ஆர்சிபிக்கு ஷாக் கொடுத்த சன்ரைசர்ஸ்: உம்ரான் , ஹோல்டர், புவி அசத்தல்: வெற்றியைக் கோட்டைவிட்ட ஏபிடி

By க.போத்திராஜ்


உம்ரான் மாலிக், ஹோல்டர், புவனேஷ்வர் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல்டி20 போட்டியின் 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது 142 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆறுதல் வெற்றி

இந்த வெற்றியின் மூலம் சன் ரைசர்ஸ் அணிக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்றாலும் வெளியேறும்போது வெற்றியுடன் வெளியேறினோம் என்ற ஆறுதல்பட்டுக்கொள்ளலாம். இதேபோன்ற திறமையான ஆட்டத்தை கடந்த லீக் போட்டிகளில் வெளிப்படுத்தியிருந்தால், ப்ளேஆஃப் சுற்றுக்குள் வர சன்ரைசர்ஸும் போராடியிருக்கும். சன்ரைசர்ஸ் அணிக்கு இந்தத் தொடரில் 3வது வெற்றியாகும்.

அதேநேரம், ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடித்துவிடலாம் என்று கற்பனையில் இருந்த ஆர்சிபியின் கனவு கலைந்துவிட்டது. அடுத்த போட்டியில் வென்றால் கூட 3-வது இடம் மட்டுமே ஆர்சிபிக்கு கிடைக்கும். தற்போதுஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே அணியை நல்ல ரன்ரேட்டில் வீழ்த்தும்பட்சத்தில் முதலிடத்தைப் பிடிக்கவும் முடியும். ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும்.

பந்துவீச்சாளர்களின் வெற்றி

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணியில் ஜேஸன் ராய்(44) வில்லியம்ஸன்(31) இருவரும் ஆட்டமிழந்தபின் எந்த பேட்ஸ்மேனும் ஒழுங்காக பேட் செய்யவில்லை. 141 ரன்களை டிபென்ட் செய்யும் நோக்கில் பந்துவீசி, சுருட்டிய பெருமை பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சேரும்.

குறிப்பாக ஹோல்டர் வீசிய 19-வது ஓவர், புவனேஷ்வர் வீசிய 20-வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இரு கேட்ச்சுகள், திருப்புமுனையான ரன் அவுட் செய்த கேப்டன் வில்லியம்ஸன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஏபிடி இருந்துமே தோல்வியா !!!!

அதிரடி வீரர், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய பேட்ஸ்மேன் எனச் சொல்லப்படும் ஏபிடி களத்தில் இருந்துமே ஆர்சிபி தோற்றுள்ளது. இந்த சீசனில் 2-வது சுற்று முழுவதுமே ஏபிடி சொதப்பலாக பேட் செய்து வருகிறார். அந்த சொதப்பலான பேட்டிங் நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது.

அதுமட்டுமல்லாமல் ஏபிடி போன்ற திறமையான வீரர்களை 3-வது வீரராக களமிறக்க வேண்டும். ஆனால், அவரை 6-வது வீரராகக் களமிறக்கியது கோலி கேப்டன்ஷிப்பின் மிகப்பெரிய தவறாகும்.

திக் திக் 3 ஓவர்கள்

கடைசி 3 ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. உம்ரான் மாலிக் வீசிய 18-வது ஓவரில் ஷான் பாஸ் அகமது 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.

ஹோல்டர் வீசிய 19-வது ஓவரில் ஷான்பாஸ் அகமது ஆட்டமிழந்தார், அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே ஹோல்டர் விட்டுக்கொடுத்து கட்டுக்கோப்பாக வீசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கார்டன், ஏபிடி களத்தில் இருந்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய ஓவரின் முதல் பந்தில் கார்டன் ரன் ஏதும் எடுக்கவில்லை, 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ஏபிடி சந்தித்தார், ஃபுல்டாஸாக வந்தபந்தை ஏபிடி தவறவிட்டார். 4-வது பந்தில் ஏபிடி சிக்ஸர் விளாச ஆட்டம் பரபரப்படைந்தது.

5-வது பந்தையும் புவனேஷ்வர் ஃபுல்டாஸா வீச ஏபிடி தவறவிட்டார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப் பந்தையும் புவனேஷ்வர் ஃபுல்டாஸாக வீச ஏபிடி ஒரு ரன் மட்டுேம சேர்த்ததால் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது.

புவிக்கு நம்பிக்கை

டி20 உலகக் கோப்பைப் போட்டி நெருங்கி வரும் நிலையில் புவனேஷ்வர் குமார்இதுபோன்று கட்டுக்கோப்பாகப் பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளது பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

உம்ரானுக்கு நல்ல எதிர்காலம்

உம்ரான் மாலிக் முதல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தனது 2-வது ஆட்டத்திலும் கட்டுக்கோப்பான மற்றும் துல்லியமானபந்துவீச்சை வெளிப்படுத்தி ஆர்சிபி பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். தான் வீசிய முதல் ஓவரிலேயே 141 கி.மீ வேகத்தில் வீசத் தொடங்கிய மாலிக், 4-வது பந்தில் பரத் விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்த ஓவரில் அதிகபட்சமாக 153 கி.மீ வேகத்தில் பந்துவீசி ஆர்சிபி பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். முதல் ஓவரில் ஒரு ரன்னும், 2-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே உம்ரான் மாலிக் வழங்கினார். 4 ஓவர்கள்முடிவில் 21 ரன்கள்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் 11 டாட் பந்துகள் அடங்கும். அடுத்த சீசனில் சன் ரைசர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட வேண்டிய வீரர் உம்ரான் மாலிக். ஒருவேளை இவரை விடுவித்தாலும், அடுத்த சீசன் ஏலத்தில் பிற அணிகள் உம்ரான் மாலிக்கை அள்ளிச்சென்றுவிடுவார்கள்.

விக்கெட் சரிவு

142 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. புவனேஷ்வர் குமார் தான் வீசிய முதல்ஓவரிலேயே விராட் கோலியை(5)கால் காப்பில் வாங்கவைத்து வெளியேற்றினார். அடுத்துவந்த கிறிஸ்டியன் ஒரு ரன்னில் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு படிக்கல், பரத் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரீகர் பரத் 12 ரன்னில் உம்ரான் மாலிக் வேகத்தி்ல வீழ்ந்தார். மேக்ஸ்வெல், படிக்கல் ஜோடி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். வழக்கம் போல் மேக்ஸ்வெல் அதிரடியாக பேட்டை சுழற்ற ரன்கள் வரத் தொடங்கின. மேக்ஸ்வெலின் சிக்ஸர், பவுண்டரியால் ஆர்சிபி அணிக்கு வெற்றி நம்பிக்கை கிடைத்தது.

மேக்ஸ்வெல் அதிரடி

மேக்ஸ்வெல் 25 பந்துகளில் 40 ரன்கள்(2சிக்ஸர்,3பவுண்டரி) சேர்த்திருந்தபோது, வில்லியம்ஸனால் ரன்அவுட் செய்யப்பட்டார். 4வது விக்கெட்டுக்கு மேஸ்வெல்,படிக்கல் ஜோடி54 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சிறிது நேரத்தில் படிக்கல் 41 ரன்கள் சேர்த்த நிலைியல் ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஷான் பாஸ் அகமது, டிவில்லியல்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடமுயன்றனர். ஷான்பாஸ் அகமது 14 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால் ஆர்சிபி தோல்வி அடைந்தது. டிவில்லியர்ஸ் 19 ரன்னிலும்,கார்டன் 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பேட்டிங் மோசம்

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்கள் ஜேஸன் ராய்,வில்லியம்ஸன் இருவர் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கிறார்கள். மற்ற இந்திய பேட்ஸமேன்கள் ஒருவர்கூட இரட்டை இலக்க ரன்களை தாண்டுவதே சிரமமாகஇருக்கிறது. இந்த ஆட்டத்திலும் ஜேஸன் ராயுடன் சேர்ந்து அபிஷேன் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கி பரிசோதிக்கப்பட்டது.

ஆனால், அபிஷேக் 13ரன்னில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், ஜேகன் ராய் ஜோடி நம்பிக்கையளித்தனர். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்திருந்தது.
58 பந்துகளில் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். வில்லியம்ஸன் 31 ரன்களிலும் ஜேஸன் ராய் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் ஆட்டமிழந்தபின் சன்ரைசர்ஸ் சரிவு தொடங்கியது. அடுத்த 7 பந்துகளில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்தது.

நடுவரிசை, கடைசி வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சாஹா(10), ஹோல்டர்(16), பிரியம் கார்க்(15), அப்துல் சமது(1) என வீணாக விக்கெட்டை இழந்தனர். சன்ரைசர்ஸ் அணி வில்லிம்ஸன், ஜேஸன் ராய் களத்தில் இருந்தபோது, அதன் ஸ்கோர் 150 ரன்களுக்கு மேல் உயரக்கூடும் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால், அதைவிட 20 ரன்கள் குறைவாகத்தான் கிடைத்தது.
ஆர்சிபி தரப்பில் ஹர்ஸல் படேல் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்