இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. போர் முடிந்து சகஜ நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை நடத்தப்பட்டது. ஐரோப்பா கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் இரண்டாம் உலகப் போரால் பெரும் நாசம் ஏற்பட்டதன் காரணமாக 1950 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரால் இரு உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கால்பந்து ஆர்வலர்கள் மிகுந்த நாடான பிரேசிலில் உலகக் கோப்பையை நடத்தும்போது அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் நம்பியதும் அங்கு போட்டியை நடத்தியற்கு காரணம் ஆகும்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தொடர்ச்சியாக 25 ஆண்டுகளை நிறைவு செய்த ஜுலியஸ் ரிமெட்டை கௌரவிக்கும் வகையில் இந்த உலகக் கோப்பைக்கு ஜூலியஸ் ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.
பிரிட்டன் அணிகள் பங்கேற்பு
இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக பிரிட்டனில் இருந்து அணிகள் பங்கேற்றன. இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. உலகக் கோப்பையின் முதல் சாம்பியனான உருகுவே ஐரோப்பாவில் நடைபெற்ற இரு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்த நிலையில், தென் அமெரிக்க கண்டத்துக்கு மீண்டும் உலகக் கோப்பை வந்ததைத் தொடர்ந்து மீண்டும் பங்கேற்றது.
இந்தியா விலகல்
போட்டிக்கான டிரா (யாருடன் யார் மோதுவது என்பதை தீர்மானித்தல்) இறுதி செய்யப்பட்ட பிறகு சில அணிகள் விலகின. அதில் இந்தியாவும் ஒன்று. இந்திய வீரர்கள் ஷூ அணியாமல் வெறும் காலோடு விளையாட சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுமதி மறுத்ததால், இந்தியா போட்டியிலிருந்து விலகியது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகள் தலா 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் 4 அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதில் அதிக புள்ளிகள் பெறும் அணியே சாம்பியனாகும்.
முந்தைய உலகக் கோப்பையில் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், நிதி திரட்டுவதற்காகவும், போட்டியில் பங்கேற்கும் எல்லாஅணிகளும் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் முறைகள் மாற்றியமைக்கப்பட்டன.
இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த உலகக் கோப்பையில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து 0-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைய, அதன் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது. அந்தப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த ஸ்பெயின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
உருகுவே 8-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. அந்த ஆட்டத்தில் உருகுவேயின் ஷியாப்பினோ 4 கோல்களை அடித்தார். மற்ற இரு பிரிவுகளிலிருந்து ஸ்வீடன், பிரேசில் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.
இறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் டிரா செய்த உருகுவே, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை தோற்கடித்தது. அதேநேரத்தில் பிரேசில் 7-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும், 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும் வீழ்த்தியது. இதனால் பிரேசில் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி சாம்பியனை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.
உருகுவே சாம்பியன்
இந்தப் போட்டியில் பிரேசில் டிரா செய்தாலே உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் உருகுவே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில், பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே பிரேசிலின் பிரைகா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில், கோலடித்து ஸ்கோரை சமன் செய்த உருகுவே, மேலும் ஒரு கோலை போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
2 லட்சம் ரசிகர்கள்
ரியோ டி ஜெனிரோவில் உள்ள எஸ்டாடியா டூ மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரேசில் சாம்பியனாகும் என்ற கனவோடு சுமார் 2 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரேசில் தோல்வி கண்டது அந்நாட்டு ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இதன்மூலம் 2-வது முறையாக கோப்பையை வென்ற உருகுவே, பங்கேற்ற இரு போட்டிகளிலும் கோப்பையை வென்றஒரே அணி என்ற பெருமையைப் பெற்றது.
உருகுவேயின் நாயகன்
1950-ல் உருகுவே அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் அந்த அணியின் ‘இன்சைடு’ ஸ்டிரைக்கரான ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோதான். 1925-ல் உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் பிறந்த ஷியாபினோ, தனது 17-வது வயதில் பெனாரோல் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். 19-வது வயதில் உருகுவே அணிக்காக ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.
இவரால் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர்களைக் கொண்டுள்ள அணிகளுக்கு எதிராக கோலடிக்க முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால் அந்த கணிப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கிய ஷியாபினோ 1950-களில் தலைசிறந்த ‘இன்சைடு’ ஸ்டிரைக்கர்களில் ஒருவராக உருவெடுத்தார். 1950 உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, இறுதியாட்டத்தில் உருகுவே அணி பின்தங்கியிருந்தபோது சமநிலையை எட்டுவதற்கான கோலையும் அடித்து வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தார்.
1954 உலகக் கோப்பையில் பங்கேற்ற ஷியாபினோ, ஹங்கேரிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் காயமடைய, உருகுவே அணி தோல்வி கண்டது. இதன்பிறகு ஏசி மிலன் அணிக்கு விளையாடுவதற்காக 72 ஆயிரம் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அடுத்த 6 மாதங்களில் இத்தாலி அணிக்காக சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஷியாபினோ, ஏசி மிலன் அணி இத்தாலி லீக்கில் 3 முறை பட்டம் வெல்லவும், 1958 ஐரோப்பிய கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவும் முக்கியக் காரணமாக இருந்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
உலகக் கோப்பை வரலாற்றில் 1970 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி அந்த இரு உலகக் கோப்பைகளிலும் ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை. இதேபோல் 1930-ல் சாம்பியன் பட்டம் வென்ற உருகுவேயும், 1938-ல் கோப்பையை வென்ற இத்தாலியும் ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை.
1950 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 22
மொத்த கோல்கள் - 88
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 4
ரெட் கார்டு - 0
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 13,37,000
டாப் ஸ்கோர்
அடீமிர் (பிரேசில்) - 9 கோல்கள்
ஜுவான் ஷியாபினோ (உருகுவே) - 5 கோல்கள்
எஸ்டானிஸ்லாவ் (ஸ்பெயின்) - 5 கோல்கள்
சிகோ (பிரேசில்) - 4 கோல்கள்
டெல்மோ ஜாரா (ஸ்பெயின்) - 4 கோல்கள்
ஒமர் மிகெஸ் (உருகுவே) - 4 கோல்கள்
அல்சிடெஸ் ஜிக்கியா (உருகுவே) - 4 கோல்கள்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago