நாளை இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்: பந்துவீச்சைத் தவிர பல சிக்கல்கள்; சமாளிப்பாரா கோலி?

By க.போத்திராஜ்


பந்துவீச்சாளர்களைத் தேர்வில்மட்டுமே ஓரளவுக்கு தெளிவான நிலையில் இருக்கும் கேப்டன் கோலி, பேட்டிங்கில் எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யலாம், ப்ளேயிங் லெவன் யாரை வைத்துக்கொள்ளலாம் என்ற சிக்கலுடன் இங்கிலாந்துக்கு எதிரான முதல்டெஸ்ட் போட்டியை நாளை எதிர்கொள்கிறார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் நாட்டிங்ஹாமில் நாளை தொடங்குகிறது.

விராட் கோலி இதுவரை எத்தனையோ டூர் சென்றிருப்பார், விளையாடியிருப்பார் ஆனால், இந்த முறை இங்கிலாந்துப் பயணம் அவரின் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும், உரைகல்லாகவும் இருக்கப் போகிறது. கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்து 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது அதில் 11 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

தோனியின் தலைமையில் பயணம் செய்தபோது, விராட் கோலி மோசமான ஃபார்மில் பேட்டிங்கில் சொதப்பினார். ஆனால், அடுத்த பயணத்தில் கேப்டனாக இருந்து அணியைத் தூக்கி நிறுத்தினாலும், ரன்களைக் குவித்தாலும் வீரர்கள் தேர்வில் குழப்பம், ஒத்துழைப்பின்மை போன்றவற்றாலும் 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

ஆதலால், இந்த முறையும் அதே தோல்விதானா அல்லது வெற்றியுடன் திரும்புவதா குறைந்தபட்சம் டிரா செய்துவிட்டு திரும்புவதா என்ற கேள்விகளுடன் விராட் கோலி அணிக்குத் தலைமை தாங்குகிறார்.

விராட் கோலியின் தலைமைக்கு உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியிலிருந்தே சோதனைகள் ஆரம்பமாகின. அந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, ரஹானே, கோலி, ரோஹித்சர்மா, கில் என அனைவரும் சோடைபோனார்கள்.

பெரிதாக மாற்றமில்லாத வீரர்களுடன் இங்கிலாந்து தொடரையும் கோலி எதிர்கொள்ளகிறார். இதில் ப்ளேயிங் லெவனை தேர்வு செய்வதில்தான் விராட் கோலியின் தலைமைக்கு கிடைக்கும் வெற்றி, தோல்வி முடிவாகும்.

காயம் காரணமாக ஷுப்மான் கில் விலகிவிட்டதால், ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்குவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. தொடக்க வீரர்களுக்கு இந்தியாவிடம் 3 வாய்ப்புகள் உள்ளன. ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன். இந்த 3 வீரர்களில் ஒருவரைத் தேர்வு செய்து ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறக்கலாம்.

ஆஸ்திரேலிய மண்ணி்ல் தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் விஹாரிக்கு இருக்கிறது, இங்கிலாந்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்துராகுல் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆதலால், இருவரில் ஒருவரை தேர்வு செய்வதென்றால், பேட்ஸ்மேன் என்றரீதியில் மட்டுமே ராகுலை தேர்வு செய்ய முடியும், ஆனால், விஹாரியைத் தேர்வு செய்தால், பகுதிநேர ஆஃப் ஸ்பின்னராகவும் செயல்படுவார். ஆதலால், தொடக்க வீரரைக் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

புஜாரா, ரஹானே, கோலி, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் என கண்ணை மூடிக்கொண்டு இந்தக் கூட்டணிதான் விளையாடப் போகிறது என்று கூறிவிடலாம். ஆனால், புஜாராவின் பேட்டிங் ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் அனைவரையும் வெறுப்பேற்றும் வகையில் இருக்கிறது.

களத்தில் இருக்கும் மற்றொரு முனையில் இருக்கும் பேட்ஸ்மேனையும் சோம்பல்அடையும் விதத்தில் அளவுக்கதிகமான டிபென்ஸ் ப்ளை செய்கிறார். இந்த போட்டியில் மாற்றாவி்ட்டால் அவர் அடுத்த போட்டிக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

நாட்டிங்ஹாம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு பெருமளவு ஒத்துழைக்காது என்று கூறப்பட்டாலும், எந்த ஆடுகளத்திலும் தன்னை நிரூபித்துக் காட்டும் அஸ்வின் அணிக்கு அவசியம். அனுபவமிக்க ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கும் இடம் உண்டு. இதில் இசாந்த் சர்மா, சர்துல் தாக்கூர், முகமது சிராஜ் இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்களில் நாளை யாருக்கு வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

அனுபவமான வீரர் இசாந்த் சர்மா என எடுத்துக்கொண்டாலும், பந்தை ஸ்விங் செய்வதிலும், வேகத்திலும், வேரியேஷன் வெளிக்காட்டுவதிலும் முகமது சிராஜ் சிறப்பாகச் செயல்படுகிறார். ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டாலும் எதிரணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் டெஸ்ட் பவுலிங் அவரிடம் இல்லை.

இசாந்த் சர்மா, சிராஜ் இருவரில் யாருக்கு வாய்ப்புக் கிடைக்கப் போகிறது எனத் தெரியவில்லை. வழக்கம் போல் பும்ரா, முகமது ஷமி இருவரும் அணிக்குள் வந்துவிடுவார்கள்.

ஆதலால்,பந்துவீ்ச்சில் பெருமளவு குழப்பமில்லாமல் அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டாலும், பேட்டிங்கில் யாரை ப்ளேயிங்லெவனில் கோலி வைக்கப் போகிறரா் என்பது தெரியவில்லை.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், வோக்ஸ் இல்லாதது இந்திய அணிக்கு சாதகம் என்பதைவிட தப்பித்துவிட்டோம் என்றே சொல்லலாம்.

இருப்பினும் புற்கள் நிறைந்த க்ரீன்டாப் ஆடுகளத்தில் உலக வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான மார்க் வுட், ஓலே ராபின்ஸன் பந்துவீச்சையும், ஜாம்பவான்கள் ஸ்டூவர்ட் பிராட், ஆன்டர்ஸன் ஸ்விங் பந்துவீச்சைுயும் சமாளி்த்து ஆடுவது இந்திய அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால், குறைந்தபட்சம் 25 ஓவர்கள்வரை விக்கெட் ஏதும் விழாமல் பேட்டிங் செய்தாலே தப்பித்துவிடலாம். ஆனால், ஸ்டூவர்ட் பிராட், ஆன்டர்ஸன் இருவருக்கும் ரோஹித் சர்மா, ராகுல், கோலியின் ஆஃப் சைட் பலவீனம் என்னவென்று தெரியும். அந்த வலையில் சிக்காமல் மூவரும் தப்பிக்க வேண்டும்.

பேட்டிங்கில் ரூட், ரோரி பர்ன்ஸ், சிப்ளே, லாரன்ஸ், கிராளே, போப் என பெரிய கூட்டம் இருக்கிறது. இதில் பர்ன்ஸ், ரூட் தவிர மற்ற அனுபவம் இல்லாதவர்கள் என்றாலும் உள்நாட்டில் ஆடிய அனுபவம் இருக்கிறது. இவர்கள் அஸ்வினின் சுழற்பந்துவீச்சுக்கும், ஷமியின் யார்கர், பவுன்ஸர், ஸ்விங்கையும் சமாளித்து ஆடுவதை பார்ப்பது ஸ்வாரஸ்யமாக இருக்கும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும்.

இந்திய அணி ப்ளேயிங் லெவன்(உத்தேசம்):
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே,(ஹனுமா விஹாரி அல்லது ராகுல்), ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி, சிராஜ் அல்லது இசாந்த் சர்மா.

இங்கிலாந்து அணி விவரம்:
ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜானி பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட்பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிராலி, சாம் கரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஒலேபோப், ஒலே ராபின்ஸன், டாம் சிப்ளே, மார்க் உட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்