கே.எல்.ராகுலின் பொறுப்பான ஆட்டம், ஷாருக்கானின் கடைசி நேரஅதிரடி, ஷமி, அர்ஷ்தீப் சிங்கின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 45-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
முதலி்ல் ேபட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் 5 வெற்றிகள், 7 தோல்விகள் என மொத்தம் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 12 போட்டிகளில் 5 வெற்றிகள், 7 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் இரு போட்டிகளும் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானவை.
ஒரு அணியின் வெற்றியும், தோல்வி மற்றொரு அணிக்கு சாதகமாக அமையும் என்பதால், 4-வது இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியால், டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு அடுத்தார்போல் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்த 2-வது அணியாக டெல்லி கேபிடல்ஸ் மாறியுள்ளது.
ஆனால், புள்ளிகளின் அடிப்படையில் எந்த இடம் என்பது இனிவரும் போட்டிகளில் முடிவாகும். ஆர்சிபி அணிக்கும், டெல்லி அணிக்கும் இன்னும் தலா 3 போட்டிகள் இருப்பதால், அதில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் 2-வது மற்றும் 3-வது இடம் முடிவாகும்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த, பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 55 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து(2சிக்ஸர்,4பவுண்டரி) ராகுல் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராகக் களமிறங்கி 20-வது ஓவர் வரை நின்று அணியை வெற்றியின்அருகே வந்து கரை சேர்த்துச் சென்றார். ஏறக்குறைய ராகுல் 40 ஓவர்கள்வரை களத்தில் நின்று அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகன் விருது வழங்கவேண்டிய மற்ற இருவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் உள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங். இருவரும்தான் கடைசி நேரத்தில் கொல்கத்தா அணியின் ரன்ரேட் கடிவாளத்தை இழுத்துப்பிடித்துக் கட்டுப்படுத்தினர். கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் ஒருபவுண்டரிகூட அடிக்கவிடாமல் பந்துவீசியது கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு சிறப்பாகும்.
இந்திய அணிக்கு அடுத்த தலைமுறைக்கான வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஆல்ரவுண்டர்களாக கொல்கத்தா வீரர் வெங்கடேஷ்ஆகியோர் கிடைத்துள்ளார். இன்னும் மூத்த வீரர்களுக்கே வாய்ப்பு வழங்காமல் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வெங்கடேஷ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கடைசி நேரத்தில் தமிழக வீரர் ஷாருக்கான் அதிரடியாக விளாசிய 2சிக்ஸர்களும், ஒருபவுண்டரியும் ஆட்டத்தின் போக்கை பஞ்சாப் அணியின் பக்கம் திருப்பியது. ராகுல் நிதானமாக பேட் செய்துவந்த நேரத்தில் வெற்றிக்கு வழிகாட்டுகிறேன் என்ற ரீதியில் ஷாருக்கான் துணிச்சலாக ஷாட்களை அடித்தது பாராட்டுக்குரியது.
அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைய் சாய்த்தார்.
கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனுக்கு அணியில் சக வீரர் என்பதைவிட, கேப்டன் என்ற மேலாண்மை பணி மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சீசனில் மோர்கன் மொத்தமே 109 ரன்கள்தான் அடித்துள்ளார், அதில் ஒருபோட்டியில் 47 ரன்கள் அடித்துள்ளார். 12 போட்டிகில் மோர்கனின் சராசரி 10 ரன்கள் என்ற வீதத்தில்தான் இருக்கிறது.
மோர்கனைவிட மோசமான நிலையில் இருக்கிறது தோனியின் நிலைமை. தோனி இதுவரை 11 போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் இதில் அதிபட்சம் 18 ரன்கள்தான்.
166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. அகர்வால், ராகுல் நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளே ஓவர்கள் வரை ராகுல் நிதானமான ஆட்டத்தையே கையாண்டார், அகர்வால் அதிரடி ஆட்டத்தை கையாண்டு சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் அகர்வால் 31 ரன்கள் சேர்த்திருந்தார்.
அரைசதத்த நோக்கி முன்னேறிய அகர்வால் 40 ரன்னில் வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த பூரன் 12 ரன்னில் வருண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ராகுலுடன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். மார்க்ரம் பெரிதாக ரன் அடிக்கவில்லை என்றாலும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ராகுலுக்கு வழங்கினார். ராகுலின் நிதான ஆட்டத்தால் ஸ்கோர் 100 ரன்களை 13 ஓவர்களில் எட்டியது. ராகுல் 43 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ராகுல் அரைசதத்தை எட்டியபோது 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருந்தார்.
நிதானமாக பேட் செய்துவந்த மார்க்கரம் 18 ரன்னில் நரேன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த தீபக் ஹூடாவும் 2ரன்னில் ஏமாற்றினார்.
அடுத்துவந்த தமிழக வீரர் ஷாருக்கான், ராகுலுடன் சேர்ந்தார். தான் சந்தித்த 2-வது பந்திலேயே ஷிவம் மாவி பந்துவீச்சில் லெக் திசையில் ஒரு சிக்ஸர் விளாசினார். கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.
சவுதி வீசிய 18-வது ஓவரில் ஷாருக்கான் அடித்த பவுண்டரி உள்ளிட்ட 9 ரன்ளகளை பஞ்சாப் அணி சேர்த்தது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஷிவம் மாவி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் ராகுல் கவர்திசையில் ஒரு பவுண்டரி விளாசினார். 4-வது பந்தில் ராகுல் ஒரு ரன்னும், 5-வது பந்தில் ஷாருக்கான் ஒரு ரன்னும் எடுத்தனர். கடைசிப்பந்தில் ராகுல் மீண்டும் பவுண்டரி அடிக்க 10 ரன்கள் பஞ்சாப் அணிக்குக் கிடைத்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் பஞ்சாப் அணிக்குத் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வெங்கடேஷ் வீசினார். முதல் பந்தில் ஷாருக்கான் ஒரு ரன் எடுக்க 2-வது பந்தில் ராகுல் (67) லாங் ஆஃபில் மாவியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. வெங்கடேஷ் வீசிய 3-வது பந்தில் ஷாருக்கான் அவுட்சைட் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாச ஆட்டம் வெற்றியில் முடிந்தது.
அதிரடியாக ஆடிய தமிழக வீரர் ஷாருக்கான் 9 பந்துகளில் 22 ரன்கள்(ஒருபவுண்டரி, 2சிக்ஸர்கள்) ஆலன் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். 19.3 ஓவர்களில் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் வருண் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஷுப்மான் கில்(7) இந்த முறையம் சொற்ப ரன்னில் வெளிேயறினார். ஆனால், 2-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் , திரிபாதி கூட்டணி பஞ்சாப் கிங்ஸ் பந்துவீ்ச்சாளர்களுக்கு கிலி ஏற்படுத்தினர். அதிலும் வெங்கடேஷ் ஆட்டம் எந்தவிதமான சிரமமும் இன்றி அனாயசமாக இருந்தது. பஞ்சாப் வீரர்களின் பந்துவீ்ச்சை இருவரும் நொறுக்கி எடுத்து ரன்ரேட் குறையாவிடாமல் கொண்டு சென்றனர். பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக ஆடிய திரிபாதி 34 ரன்னில்(ஒருசிக்ஸர்,3பவுண்டரி) பிஸ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ராணா, வெங்கடேஷுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் 39 பந்துகளில் இந்த சீசனில் தனது 2வது அரைசதத்தை நிறைவு செய்தார். ராணாவும் தனது பங்கிற்கு சிக்ஸர் பவுண்டரிகளாக விளாச ரன் ரேட் சீராக உயர்ந்தது.
வெங்கடேஷ் 67 ரன்னில்(49பந்து, 9பவுண்டரி,ஒருசிக்ஸர்) பிஸ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் நடுவரிசையில் வந்த கேப்டன் மோர்கன்(2), தினேஷ் கார்த்திக்(11),ஷீபர்ட்(2) என நம்பிக்கையளிக்க தவறினர்.
ராணா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ், ராணா இருக்கும் போது இருந்த ரன்ரேட்டில் சென்றிருந்தால் கொல்கத்தா அணி 180 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும். ஆனால், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கத் தவறியதால், 20 ரன்கள் குறைவாக எடுத்தது. கடைசி 16ரன்களுக்குள் மட்டும் 3 விக்ெகட்டை கொல்கத்தா அணி இழந்தது.
பஞ்சாப் அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், பிஸ்னோய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago