அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்: மைக்கேல் வான் கண்டனம்

By பிடிஐ

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திர அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கண்டித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

4-வதுடெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. ஓவல் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், 2-வது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும என்பதால், அஷ்வின் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என பலதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், கேப்டன் கோலி, கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற கலப்பில்தான் களமிறங்கியுள்ளார். ரவிந்திர ஜடேஜாவுக்கு 4 டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கிவரும் கோலி, அஷ்வினுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பு வழங்கவில்லை.

ஓவல் டெஸ்டில் அஷ்வின் இடம் பெறுவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் இல்லாதது பெரும் அதிர்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது. இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

அஷ்வினைத் தேர்வு செய்யாதது குறித்து மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திர அஷ்வினைத் விளையாடும் 11 பேர் இந்திய அணியில் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்.

அஷ்வினைத் தேர்வு செய்யாதது என்பது, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதுவரை நாங்கள் பார்க்காத மிகப்பெரிய 4 டெஸ்ட் போட்டிகளாக இருக்கும். 413 டெஸ்ட் விக்கெட், 5 டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் அஷ்வின்!!” எனத் தெரிவித்துள்ளார். மேலும், #இங்கிvஇந்தியா பைத்திக்காரத்தனம் என்ற ஹேஸ்டேக்கையும் பதிவி்ட்டுள்ளார்.

கறுப்புப் பட்டை

இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கறுப்புப்பட்டை அணிந்து களமிறங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய பயிற்சியாளர் வாசுதேவ் பரஞ்ச்பே மறைவையொட்டி கறுப்புப்பட்டையை இந்திய வீரர்கள் அணிந்துள்ளனர்.

82 வயதான பரஞ்ச்பே திங்கள்கிழமை மும்பையில் காலமானார். 29 முதல் தரப்போட்டிகளில் மும்பை பரோடா அணிக்காக கடந்த 1956முதல் 1970வரை பரஞ்ச்பே ஆடியுள்ளார். 2 சதங்கள்,2அரைசதங்கள் உள்ளிட்ட 785 ரன்கள் குவித்துள்ளார்.

தேசியக் கிரிக்கெட் அகாடெமி 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டவுடன் அதில் தலைமைப் பயிற்சியாளராக பரஞ்ச்பே பணியாற்்றினார். பரஞ்ச்பே தனது பயிற்சியின் மூலம் மும்பையைச் சேர்ந்த ஏராளமான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்காக அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE