நம்பிக்கையிழந்த கோலி படை; தோனியின் சிஎஸ்கே ஆர்மியை வீழ்த்துமா?- மீண்டெழுமா ஆர்சிபி?

By செய்திப்பிரிவு

ஷார்ஜாவில் நாளை நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் வலிமையான தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை எதிர்த்துக் களமிறங்குகிறது கோலி தலைமையிலான ஆர்சிபி அணி.

இதுவரை சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 6 வெற்றிகள் 2 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றால் நிகர ரன் ரேட் அடிப்படையில் டெல்லியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும். ஆர்சிபி அணி வென்றால் இழந்த நிகர ரன் ரேட் அடிப்படையில் 3-வது இடத்திலேயே நீடிக்கலாம். ஆனால், இழந்த நம்பிக்கை, ஊக்கம் ஆகியவற்றைத் திரும்பப் பெற்றுவிடலாம்.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெருத்த நம்பிக்கையுடன் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 7 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் இருந்த சிஎஸ்கே அணி, கெய்க்வாட்டின் ஆட்டத்தால் 156 ரன்கள் சேர்த்தது.

இதைச் சரியாகப் பயன்படுத்திய பந்துவீச்சாளர்கள் தீபக் சஹர், ஹேசல்வுட், பிராவோ, ஜடேஜாவும் தங்களின் பங்களிப்பை அளித்து அணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். எந்த நிலையிலிருந்தும் சிஎஸ்கே அணி மீண்டு எழும் என்பது அனைத்து அணிகளுக்கும் செய்தியாக அந்த வெற்றி அமைந்தது.

சிஎஸ்கே அணியில் அந்த ஆட்டத்தில் டூப்பிளசிஸ், ரெய்னா, ராயுடு, தோனி, மொயின் அலி ஆகியோர் ஏமாற்றி விரைவாக ஆட்டமிழந்தனர். இவர்கள் இந்த ஆட்டத்தில் நிலைத்து ஆடும் பட்சத்தில் ஆர்சிபிக்கு ஆபத்துதான். கடந்த போட்டியில் ஜொலிக்காத இந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்த சீசனின் முதல் பகுதியில் சிறப்பாக ஸ்கோர் செய்தவர்கள் என்பதை மறக்கக்கூடாது. நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் தோனி மட்டும்தான் விலக்கு.

பந்துவீச்சில் சிஎஸ்கே அணி வலுவாகவே இருக்கிறது. புதிய பந்தில் எப்படியும் விக்கெட்டை வீழ்த்தும் திறமை படைத்தவராக சஹர் இருக்கிறார். நடுப்பகுதியில் விக்கெட்டை வீழ்த்த ஷர்துல் தாக்கூர், ஹேசல்வுட், பிராவோ ஆகியோரின் அனுபவம் அணிக்குக் கை கொடுக்கும். இந்த ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் அல்லது மொயின் அலிக்கு பதிலாக ஷாம் கரன் களமிறங்கலாம்.

கொல்கத்தா அணியிடம் மோசமான தோல்வியைத் தழுவிய ஆர்சிபி அணி, வலிமையான சிஎஸ்கே அணியை வீழ்த்துவது எளிதான செயல் அல்ல.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை படிக்கல், கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் இந்த 4 பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பித்தான் அணி இருக்கிறது. இந்த 4 வீரர்களுமே கடந்த போட்டியில் சொதப்பியதால் அணியின் நிலை என்ன ஆனது என்பதைப் பார்த்தோம். கோலி, படிக்கல் நல்ல தொடக்கத்தை அளித்தால் நடுவரிசை வீரர்கள் நிலைத்து விளையாடுவது அவசியம்.

கடந்த போட்டியில் ஏதோ விருப்பமின்றி களத்துக்கு வந்தது போன்றே மேக்ஸ்வெல் செயல்பாடு இருந்தது. ஒரு பந்துகூட மேக்ஸ்வெல் ஷாட்டுக்கு மீட் ஆகவில்லை என்பதால், எரிச்சலடைந்து ஆட்டமிழந்தார். பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த டிவில்லியர்ஸ் கடந்த ஆட்டத்தில் ஏமாற்றினாலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பந்துவீச்சில் சிராஜ், ஹர்ஸல் படேல், ஜேமிஸன், சஹல், ஹசரங்கா அனைவருமே ஓவருக்கு 10 ரன்கள் கடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விட்டுக் கொடுத்தனர். ஆதலால், ஆர்சிபி அணி பந்துவீச்சை பலப்படுத்துவது அவசியம்.

ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பிலிருந்து இந்த சீசனோடு விலகுவேன் என்ற கோலியின் திடீர் அறிவிப்பு ஆர்சிபி வீரர்களிடையே நிலையற்ற தன்மையை, மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது வீரர்களின் செயல்பாட்டில் தெரிகிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஆர்சிபி அணி தோற்றால், ஆர்பிசி கேப்டன்சியில் மாற்றத்தை எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்