கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியது.
முதலில் பேட் செய்த ஆப்கான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 என்ற ஒரு நல்ல ஸ்கோரை எட்ட, தொடர்ந்து ஆடிய இலங்கை தில்ஷானின் அமைதியான 83 ரன்களினால் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆனால் ஆப்கானின் விடாமுயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. பேட்டிங்கில் மோசமாக தொடங்கினாலும் பிறகு ஸ்திரமாகி கடைசி 10 ஓவர்களில் 106 ரன்கள் விளாசி 153 ரன்கள் எடுத்தது, இலங்கை அணி எதிரபாராதது. அதே போல் தில்ஷன், சந்திமால் அதிரடி தொடக்கம் (5 ஓவர்களில் 41/0) கொடுத்த பிறகு ஆப்கான் அணி விடா முயற்சியுடன் திறமையும் புத்திசாலித்தனமும் கலந்து பந்து வீசியது.
ஆனால் இத்தகைய அணிகளுக்கே உள்ள குறைபாடு பீல்டிங். அது நேற்று ஆப்கானுக்கு கை கொடுக்கவில்லை. சாதாரணமாக தடுத்து 1 ரன் ஆகவேண்டியதெல்லாம் பவுண்டரி ஆனது. முதலில் 14-வது ஓவரில் கரிம் சாதிக் என்ற வீரர் டீப் மிட்விக்கெட்டில் சாதாரணமாகத் தடுத்திருக்க வேண்டிய பந்தை பவுண்டரிக்கு விட்டார்.
பிறகு 16-வது ஓவரிலும் பீல்டிங்கின் அடிப்படை எதுவும் இல்லாமல் தவ்லத் சத்ரான் இதே தவறை டீப் ஸ்கொயர்லெக்கில் செய்தார். மீண்டும் தேர்ட்மேனில் பதிலி பீல்டர் 1 ரன்னை பவுண்டரியாக்கினார். இந்த 3 பந்துமே 3 ரன்கள்தான் வந்திருக்க வேண்டும் ஆனால் 3 பவுண்டரிகளானது.
சந்திமால் 18 ரன்களில் மொகமது நபி பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று கேட்ச் கொடுத்தார். 6 ரன்கள் எடுத்த திரிமானே, லெக்ஸ்பின்னர் ரஷித் கான் பந்தை கவர் டிரைவ் ஆடும் முயற்சியில் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.
ஆனால் தில்ஷன் தொடர்ந்தார், ஒரு ஸ்கூப் சிக்சருடன் இரண்டு சிக்சர்களை தவ்லத் சத்ரானை அடித்தார். ஹமித் ஹசனை அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்தார். ஒன்று, இரண்டு ரன்களையும் வேகமாக ஓடி எடுத்தார். 13-வது ஓவர் முதல் பந்து பிறகு 16-வது ஓவர் முதல் பந்து இரண்டிலும் முறையே திசர பெரேரா, கபுகேதரா ஆகியோர் ரன் அவுட் ஆகினர். 15.1 ஒவர்களில் 113/4 என்று ஆகி 29 பந்துகளில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது.
தில்ஷன், அஞ்சேலோ மேத்யூஸ் இருவரும் இணைந்து, ஆப்கான் பீல்டிங் ‘உதவி’யுடன் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
தில்ஷன் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மேத்யூஸ் 10 பந்துகளில் 3 பவுண்டை 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆப்கான் அணியில் மீண்டும் மொகமது நபி, ரஷித் கான் ஆகியோர் சிறப்பாக வீசினர்.
கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் அபார அரைசதம்:
ஆப்கான் அணி இன்னிங்ஸைத் தொடங்கிய போது மொகமது ஷசாத் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடாமல் பம்மினார். கடைசியில் 3வது ஓவரில் மேத்யூஸிடம் அவுட் ஆனார். நூர் அலி சத்ரான் 3 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து சற்றே தடுமாற்றத்துடன் ஆடி வந்த அவர் ரங்கனா ஹெராத் பந்தில் பவுல்டு ஆனார். ஹெராத்தின் கோணம், மாறும் வேகம், பிளைட், லெந்து என்று எதையுமே ஆப்கானால் புரிந்து கொள்ள முடியவில்லை. மொகமது நபி 3 ரன்களில் ஹெராத்திடம் எல்.பி. ஆனார். கரிம் சாதிக் முன்னதாக ரன் இல்லாமல் பெரேராவிடம் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் 23 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஸ்டானிக்சாய், இடது கை ஸ்பின்னர் சிறிவதனாவை அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்தார். மேலும் ஹெராத் பந்து ஒன்றை ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்சருக்கு விரட்டினார். திரிமானே பீல்டிங் சரியாக இல்லை. மறுமுனையில் ஷென்வாரி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். பிறகு லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் ஷென்வாரி (31 ரன், 14 பந்துகள் 3 பவுண்டரி 2 சிக்சர்), கேப்டன் ஸ்டானிக்சாய் இணைந்து 33 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தனர்.
ஷென்வாரி அவுட் ஆன கையோடு ஸ்டானிக்சாய் கொடுத்த கேட்சை மேத்யூஸ் கோட்டை விட்டார். அப்போது 44 ரன்களில் இருந்த ஸ்டானிக்சாய் பிறகு 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்து 47 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து 19-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். இது அவரது சிறந்த டி20 ஸ்கோராகும். கடைசியில் நஜ்புல்லா சத்ரான் குலசேகராவை எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்சரையும் அதே திசையில் மீண்டும் ஒரு பவுண்டரியையும் அடித்து 5 பந்தில் 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 10ஓவர்களில் 47/3 என்று இருந்த ஆப்கான் அடுத்த 10 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்து 153 ரன்கள் என்ற ஓரளவுக்கு சவாலான இலக்கை எட்டியது. இலங்கை அணியில் பெரேரா 3 விக்கெட்டுகளையும், ஹெராத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சமீரா மிகச் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 19 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
விடாமுயற்சியுடன் ஆடிய ஆப்கான் அணியை அதன் பீல்டிங் கைவிட்டது. இதனால் தோல்வி ஏற்பட்டது. ஆட்ட நாயகனாக தில்ஷன் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago