வெளியேறியது சன்ரைசர்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: ஹோல்டர் போராட்டம் ;முடிவு தவறு: ஷமி, பிஷ்னாய் மிரட்டல்

By க.போத்திராஜ்

முகமது ஷமி, ரவி பிஷ்னாய் ஆகியோரின் பந்துவீச்சால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரசைர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்து 5 ரன்னில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் 4 வெற்றிகள், 6 தோல்விகள் என 8 புள்ளிகளுடன்5-வது இடத்தில் இருக்கிறது.

வெளியேறியது சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த 9 போட்டிகளில் இது 8-வது தோல்வியாகும். ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பிலிருந்து சன்ரைசர்ஸ் அணி வெளியேறிவிட்டது.

இனிமேல் அடுத்துவரும் போட்டிகள் அனைத்திலும் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்வது கடினம். சிஎஸ்கே புத்துயிருடன் வந்தது போன்று சிறந்த வீரர்களுடன் அடுத்த ஆண்டு சீசனை சன்ரைசர்ஸ் சந்திக்கலாம். இனிவரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி பெறும் வெற்றிகள் எந்த விதத்திலும் உதவாது, ஆனால், மற்ற அணிகளின் ப்ளேஆஃப் சுற்றைப் பாதிக்கும்.

ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட மிகக் குறைவான ஸ்கோர், அந்த குறைவான ஸ்கோரையும் ேசஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்த முதல் அணி சன்ரைசர்ஸ் அணியாகும்.

ஷமி, ரவி மிரட்டல்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். அதிலும் குறிப்பாக முகமது ஷமிதான் காரணகர்த்தாக இருந்தார். தொடக்கத்திலேயே வார்னர், வில்லியம்ஸன் விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் தோல்விையஉறுதி செய்தார். 4 ஓவர்கள் வீசிய ஷமி 17 டாட்பந்துகள் ஒரு மெய்டன் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த சீசனில் 2-வது பகுதியில் முதல்முறையாக விளையாடிய ரவி பிஸ்னாய் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் சரிவுக்கு காரணமாகினார். அர்ஷ்தீப் தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த 3 பேரும் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு முக்கியமானவர்கள்.

125 ரன்கள் அடித்ததே ஷார்ஜா போன்ற சிறிய மைதானத்தில் மிகமிகக் குறைவான ஸ்கோர். அந்த ஸ்கோரையும் எங்களால் டிபென்ட் செய்ய முடியும் என்று நிரூபித்த பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகள்.

ரன் சேர்க்க கடினம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் ரன் சேர்க்க கடினமான மைதானம் ஷார்ஜாதான். இந்த மைதானத்தில் 125 ரன்களைக் கூட சேஸிங் செய்ய முடியாமல் சன்ரைசர்ஸ் மைதானத்தின் தன்மையை நிரூபித்துவிட்டது.

சேஸிங்கின் போது பந்து நின்று வரும் என்பதால், அதை பேட்ஸ்மேன்கள் கணித்து, பொறுமையாக ஆட வேண்டும். அதை ஜேஸன் ஹோல்டர் சிறப்பாகச் செய்தார், மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் செய்யவில்லை.

ஆட்டநாயகன்

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்காகக் கடைசி வரை போராடிய அந்த அணி வீரர் ஜேஸன் ஹோல்டர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹோல்டர், 29 பந்துகளில் 5 சிக்ஸர் உள்பட47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

திக்திக் கடைசி இரு ஓவர்கள்

சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் அர்ஷ்தீப் சிங் வீசி, வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை, நாதன் எல்லிஸ் வீசினார்.

இதில் முதல் பந்தில் புவனேஷ்வர் ஒரு ரன்னும், 2-வது பந்தில் ஒரு இமாலய சிக்ஸரை ஹோல்டர் விளாச ஆட்டம் பரபரப்படைந்தது. அடுத்த இரு பந்துகளில் ஹோல்டர் ஸ்ட்ரைக்கை புவனேஷ்வரிடம் கொடுக்கவில்லை. 5-வது பந்து வைடாகச் சென்றது,கடைசிப்பந்தில் 2 ரன்கள் மட்டும் ஹோல்டர் சேர்்க்கவே 5 ரன்னில் சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தது.

மோசமான சீசன்

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த சீசனின் நடுப்பகுதியில் டேவிட் வார்னர் கேப்டன்ஷிப் மாற்றப்பட்டது முதலே அணியின் ஸ்திரத்தன்மையில் ஆட்டம் வந்துவிட்டது. இந்த சீசனில் இதுவரை வார்னர் ஒரு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் விதத்தில் ஸ்கோர் செய்யவி்ல்லை, வார்னர் இருக்கிறரா என்ற கேள்வி எழும் அளவில்தான் அவரின் செயல்பாடு இருந்து வருகிறது.

நடுவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் எனச் சொல்லப்படும் கேன் வில்லியம்ஸனும் கடந்த 2 போட்டிகளாக சொதப்பது அணியின் அஸ்திவாரமே ஆட்டம்கண்டதுபோல் அமைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த இரு நட்சத்திர பேட்ஸ்மேன்கள்தான் அணியின் பலம் இருவரையும் கழற்றிவிட்டாலே எதிரணிக்கு வெற்றிக்கான நம்பி்க்கை கிடைத்துவிடும். அதை பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் முகமது ஷமி சிறப்பாகச் செய்து வெற்றிக்கு வழிகாட்டினார்.

பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி வெறும்20 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்ப்ளேயில் அடிக்கப்பட்ட மிகக் குறைவான ஸ்கோர் இதுவாகும்.

மற்ற வகையில் கடந்த சீசனைப் போல் மணிஷ் பாண்டே இன்னும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பவில்லை.இந்தப் போட்டியிலும் பாண்டே(13) ரன்னில் வெளிேயறினார்.

8 ஓவர்களில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த சன்ரைசர்ஸ் அணி 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்து தடுமாறியது. ஜேஸன் ஹோல்டர் களத்துக்கு வந்து சில சிக்ஸர்களைப் பறக்கவி்ட்டபோதுதான் ஆட்டத்தில் அனல் பற்றியது.

கேதார் கதை முடிந்ததா

ஏறக்குறைய கேதார் ஜாதவின் ஐபிஎல் வாழ்க்கை இந்த சீசனோடு முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம். சிஎஸ்கே அணியில் இருந்தவரை தோனியின் பெயரைக் கூறி, இந்திய அணியிலும் இடம் பெற்று காலத்தை ஓட்டினார். ஆனால், சிஎஸ்கே அணியைவிட்டு வந்தாலும் தான்திறமையான பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்க கேதார் ஜாதவ் தவறிவிட்டார்.

அடுத்த சீசனுக்காக ஏலத்தில் நிச்சயம் கேதார் ஜாதவ் விலைபோகாத சரக்காக மாறுவார் என்பதில் சந்தேகமில்லை. இந்த சீசன் முழுவதுமே ஜாதவ் ஏதாவது செய்தாரா என்றால் ஒன்றுமில்லை, இந்த ஆட்டத்திலும் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விருதிமான் சாஹா 31 ரன்னில் கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆகினார். ஹோல்டருக்கு துணையாக அவசரப்படாமல் சஹா நின்றிருந்தால்ஒருவேளை சன்ரைசர்ஸ் வென்றிருக்கலாம்.

ஹோல்டர் செய்தது சரியா

வெற்றிக்காக ஹோல்டர் முயற்சி செய்தது பாராட்டுக்குரியதுதான். ஆனால், கடைசிஓவரில் புவனேஷ்வர் குமாருடன், ஹோல்டர் ஸ்ட்ரைக்கில் இருந்தார். இரு 3-வது, 4-வது பந்துகளில் ரன்அடித்தும் சிங்கில் அடுத்து புவனேஷ்வரிடம் ஸ்ட்ரைக்கை வழங்க ஹோல்டர் மறுத்துவிட்டார்.

புவனேஷ்வர் சிறந்த ஆல்ரவுண்டர், தோனியுடன் சேர்ந்து ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார், அரைசதம் அடித்துள்ளார் என்பதை ஹோல்டர் மறந்துவிட்டார். ஒருவேளை ஹோல்டர் இரு பந்துகளில் ஒரு பந்து புவனேஷ்வர் குமாரிடம் சென்று ஒருபவுண்டரி, ஒரு ரன் எடுத்திருந்தால்கூட சன்ரைசர்ஸ் வென்றிருக்குமே.

தன்னம்பிக்கை பந்துவீச்சு

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் ஷமி, பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் ஆகிய 3 பேருக்கும் சல்யூட் செய்யலாம். 125 ரன்களை டிபென்ட் செய்ய முடியுமா என கேப்டன் ராகுலே நினைத்திருக்கமாட்டார். ஆனால், நினைக்காதது நடந்துவிட்டது. இதற்கு சன்ரைசர்ஸ் அணியின் நம்பிக்கையிழந்த பேட்டிங்கும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் திறமையான, சிறந்த பந்துவீச்சுமே காரணம்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை பஞ்சாப் அணியின் முக்கியத் தூண்கள் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் இருவருமே ஜொலிக்கத் தவறினர். ராகுல்(21) ரன்னிலும் அகர்வால்(5) ரன்னிலும் வெளியேறினர்.

பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எந்த வீரரும் நல்ல பார்டனர்ஷிப் அமைக்காததுதான் ஸ்கோர் குறைவுக்கு முக்கியக் காரணம். இதற்கு ஒட்டுமொத்தமும் பேட்ஸ்மேன்கள் மட்டுமே பொறுப்பாகும்

யுனிவர்ஸ் பாஸ் என்று கூறிக்கொள்ளும் கிறிஸ் கெயிலும் 14 ரன்கள்சேர்த்த நிலையில் ரஷித்கான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். நிகோலஸ் பூரான் தொடர்ந்து சொதப்பிவருகிறார், இந்த ஆட்டத்திலும் 8 ரன்னில் ஏமாற்றமளித்தார். பூரனுக்குப் பதிலாக அடுத்த போட்டியில் வேறு வீரரைக் களமிறக்கலாம். எய்டன் மார்க்ரம்(27), தீபக் ஹூடா(13), எல்லிஸ்(13) என எந்த வீரரும் நிலைத்து பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை.

கடந்த ஆட்டத்தில் 49 ரன்கள் அடித்த ராகுல் இந்த போட்டியில் 21ரன்னில் ஹோல்டர் வீசிய முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். மயங்க் அகர்வால் கடந்த ஆட்டத்தில் 67 ரன்கள் சேர்த்தநிலையில் இந்த ஆட்டத்தில் 5 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் கடுமையாக முயன்றுமே பஞ்சாப் அணி 14 ரன்கள் மட்டுமே புவனேஷ்வர் ஓவரில் எடுத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்