இந்திய அணியை வீழ்த்தி எங்கள் டி20 உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்குவோம்: பாபர் ஆஸம் சவால்

By பிடிஐ

டி20 உலகக் கோப்பை போட்டியில் எங்களுடன் விளையாடும்போது, எங்களைவிட இந்திய அணிக்குத்தான் அதிகமான நெருக்கடி, அழுத்தம் இருக்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அந்நாட்டில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.

இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப்- 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும், தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியும், பி பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதே இல்லை என்ற வரலாறு தொடர்ந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு உலகக் கோப்பையின்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த நெருக்கடியும், அழுத்தமும் சூழ்ந்து தோல்விக் குழிக்குள் தள்ளிவிடும்.

கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இரு அணிகளும் எந்தவிதமான ஆட்டத்திலும் நேருக்கு நேர் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் அதே அளவு நெருக்கடி, அழுத்தம் பாகிஸ்தானுக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், கடந்த கால வரலாற்றைத் தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணியும் தோல்வி அடையாமல் இருக்க கடுமையாகப் போராடும்.

இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''என்னைப் பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியைவிட பாகிஸ்தான் அணிதான் சற்று வலிமையாக, அதிகமான சாதக அம்சங்களுடன் இருக்கிறது என நம்புகிறேன். இந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது, எங்களுடன் விளையாடும் இந்திய அணிதான் அதிகமான நெருக்கடியுடனும், அழுத்தத்துடனும் இருக்கும்.

இந்தியாவைத் தோற்கடித்து எங்கள் பயணத்தைத் தொடங்குவோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் போட்டி எப்போதும் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும். அங்கிருக்கும் ஆடுகளங்கள், மைதானம் பற்றி நன்கு தெரியும், பழகியிருக்கிறோம். எங்கள் சொந்த மைதானம்போல்தான் அதை உணர்ந்து விளையாடுவோம். பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் அனைத்திலும் 100 சதவீதம் பங்களிப்பை வழங்குவோம்”.

இவ்வாறு பாபர் ஆஸம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE