ஜேஸன் ராய், வில்லியம்ஸன் அரைசதம்: நீண்டகாலத்துக்குப்பின் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி: 3 அணிகளுக்கு மகிழ்ச்சி

By க.போத்திராஜ்


ஜேஸன் ராய், கேன் வில்லியம்ஸன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் அணி நீண்டகாலத்துக்குப்பின் 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது. ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பிலிருந்து சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்டது என்றாலும் இன்னும் சன்ரைசர்ஸ் அணிக்கு 4 போட்டிகள் உள்ளன.

இந்த 4 போட்டிகளிலும் வென்றாலுமப்ளே ஆஃப் செல்ல முடியாதநிலைதான் சன்ரைசர்ஸ் அணிக்கு இருக்கிறது, அடுத்த 4 போட்டிகளும் வலிமையான அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ஆர்சிபி ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதால் வெற்றி பெறுவது எளிதானது அல்ல. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணிக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்றாலும், ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது.

இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி மகிழ்ச்சி அடைகிறதோ இல்லையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மகிழ்ச்சி அடையும். ஒருவேளை ராஜஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால், 10 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு நகர்ந்திருக்கும். 8 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் இடையே கடுமையான போட்டி உருவாகும். ஆனால், ராஜஸ்தான் அணி தோற்றதால், தற்போது 4 அணிகளுமே 8 புள்ளிகளுடன் இருக்கின்றன. இந்த 4 அணிகளுக்குமே அடுத்துவரக்கூடிய 4 போட்டிகளும் மிகவும் முக்கியமானவை.

டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே அணிகள் ஏறக்குறைய தங்களின் ப்ளேஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்டன. ஆர்சிபி அணியும் ப்ளேஆஃப் சுற்றின் கதவைத் தட்டிவிட்டது என்றாலும் அதற்கானை உறுதியைப் பெறவில்லை. இன்னும் ஒரு வெற்றி ஆர்சிபியின் இடத்தை உறுதி செய்யும். ஆனால்,4-வது இடத்துக்கான போட்டியில் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும், நிகர ரன்ரேட்டை ஒவ்வொரு போட்டியிலும் தக்கவைத்து வெல்வதுதான் ப்ளே ஆஃப் சுற்றை பிரகாசப்படுத்தும்.

சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த நிலையில் அந்த அணிக்கு வெற்றியை ருசிக்க வைத்தது ஜேஸன் ராயின் அரைசதம்தான். ஐபிஎல் 2-வது சுற்று தொடங்கியபின்பும் ஜேஸன் ராய்க்கு வாய்ப்பு அளிக்காமல் இருந்த தவறை சன்ரைசர்ஸ் அணி உணர்ந்துவிட்டது.

தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியில் இறங்கிய ஜேஸன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 8பவுண்டரி அடங்கும். சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த ராய்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. ரஷித் கான் தவிரகட்டுக்கோப்பாக யாரும் பந்துவீசவில்லை. புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் அணியில் இருக்கிறாரா என்று தேடும் அளவில்தான் அவரின் பந்துவீச்சு அமைந்துள்ளது.

டி20உலகக் கோப்பைக்கு தேர்வாகியுள்ள புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு சன்ரைசர்ஸ் அணியில் பேசப்படும் அளவில் இருக்க வேண்டும் ஆனால், ஐபிஎல் 2-வது சுற்று தொடங்கி இதுவரை புவனேஷ்வர் குமார் பாராட்டும்படியான ஸ்பெல்லை வீசவில்லை என்பது வேதனைக்குரியது.

பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணி வெளிநாட்டு வீரர்களை நம்பியே இருந்து வருகிறது. கடந்த சீசனிலும், இந்த சீசனிலும் இதுவரை முகமது நபிக்கு வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணி வழங்கவில்லை. சிறந்த ஆல்ரவுண்டரான அவரை பயன்படுத்தாமல் இருப்பது ஏன் எனத் தெரியவில்லை.

ஃபார்மில் இல்லாத வார்னருக்கு வாய்ப்பு கொடுத்து ஜேஸன் ராயை மறந்தனர். ஆனால், முதல் போட்டியை சரியாகப் பயன்படுத்திய ஜேஸன் ராய், முதல் விக்கெட்டுக்கு விருதிமான் சாஹாவுடனும், 2-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸனுடனும் சேர்ந்து தலா 57 ரன்கள் சேர்த்து நல்ல பார்டனர்ஷிப் அமைத்தார்.

சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்குச் செல்ல முக்கியக் காரணமாகவும் ஜேஸன் ராய் அமைந்தார்.
கேப்டன் கேன் வில்லியம்ஸன் தனக்கே உரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஜேஸன் ராய், வில்லியம்ஸன் 57 ரன்கள் சேர்த்தனர்.

சன்ரைசர்ஸ் அணிக்காக தனது முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ஜேஸன் ராய் தன்னை வாங்கியது சரியானதுதான் என்பதை நிரூபித்தார். அதிலும் கிறிஸ்மோரிஸ் வீசிய 5-வது ஓவரில் 4 பவுண்டரிகள் உள்பட 18 ரன்களை ராய் விளாசித் தள்ளினார்.

வில்லியம்ஸனுடன் ராய் ஜோடி சேர்ந்தபின் சன்ரைசர்ஸ் ரன் ரேட் ஓவருக்கு 10 ரன் வீதம் எகிறது. இந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் 10 ரன்கள் வரை சென்றது இதுதான் முதல்முறையாகும்.
ஜேஸன் ராய் 55 ரன்கள் சேர்த்திருந்தபோது, ராகுல் திவேட்டியா பந்துவீச்சில் யாஹஸ்வி ஜெய்ஸ்வால் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால், சேத்தன் சக்காரியா பந்துவீச்சில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ராய் 60ரன்னில் வெளியேறினார்.

அடுத்துவந்த பிரியம் கார்க் ரன்ஏதும் சேர்க்காமல் முஸ்தபிசுர் ரஹ்மான்பந்துவீச்சில் அவரிடமே கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வந்த அபிஷேக் சர்மா, வில்லியம்ஸனுடன் சேர்ந்து அதிரடியில் இறங்கினார்.

இளம்வீரர் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, சிக்ஸர் உள்பட 21 ரன்கள் சேர்த்தார், வில்லியம்ஸன் 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 18.3 ஓவர்களில் 3 விக்ெகட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை கேப்டன் சாம்ஸன் 2-வது அரைசத்தை இந்த ஆட்டத்தில் அடித்தும் வெற்றியைப் பெற முடியவில்லை. கட்டுக்கோப்பான பந்துவீச்சு இல்லாததே வெற்றியை தக்கவைக்க முடியாமைக்கு காரணம். உதாரணமாக, சன்ரைசர்ஸ் அணி உதிரிகளாக 7 ரன்கள் வழங்கியது, ஆனால், ராஜஸ்தான் அணி 17 ரன்களை உதரிகளாக வழங்கியது. டிபென்ட் செய்யக்கூடிய ஸ்கோரை ராஜஸ்தான் அணி பெற்றபோதிலும் கட்டுக்கோப்பான பந்துவீச்சு இல்லாதது தோல்விக்கு முக்கியக் காரணம்.

இந்த சீசனில் அதிகமான விலைக்கு வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் 2-வது சுற்று தொடங்கியபின் இதுவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பெரிதாக ஏதும் ராஜஸ்தான் அணிக்குச் செய்யவில்லை. தென் ஆப்பிரி்க்க அணியில் மார்க்கெட் போன வீரர், ஒதுக்கிவைக்கப்பட்ட வீரராக இருக்கும் மோரிஸை விலைக்குவாங்கி ராஜஸ்தான் சுமையாக வைத்துள்ளது. கரீபியன் லீக்கில் கலக்கிய லிவிஸ் ஐபிஎல் தொடருக்கு வந்து சொதப்பி வருகிறார்.

சம்ஸனுக்கு துணையாக ஜெய்ஸ்வால், லாம்ரோர் இருவர் மட்டுமே ஓரளவு ஒத்துழைத்து பேட் செய்தனர். 2-வது விக்கெட்டுக்கு சாம்ஸனுடன், ஜெய்ஸ்வால் சேர்ந்து 56 ரன்கள் சேர்த்துப் பிரி்ந்தார். 4-வது விக்கெட்டுக்கு சாம்ஸன் லாம்ரோர் கூட்டணி 84 ரன்கள் சேர்த்தனர். இரு பார்ட்னர்ஷிப்தான் ரன் சேர்க்க காரணமாக இருந்தது.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லிவிஸ்டோன், ரியான் பராக் இதுவரை 2-வது சுற்றில் ஒரு போட்டியில்கூட சொல்லிக்கொள்ளும் விதமாக விளையாடவில்லை. ராஜஸ்தான் அணியின் ஒட்டுமொத்த சுமையையும் கேப்டன் சாம்ஸன் சுமக்க முயல்கிறார் அது பல நேரங்களில் தோல்வியில்தான் முடிகிறது.

பந்துவீச்சிலும் 6 வீரர்களைப் பயன்படுத்தியும்,ஜேஸன் ராய், வில்லியம்ஸன் கூட்டணியை நீண்டநேரமாகப் பிரிக்க முடியவில்லை. இந்தக் கூட்டணியை விரைவாகப் பிரித்திருந்தால், ராஜஸ்தான் வென்றிருக்கும். ராஜஸ்தான் அணியில் முஸ்தபிசுர் ரஹ்மான், கிறிஸ் மோரிஸ் இருவர் மட்டுமே சர்வதேச வீரர்கள் ஓரளவு அனுபவமுடையவர்கள் மற்ற பந்துவீச்சாளர்களான சேத்தன் சக்காரியா, உனத்கத், திவேட்டியா ஆகியோர் சர்வதேச அனுபவம் பெரிதும் இல்லாதவர்கள். பல் இல்லாத பந்துவீச்சை வைத்துக் கொண்டு கேப்டன் பதவி சாம்ஸனுக்கு முள்கிரீடமாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்