ஐபிஎல் டி20 தொடரில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையே நடுவர் எடுக்கும் முடிவுகள் வேறுபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரில் உள்நாட்டு நடுவர்களின் சொதப்பலான தீர்ப்புகள் பல நேரங்களில் போட்டியின் முடிவையே மாற்றிவிடுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்துள்ள இந்தக் காலத்தில் மைதானத்தில் பல்வேறு கோணங்களில் பல கேமராக்கள் இருந்தபோதிலும்கூட மூன்றாவது நடுவர் தொடர்ந்து சொதப்பி தவறான முடிவுகளை வழங்குகிறார்.
கள நடுவரும் சில நேரங்களில் தவறான முடிவை வழங்கி போட்டி திசை மாற வழிவகுத்து விடுகிறார். வைட் இல்லாத பந்துவீச்சு வைட் கொடுத்தலும், வைடாக வீசப்பட்ட பந்துக்கு வைட் இல்லை என்று கூறுவதும் சிக்கலான நேரத்தில் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்துவிடும்.
இந்த ஐபிஎல் சீசனில் நடுவரின் சொதப்பல் தீர்ப்புகள் அவ்வப்போது தொடர்ந்து வரும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஆட்டத்திலும் தவறான தீர்ப்பை வழங்கினர்.
தேவ்தத் படிக்கல் கையில் பட்டு விக்கெட் கீப்பர் ராகுல் பிடித்த பந்துக்கு மூன்றாவது நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். டிவி ரீப்ளேயில் அவுட் எனத் தெரிந்தும் மூன்றாவது நடுவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீனிவாசன் சொதப்பினார்.
கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 158 ரன்கள் இலக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துரத்திக் களமிறங்கியபோது மயங்க் அகர்வால், கிறிஸ் ஜோர்டன் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர்.
கடைசி ஓவரில் கிறிஸ் ஜோர்டன் ரன்களை எடுப்பதற்காக ஓடியபோது, பேட்டை கிறிஸ் கோட்டிற்கு வெளியே வைத்துவிட்டு ஓடினார் என நடுவர் நிதின் கூறி, ஒரு ரன்னைக் குறைத்தார். ஆனால், ஜோர்டன் அந்த தவறைச் செய்யவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. நடுவரின் தவறான தீர்ப்பால், சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. நடுவர் சரியான முடிவை அளித்திருந்தால், சூப்பர் ஓவர் வரை வந்திருக்காது, பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் சென்றிருக்கும்.
இந்நிலையில் நேற்று டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் பிராவோ அவுட்சைட் ஆஃப் திசையில் பந்து வீசினார். ஆனால், பந்து ஆடுகளத்தில் படாமல் சென்றது. இதுகுறித்து மூன்றாவது நடுவர் வைடும் தரவில்லை, நோ-பாலும் தரவில்லை. இது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
நடுவரின் சொதப்பலான தீர்ப்பு குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சியில் பேசுகையில், “பிராவோ வீசிய பந்து நோ-பால் எனத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இந்த முடிவு குறித்து டிவி நடுவர்கள் இருவிதமான முடிவுகளை எடுக்கிறார்கள். இந்தச் சூழலில் வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான வேறுபாட்டை நடுவர் முடிவுகள் ஏற்படுத்திவிடக் கூடாது.
அது நடக்கவும் கூடாது. இதுபோன்ற முடிவுகள் போட்டியை மாற்றிவிடக் கூடாது. நல்ல விஷயம் இந்த ஆட்டத்தில் டெல்லி வென்றது. ஏனென்றால், நடுவரின் தவறான முடிவு போட்டி முடிவை பாதிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மெயர், அஸ்வின் இருவரும் ஐபிஎல் இணையதளத்துக்கு அளித்த பேட்டியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளனர். அஸ்வின் கூறுகையில், “பிராவோ வீசிய பந்து அவுட்சைட், ஆஃப் சைட் கடந்து பிட்ச் ஆகிறது. இதற்கு நோ-பால் தர வேண்டும் அல்லது வைடு என அறிவிக்க வேண்டும். ஆனால், எதையுமே தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த ஹெட்மெயர், “நேர்மையாகக் கூறுகிறேன். பிராவோ வீசிய பந்து நோ-பால். ஆனால், நடுவரோ பந்து 2-வது லைனைக் கடந்துவிட்டது எனக் கூறுகிறார். எனக்குக் குழப்பமாக இருப்பதால் கூகுள் செய்து பார்க்கப் போகிறேன்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago