மிர்பூரில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதன் முதலாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது மே.இ.தீவுகள்.
முதலில் பிட்சை சரியாகக் கணித்து இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்து துல்லியமாக வீசி இந்திய அணியை 145 ரன்களுக்குச் சுருட்டிய பிறகு, இலக்கை விரட்டும் போது இந்திய அணி கொடுத்த கடும் நெருக்கடியை மன உறுதியுடன் எதிர்கொண்டு கடைசி ஓவரின் 3-வது பந்தில் 146/5 என்று வெற்றி பெற்று அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதன் முறையாக கோப்பையை வென்று உலக சாம்பியன்களாகி வரலாறு படைத்தது மே.இ.தீவுகள்.
67/2 என்று நிதானமாக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மே.இ.தீவுகள் அணியை இந்திய இடது கை ஸ்பின்னர் டாகர் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி கடும் சிக்கலுக்குள்ளாக்கினார்.
அதாவது டாகர், முதலில் கேப்டன் ஹெட்மயரை அவரது சொந்த எண்ணிக்கையான 23 ரன்களில் வீழ்த்தினார். பிறகு ஸ்பிரிங்கர், கூலி ஆகியோரையும் வீழ்த்த 77/5 என்று தோல்வி முகம் கண்டது மே.இ.தீவுகள்.
ஆனால், அதன் பிறகு இந்திய அணியின் கடும் நெருக்குதலை நிதானத்துடனும், சாதுரியத்துடனும் எதிர்கொண்ட கார்ட்டி (52 நாட் அவுட்), பால் (40 நாட் அவுட்) ஆகியோர் மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று மிகவும் அழுத்தம் தரும் சூழ்நிலையில் கடைசி ஓவரில் வெற்றி பெற்று முதன் முதலாக கோப்பையை வென்றனர்.
கடைசியில் 49-வது ஓவரில் பால் என்ற வீரருக்கு அவேஷ் கான் டீப் கவரில் கேட்ச் ஒன்றை விட்டார், அது கடினமான கேட்ச். ஓடி வந்து முன்னால் டைவ் அடித்து பந்தைப் பிடிக்க முயன்று நழுவ விட்டார். அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் மே.இ.தீவுகள் இன்னமும் கூடுதல் நெருக்கடிக்குள்ளாகி ஆட்டம் என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம், ஆனால், கார்ட்டி, பால் இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 20.3 ஓவர்கள் கடும் நெருக்கடியில் நின்று 69 ரன்களைச் சேர்த்தனர்.
இந்திய தரப்பில் திருப்பு முனை ஏற்படுத்திய டாகர் 10 ஓவர்களில் 1 மெய்டனுடன் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவேஷ் கான் வழக்கம் போல் அருமையாக வீசி 29 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், அகமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த இந்திய அணி கடைசியில் போராடி தோல்வி தழுவியது, ஆனாலும் குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுக்கும் திறமையை, இந்த அணியினரிடத்தில் ஒரு கடினமான போராட்ட மனநிலையை ஏற்படுத்திய விதத்தில் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிற்கு இது ஒரு திருப்திகரமான தொடரே.
ஆட்ட நாயகனாக கார்ட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்பராஸ் கானின் தனிமனிதப் போராட்டமும் மே.இ.தீவுகளின் அபாரப் பந்துவீச்சும்!
மிர்பூரில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அபாரமாக பந்து வீச இந்திய அணி முதலில் பேட் செய்து 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பசுந்தரை ஆட்டக்களத்தில் மே.இ.தீவுகள் கேப்டன் ஹெட்மயர் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோசப் மற்றும் ஹோல்டர் வெறியுடன் வீசினர். பந்தின் தையல் பகுதியை தரையில் படுமாறு வீசி எழும்பச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை திணறச் செய்தனர்.
தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியை அவர்கள் கடைபிடித்தனர். சர்பராஸ் கான் மட்டுமே சிறப்பாக ஆடி இந்த உலகக்கோப்பையில் தனது 7-வது அரைசதத்தை எடுத்தார். அவர் 89 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஒரு முனையில் போராடி 8-வது விக்கெட்டாக ஜான் பந்தில் எல்.பி.ஆனார். லோம்ரோர் 19 ரன்களையும், ஆர்.ஆர்.பாதம் 21 ரன்களையும் எடுக்க மொத்தம் 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட முடிந்தது. எக்ஸ்ட்ரா வகையில் 16 வைடுகளுடன் 23 ரன்கள் வந்ததால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து சுருண்டது.
மேற்கிந்திய அணியில் ஜோசப் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜான் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பால் 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர், ஸ்பிரிங்கர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முதல் ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பண்ட், ஜோசப் வீசிய பந்தை முன்னால் வந்து, அதாவது கிரீசிற்கு சற்றே வெளியே வந்து பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் கிரீசிற்குள் காலை வைக்கத் தவறியதால் விக்கெட் கீப்பர் இம்லாக் சாதுரியமாக பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார் இதனால் விசித்திரமான முறையில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேரினார் பண்ட்.
அன்மல்பிரீத் சிங் 3 ரன்களில் ஜோசப்பின் எழும்பிய, ஸ்விங் ஆன பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் இஷான் கிஷன் 4 ரன்களில், உள்ளே வந்த பந்தை பிளிக் செய்ய முயன்று பந்தை கோட்டை விட்டார், நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.
வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களில் ஜான் பந்து ஒன்று சற்றே நின்று வர இவரது டிரைவ் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. ஸ்பிர்ங்கர் பந்தில் அர்மான் ஜாஃபர் 5 ரன்களில் கவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக இந்திய அணி 50/5 என்று ஆனது.
சர்பராஸ் கான் 29 ரன்களில் ஆடிவர லோம்ரோர் 19 ரன்களில் ஹோல்டரின் அவுட் ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி 87/6 என்று ஆனது. இதன் பிறகு தனது ஏழாவது அரைசதம் கண்ட சர்பராஸ் கான், ஜான் பந்தை பிளிக் செய்ய முயன்று பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட எல்.பி.ஆனார். அதன் பிறகு மற்ற விக்கெட்டுகள் சோபிக்கவில்லை இந்திய அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.
காலிறுதி, அரையிறுதிகளில் கடினமான சூழலில் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்ற மே.இ.தீவுகள், இந்த ரன் எண்ணிக்கையை எளிதாக விரட்ட முடியவில்லை, கார்ட்டி, பால் ஆகிய வீரர்கள் 77/5 என்ற நிலையிலிருந்து 19 வயதுக்குட்பட்ட வீர்ர்களிடத்தில் மிக அரிதாகவே காணப்படும் மன உறுதியையும், நல்ல உத்தியையும், பொறுமையையும் கொண்டு வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆடி உலக சாம்பியன்களாக்கியது சரிவுறும் மே.தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய உத்வேகத்தை நிச்சயமாக அளிக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago