ஒரே நாளில் 13 விக்கெட்: இந்திய பேட்டிங் மீண்டும் 'கொலாப்ஸ்'; காப்பாற்றிய ஷர்துல்: பும்ரா பதிலடி

By க.போத்திராஜ்

ஷர்துல் தாக்கூரின் அதிரடி அரை சதம், கேப்டன் கோலியின் அரை சதம் ஆகியவற்றால் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

61.3 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்து 138 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் (5),ஹசீப் ஹமீது (0) இருவரும் பும்ரா பந்துவீச்சில் வெளியேற, கேப்டன் ரூட் 21 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் டேவிட் மலான் 26 ரன்களுடனும், ஓவர்டன் ஒரு ரன்னுடனும் உள்ளனர்.
முதல் நாளில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 13 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த 3-வது டெஸ்ட் போட்டிக்குப் பின், கேப்டன் கோலி இந்த டெஸ்ட்டில் பொறுமையாக பேட் செய்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை விராட் கோலி, 3வது முறையாக ராபின்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார்.

கோலி 22 ரன்களிலேயே பெவிலியன் திரும்பியிருப்பார், ஆனால், வோக்ஸ் பந்துவீச்சில் கிடைத்த கேட்சை ரூட் தவறவிட்டதால் கோலி தப்பித்தார்.

ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கு அடையாளம் என்பது ஒரு பந்துவீச்சாளரிடம் ஒருமுறை விக்கெட்டை இழந்துவிட்டால் மறுமுறை அவரிடம் விக்கெட்டை இழக்காமல் ஆடுவதுதான். அது லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரிடம் அதிகம் இருக்கும்.

ஒருமுறை ஒரு பந்துவீச்சாளரிடம் ஆட்டமிழந்துவிட்டால், மறுமுறை அல்லது அடுத்த போட்டியில் அந்த பந்துவீச்சாளரிடம் விக்கெட்டை இழக்கமாட்டார் அதுபோன்ற பலவீனமான ஷாட்களையும் ஆடமாட்டார். இதுதான் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அடையாளம்.

ஆனால், டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்து ராபின்ஸன், ஆன்டர்ஸன் இருவரிடமும் மட்டுமே கோலி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பது அவரின் பேட்டிங் கவலைக்குரியதாக மாறிவிட்டது என்பதையே குறிக்கிறது.

இந்திய அணியில் மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர் ஷர்துல் தாக்கூர். பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதை தாக்கூர் நேற்று நிரூபித்துவிட்டார். அதிரடியாக ஆடிய தாக்கூர் 31 பந்துகளில் அரை சதம் அடித்து ஓவல் மைதானத்தில் கடந்த 1981-ம் ஆண்டு இயான் போத்தம் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார்.

நியூஸிலாந்துககு எதிராக 32 பந்துகளில் போத்தம் அரை சதத்தை இந்த ஓவல் மைதானத்தில் அடித்திருந்தார். அதன்பின் அதிவேகமாக தாக்கூர் அடித்தார்.

தாக்கூர் 36 பந்துகளில் 57 ரன்கள்(7 பவுண்டரி, 3 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் கோலியின் 50 ரன்கள், தாக்கூரின் 57 ரன்கள் ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தால் மற்ற 9 வீரர்களின் பங்களிப்பு 84 ரன்கள் என்பது மட்டமான பங்களிப்பாகும்.

127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. தாக்கூரும் சொதப்பி இருந்தால், இந்திய அணி 130 ரன்களுக்குள் சுருண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம். ஆனால், தாக்கூரின் அதிரடியான பேட்டிங்கால்தான் 8-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்க்கப்பட்டது.
ஆனால், 190 ரன்கள் எட்டியபின் அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது வேதனைக்குரியது.

மற்ற எந்த பேட்ஸ்மேனும் அதாவது ரோஹித் சர்மா(11) ராகுல் (17), புஜாரா (4), ஜடேஜா (10), ரஹானே (14) ரிஷப் பந்த் (9) என 20 ரன்களைக் கூட எட்டாமல் ஆட்டமிழந்தனர்.

ஆடிக்கு ஒருநாள், அமாவாசைக்கு ஒருநாள் என்று சொலவடை சொல்வார்கள். அதுபோல், புஜாரா, ரஹானே இருவரும் ஏதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்துவிட்டார்கள் என்பதற்காகத் தொடர்ந்து அணியில் வைத்திருப்பது அணியின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். கடந்த ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் புஜாரா கடந்த போட்டியில்தான் அரை சதம் அடித்தார். இந்தப் போட்டியில் மீண்டும் தனது சொதப்பலைத் தொடங்கிவிட்டார்.

புஜாராவின் பேட்டிங் குறித்து சுனில் கவாஸ்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, புஜாராவின் பேட்டிங்கில் தொழில்நுட்பரீதியாகச் சிக்கல் இருக்கிறது. அதிகமாக கால்களை நகர்த்தாமல், கைகளையும் நகர்த்தாமல் விளையாடுகிறார் என்று குறிப்பிட்டிருந்ததை நிரூபித்து வருகிறார்.

துணை கேப்டன் ரஹானேவைத் தொடர்ந்து அணியில் வைத்திருப்பதற்கான வலுவான காரணத்தை கேப்டன் கோலி ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்திடமும் கூறுவது இந்த நேரத்தில் அவசியமாகிறது. சிறந்த இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, அகர்வால் போன்றோர் காத்திருப்பில் இருக்கும்போது, தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் ரஹானேவுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது எனத் தெரியவில்லை.

அஸ்வினுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா இந்த முறை வரிசை மாற்றி பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். ரிஷப் பந்த்துக்கு முன்னால் களமிறங்கிய ஜடேஜா பேட்டிங்கில் சாதிப்பார் என்று நம்பியது தவறான முடிவு.

அஸ்வினைவிடச் சிறப்பாக பேட் செய்வார் ஜடேஜா என கூறப்பட்ட நிலையில், அவரும் சொதப்பினார். அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவைத் தேர்வு செய்ததற்கு வலுவான காரணத்தை கோலி இந்த நேரத்தில் தெரிவித்தால் மனநிறைவாக இருக்கும்.

ரிஷப் பந்த்தின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பதற்கு கோலி திட்டம் தீட்டிவிட்டார் என்றே தோன்றுகிறது. ரிஷப் பந்த்துக்கு ஓய்வு அளிக்காமல், அவரின் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்காமல் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி, அவரின் டெஸ்ட் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகப் போகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தபின் ரிஷப் பந்த்தின் பேட்டிங் திறமை ஆய்வு செய்யப்பட்டால் அது அவரை மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரும். இதுபோன்ற நேரங்களில் விருதிமான் சஹாவை அல்லது ராகுலையே கீப்பிங் செய்ய வைத்து கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனைக் களமிறக்கி இருக்கலாம்.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு புதிய பந்தில் விளையாடத் தெரியவில்லை என்று கிரேக் சேப்பல் ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தார். அந்த வார்த்தையை நேற்றைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நிரூபித்துவிட்டனர். ஒட்டுமொத்தத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்குப் பின் வந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது இருப்பை நிலைப்படுத்தினார். ஆன்டர்ஸன் தனது முதல் ஸ்பெல்லில் ரன்களை வழங்கினாலும், 2-வது ஸ்பெல்லில் புஜாராவை வெளியேற்றினார். ராபின்ஸன் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ராபின்ஸன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக கோலி, ராகுல், உமேஷ் விக்கெட்டுகளை ராபின்ஸன் சாய்த்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்