வெங்கடேஷ் ஐயர், திரிபாதியின் காட்டடி ஆட்டம், நரேன், வருண் சக்ரவர்த்தி, பெர்குசனின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 34-வதுலீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 29 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4-வது இடம்
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் நிகரரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 29 போட்டிகளில் விளையாடி 7-வது வெற்றியைப் பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒரு வீரர் ஆயிரம் ரன்களை எட்டியது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகள், 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் குறைவால் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் 5-வது இடத்தில் உள்ளது.
ஆட்டநாயன் நரேன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு வெங்கடேஷ் ஐயர், திரிபாதி பேட்டிங்கும், சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, பெர்குஷனின் பந்துவீச்சும் முக்கியக் காரணம். 4 ஓவர்கள் வீசி 10 டாட்பந்துகளுடன் 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் திட்மிட்டு செயல்பட்டு, மும்பை இந்தியன்ஸை சிதறடித்தனர். முதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் மோர்கன் தொடக்க ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களை வீசச் செய்து கட்டுப்படுத்தினார். இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் முதல் 15 ஓவர்கள் வரை நரேன், வருண் இருவரையும் மிக அருமையாகப் பயன்படுத்தி மும்பையின் ஸ்கோர் உயராமல் பயன்படுத்தினார்.
பெர்குசன் அபாரம்
அதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சில் மிரட்டிய பெர்குசனும் லைன் லென்த் மாறாமல் பந்துவீசி மும்பை பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். இந்த 3 பேரின் கூட்டணி மும்பையின் ரன்மெஷின்களை இயங்கவிடாமல் தடுத்தது. பிரசித் கிருஷ்ணா தொடக்கத்தில் நன்றாகவீசினாலும் கடைசி ஓவரில் சொதப்பி 20 ரன்களு்ககு மேல் வாரி வழங்கிவிட்டார். ஆன்ட்ரூ ரஸலின் பந்துவீச்சும் எடுபடவில்லை.
மிஸ்ட்ரி ஸ்பின்னர்ஸ் என அழைக்கப்படும் வருண் சக்கரவர்த்தி, நரேன் இருவரும் சேர்ந்து பந்துவீசும்போது 10 முதல் 15 ஓவர்களில் மும்பை அணி 29 ரன்கள் மட்டுமே சேர்த்தது 2 விக்கெட்டுகளையும் இழந்தது. இருவரின் பந்துவீச்சையும் அடிக்க சிரமப்பட்ட மும்பை பேட்ஸ்மேன்கள், வேகப்பந்துவீ்ச்சாளர்களை குறிவைத்து நொறுக்கினர்.
ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மா, டீகாக் கூட்டணி ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்தால் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் நிச்சயம் 180 ரன்களை எட்டும் என கணிக்கப்பட்டது. ஆனால், நரேன், வருண் இருவரும் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் செய்யும் கடிவாளத்தை இறுகப்பிடித்தனர்.
வெங்கி, திரிபாதி கூட்டணி
பேட்டிங்கைப் பொறுத்தவரை வெங்கடேஷ் ஐய்யரை இத்தனை நாட்களாக கொல்கத்தா அணி பயன்படுத்தாமல் இருந்தமைக்கு மன்னிப்புக் கோர வேண்டும். அருமையான தொடக்க வீரர் நீண்ட காலத்துக்குப்பின் கிடைத்துள்ளார். சுனில் நரேனை தொடக்க வீரராக களமிறக்கி கையைச் சுட்டுக்கொண்ட கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் பொக்கிஷமாகக் கிடைத்துள்ளார். திரிபாதி, வெங்கியின் அதிரடியால் பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்தது.
பும்ரா, ராகுல் சஹர், போல்ட், மில்னே பந்துவீச்சை அனாசயமாக அடித்து நொறுக்கினார். திரிபாதியும் தொடக்கத்தில் தன்னை நிலைப்படுத்த சிறிது நேரம் எடுத்துக்கொண்டு அதன்பின் வெங்கிக்கு இணையாக அதிரடி ஆட்டத்தில் களமிறங்கினார்.
கடந்த போட்டியில் அரைசதத்தை தவறவிட்ட வெங்கி இந்தஆட்டத்தில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 88 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர்.
30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து (3சிக்ஸர், 4பவுண்டரி)வெங்கடேஷ் பும்ரா பந்துவீச்சி்ல் ஆட்டமிழந்தார். திரிபாதி 42 பந்துகளில் 74 ரன்களுடன்(3 சிக்ஸர், 8பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இயல்பான ஆட்டம் மிஸ்ஸிங்
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு தேவையற்ற பயத்தை வெளிப்படுத்தி தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.
டீகாக், ரோஹித்சர்மா இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர், முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் களத்தில் இருந்தபோது பவர்ப்ளேயில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்தது.
ஆறுதலாக அமைந்தது டீ காக்கின் பேட்டிங்தான். மெதுவாகத் தொடங்கினாலும், வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசத் தொடங்கியபின் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி ரன்வேகத்தை அதிகப்படுத்தினார். 42 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து(3சிக்ஸர்,4பவுண்டரி) டீ காக் ஆட்டமிழந்தார்.
நல்ல பார்ட்னர்ஷிப் இல்லை
ஆனால், அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ்(5) இஷான்கிஷன்(15), குர்னல் பாண்டியா(12), பொலார்ட்(21) ஆகியோர் நிலைத்து ஆடவும், நல்லபார்ட்னர்ஷிப் அமைக்கவும் தவறவிட்டனர்.
உலகக் கோப்பைக்கு தேர்வாகியுள்ள சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன் இருவரும் சொதப்புவது இது 2-வது முறையாகும், இரு போட்டிகளை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாவிட்டாலும், பேட்டிங்கில் நிலைத்தன்மையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
குறிப்பாக 10 முதல் 15 ஓவர்கள் வரை மும்பை அணியினர் ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டனர். முதல்10 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்த மும்பை அணி, கடைசி 10 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். அதிலும் கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கல் சேர்த்தது மும்பை போன்ற வலுவான அணிக்கு போதாது.
விக்கெட் சரிவு
103 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை அணி, அடுத்த 46ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் பொலார்ட் மட்டுமே ஓரளவுக்கு அதிரடியாக ஆடி 21 ரன்கள் சேர்த்தார், பொலார்ட்டும் சொதப்பி இருந்தால்மும்பையின் ஸ்கோர் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் வெங்கடேஷ், திரிபாதி அதிரடி ஆட்டத்தின் முன் மும்பையின் பந்துவீச்சு எடுபடவி்ல்லை. பும்ரா, போல்ட், மில்னே பந்துவீச்சு துல்லியமாக இல்லை, மூவருமே 10 ரன்ரேட்டுக்கு மேல் வாரி வழங்கியது தோல்விக்கு முக்கியக் காரணம். திரிபாதி நல்ல ஃபார்மில் இருந்தபோது அவர் அடித்த கேட்சை பிடிக்க முற்பட்டு ராகுல் சஹர் தவறவிட்டதற்கு மிகப்பெரிய விலை கொடுத்தனர்.
மீண்டு வரும்
இதுபோன்ற குறைந்த ஸ்கோர் செய்துவிட்டால், முடிந்தவரை பந்துவீச்சாளர்கள் மூலம் டிபென்ட் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால், பந்துவீச்சாளர்கள்தரப்பில் 100 சதவீதம் உழைப்பு இல்லைஎன்றுதான் கூற வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கடந்தகால வரலாற்றை மறந்துவிடக்கூடாது. கடந்த காலங்களில் இதுபோன்று பின்தங்கியிருந்து திடீரென அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குச் சென்று, சாம்பியன் வென்ற நிகழ்வும் உண்டு. யானைக்கும் அடி சறுக்கும் என்பதால், மும்பை அணி இந்த சரிவிலிருந்து விரைவில் மீண்டு வரும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 mins ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago