ஜொஹான்னஸ்பர்கில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் 171 ரன்களை 1 விக்கெட்டை மட்டுமே இழந்து தென் ஆப்பிரிக்கா அதிரடி வெற்றி பெற்று டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
முதலில் பேட் செய்ய பணிக்கப்பட்ட இங்கிலாந்து 157/3 என்ற வலுவான நிலையிலிருந்து கடைசியில் 7 விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு மடமடவென இழந்து 19.4 ஓவர்களில் 171 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் (71), ஆம்லா (69) ஆகியோர் அதிரடியில் 14.4 ஓவர்களில் 172/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றினர்.
இலக்கைத் துரத்திய போது டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டமும், ஹஷிம் ஆம்லாவின் அழகான ஆதரவும் இணைய 7 ஓவர்களுக்குள் 100 ரன்களை விளாசித் தள்ளினர். டாப்ளியின் முதல் பந்தை அழகான பிளிக் மூலம் பவுண்டரி அடித்த டிவில்லியர்ஸ், பிறகு 5-வது பந்தை மிட்விக்கெட்டில் ரசிகர்கள் அமர்ந்திருந்த 2-வது வரிசைக்கு அடித்து அனுப்பினார் 6 ரன்கள்!
3-வது ஓவரில் கிறிஸ் ஜோர்டான், டிவில்லியர்ஸிடம் சிக்கினார். முதல் பந்து சற்றே அதிர்ஷ்டகரமாக பீல்டர்கள் கைக்குப் போகாமல் டிவில்லியர்ஸ் 2 ரன்களை எடுத்தார். ஆனால் அதன் பிறகு நடந்தது சாத்துமுறையே. ஸ்கொயர்லெக்கில் ஒரு பவுண்டரி, அடுத்த பந்து மேலேறி வந்து லாங் ஆஃபில் சிக்ஸ்., பிறகு கவருக்கு மேல் ஒரு பவுண்டரி, அடுத்த பந்து மேலேறி வந்தார், ஷார்ட் ஆக வீச ஸ்கொயர்லெக்கில் பளார் சிக்ஸ். இந்த ஓவரில் 22 ரன்களை விளாசினார் டிவில்லியர்ஸ்.
ஸ்டோக்ஸ் வந்தார் பயனில்லை, அவரையும் 2 பவுண்டரிகள் விளாசினார் டிவில்லியர்ஸ். ஆனால் இதில் 2-வது பவுண்டரி மட்டையின் அடிவிளிம்பில் பட்டு ஸ்டம்புக்கு அருகில் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோர்டானிடம் மீண்டும் பந்தைக் கொடுத்து தவறு செய்தார் மோர்கன், இம்முறை ஹஷிம் ஆம்லா அவரது மோசமான ஓவரை 4 பவுண்டரிகளுடன் முடித்து வைத்தார். 19 ரன்கள் வந்தது. அதாவது ஜோர்டான் 2 ஓவர்கள் 41 ரன்கள்.
பிறகு ஸ்டோக்ஸ் பவர் பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை வீச வர, இதில் ஆம்லா ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகளை அடித்தார். 6 ஓவர்கள் முடிவில் 88/0. 7-வது ஓவரில் ரஷீத்தை லெக் திசையில் மைதானத்துக்கு வெளியே சிக்ஸ் அடித்தார் டிவில்லியர்ஸ் பந்து காணாமல் போக புதிய பந்துகள் வந்தது. 7-வது ஓவரில் ஸ்கோர் 101/0 என்று ஆனது. டிவில்லியர்ஸ் 21 பந்துகளில் 4 சிக்ஸ், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். இதுதான் டிவில்லியர்ஸின் அதிவேக டி20 அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
8-வது ஓவரில் மீண்டும் டாப்ளி சிக்கினார். ஸ்லோ பந்து நேராக சிக்ஸருக்குத் தூக்கி அடிக்கப்பட்டது. அடுத்த பந்து டிவில்லியர்ஸின் பிரசித்தமான ஸ்வீப் ஷாட் சிக்சருக்குப் பறந்தது. 28 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் அடித்த டிவில்லியர்ஸ் 71 ரன்களில் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து ரஷீத்திடம் அவுட் ஆனார்.
டிவில்லியர்ஸ், ஆம்லா இணைந்து 8.2 ஓவர்களில் 125 ரன்களைச் சேர்த்தனர். ஆம்லா 38 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 69 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ, கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட தொடர் நாயகனாக இம்ரான் தாஹிர் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இங்கிலாந்து ஆடிய போது ஜோ ரூட் 17 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹீரிடம் வீழ்ந்தார். ஹேல்ஸ் 16 ரன்களிலும் ராய் 9 ரன்களிலும் முன்னதாக வெளியேறினர்.
கேப்டன் மோர்கன் (38), பட்லர் (54) இணைந்து 8.3 ஓவர்களில் 96 ரன்களை 4-வது விக்கெட்டுக்காக விளாசினர். பட்லர் 28 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுக்க மோர்கன் 23 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்தார். இதில் பட்லரும், மோர்கனும் 17-வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து 200 ரன்கள் எடுக்க வேண்டிய இங்கிலாந்து 171 ரன்களில் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அபாட் 3 விக்கெட்டுகளையும் ரபாதா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago