ற கரும்புள்ளி கோலியின் மீது விழுந்தது. அதனால் டி20 உலகக் கோப்பையோடு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகுகிறார்.
ஒட்டுமொத்தத்தில் கிங் கோலி தான்…. ஆனால், மகுடம் மட்டும் சூடவில்லை..
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago