ஆமீரின் அச்சுறுத்தலுக்குப் பிறகு கோலியின் ‘கிளாஸ்’ : இந்தியா போராடி வெற்றி

By ஆர்.முத்துக்குமார்

மிர்பூரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் கடினமான பிட்சில், பாகிஸ்தானின் அச்சுறுத்தல் பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணி போராடியேனும் வெற்றியைச் சாதித்தது.

84 ரன்கள் இலகைத் துரத்திய போது மொகமது ஆமீரின் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோர் அபாரமான இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆகி வெளியேற ஆட்டம் பரபரப்பானது.

முதல் பந்திலேயே யார்க்கரில் ரோஹித் எல்.பி.க்கான உரத்த அப்பீல் எழுந்தது. உண்மையில் ரோஹித் சர்மா தப்பித்தார் என்றே கூற வேண்டும். அப்போதாவது அடுத்த பந்தை இறங்கி வந்து ஆடியிருக்க முடிவெடுத்திருக்க வேண்டும், ஆனால் அவரிடம் உள்ள மிகப்பெரிய உத்தி பலவீனமென்னவெனில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வீசும் போது, அதுவும் பந்தை உள்ளே கொண்டு வரும் ஆமிர் போன்றவர் வீசும்போது முன்னங்காலை குறுக்காக முன்னே போடுதல் கூடாது.

ஆனால் ரோஹித் அதைத்தான் செய்தார். அவரை ரன்னர் முனையில் இருந்து பார்த்த ரஹானேவும் அதே தவறைத்தான் செய்தார். ரஹானேயின் உத்தியைப்பற்றி லஷ்மண் வானாளவ புகழ்ந்தார். ஆனால் அவரிடம் உள்ள போதாமையை ஒருவரும் சுட்டிக் காட்டுவதில்லை, சுனில் கவாஸ்கரும் ரோஹிட் சர்மாவை உச்சியில் கொண்டு வைத்தார். ஆனால் அவரது போதாமையைப் பேசுவதற்கும் இங்கு தடைதான். ஷிகர் தவண் முக்கியமான போட்டிகளில் உட்காருவதன் புதிரும் நமக்குப் புரியவில்லை. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் மறுநாள் களமிறங்காமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதை ரசிகர்கள் மறந்திருக்க நியாயமில்லை.

சுரேஷ் ரெய்னா ஆடியது பரிதாப உணர்ச்சியையே வரவழைத்தது, அவருக்கு ஒன்றும் புரியவில்லை, வெளியே செல்லும் பந்திலும் பீட் ஆகிறார். உள்ளே வரும் பந்திற்கும் தடவுகிறார், காரணம் ஸ்விங் பந்து வீச்சுக்கு எதிராக இவ்வளவு அனுபவம் பெற்ற பிறகும் திணறும் உத்தி அவருடையது.

கடைசியில் அவர் 1 ரன் எடுத்து ஆமீரின் பந்தை என்ன ஆடினார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். பந்துகள் ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஆமிர் அந்தப் பந்தை ஆஃப் ஸ்டம்பிலிருந்து இடது கை பேட்ஸ்மெனுக்கு வெளியே கொண்டு செல்கிறார், ஆனால் ரெய்னாவோ ஏதோ மொயீன் அலி வீசுகிறார் என்ற நினைப்பில் ஆஃப் திசையில் நகர்ந்து லெக் திசையில் ஆட முயன்றார், முன் விளிம்பில் பட்டு வஹாப் ரியாஸிடம் கேட்ச் ஆனது. இந்தியா 8/3 என்று ஆனது.

யுவராஜ் சிங் இறங்கியவுடன் 2-வது பந்தில் 7 அடி உயர மொகமது இர்பானை கவர் திசையில் ஒரு அருமையான டிரைவ் அடித்து இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை அடித்தார்.

கோலியின் ‘கிளாஸ்’ இன்னிங்ஸ்:

கோலிக்கு அதிர்ஷ்டம் இல்லாமலில்லை. அவரும் ஸ்டம்புக்கு நெருக்கமாக ஒரு பந்தை கால்காப்பில் வாங்கினார், நடுவர் ஏனோ அவுட் தரவில்லை. அது ரீப்ளேயில் அவுட் போல்தான் தெரிந்தது, இது ஒருவேளை பாகிஸ்தானினால் நாளை எழுப்பப்படலாம். ஆனால் அதே வேளையில் கடைசியில் மொகமட் சமி பந்தில் அவர் மட்டையில் பட்டு பேடில் பட்ட பந்துக்கு நடுவர் எல்.பி. தீர்ப்பளித்தார். கோலி கடும் அதிருப்தியுடன் 49 ரன்களில் அவுட் ஆனார்.

ஒருவேளை கோலி உள்ளே சென்று தனது முந்தைய நாட் அவுட் எல்.பி.தீர்ப்பை ரீப்ளேயில் பார்த்தார் என்றால் நிச்சயம் தனது அதிர்ஷ்டம் பற்றி ஒருவேளை மகிழ்ச்சியடைந்து கடைசியில் கொடுக்கப்பட்ட எல்.பி.தீர்ப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இதற்கிடையே கோலி ஆடியது உண்மையில் ‘சப்லைம்’- அசாதாரண இன்னிங்ஸ். அதுவும், பவர் பிளே முடிந்த பிறகு 7-வது ஓவரை ஆமிர் வீச வந்த போது கோலி ஆடிய 2 ஷாட்கள் கண்களில் ஒத்திக் கொள்ளக்கூடிய ஷாட்களாகும். முதலில் இடுப்புயர பந்தை பிளிக் செய்தார், அது பீல்டருக்கு வைடாக பவுண்டரி சென்றது, அடுத்ததாக ஆஃப் ஸ்டம்ப் பந்தை அழகாக முன்னால் வந்து அடித்த கவர் டிரைவை எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.

இந்த ஓவர் ஒருவிதத்தில் திருப்பு முனையாக அமைந்தது என்றால், பாகிஸ்தானின் மற்றொரு அச்சுறுத்தல் பவுலர் வஹாப் ரியாஸ் ஓவரை கோலி பதம் பார்த்தது ஆட்டத்தை இந்திய வெற்றியின் உறுதிப்பாட்டை நோக்கி நகர்த்தியது. 150 கிமீ ஆஃப் ஸ்டம்ப் பந்தை அருமையான கவர் டிரைவ் அடித்து பவுண்டரிக்கு தரையோடு தரையாக விரட்டினார். அடுத்த பந்தை அலட்சியமாக ஆஃப் திசையில் சற்றே நகர்ந்து பிளிக் செய்து 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து மீண்டும் 146 கிமீ ஆஃப் திசை பந்தை முன்னால் வந்து கவர் திசையில் மீண்டும் ஒரு அற்புதமான பவுண்டரியை விளாசினார். கவர் டிரைவின் கடவுளாகவே விராட் கோலி இப்போதைக்குத் தெரிகிறார்.

அதே ஓவரில் யுவராஜ் சிங் பிளிக்கில் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் வந்ததோடு 9-வது ஓவர் முடிவில் இந்தியா 50 ரன்களை எட்டியது.

51 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்த விராட் கோலி, கடைசியில் மொகமட் சமியின் பந்தில் மட்டையில் பட்ட பந்துக்கு எல்.பி.தீர்ப்பாகி கடுப்பில் வெளியேறினார். அதே ஓவரில் ஹர்திக் பாண்டியா அவுட் ஸ்விங்கரை இளம் வீரருக்கே உரிய முறையில் எட்ஜ் செய்து வெளியேறினார்.

கடைசியில் தோனி, வஹாப் ரியாஸ் பந்தை கவரில் பளார் பவுண்டரி அடித்தது வெற்றி ஷாட்டானது.

யுவராஜ் சிங் 30 பந்துகளைச் சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இந்த வெற்றியில் இவரது இந்த 14 ரன்கள் பெரிய பங்களிப்பு என்பதோடு, இவர் ஒரு முனையில் திக்கித் திணறி நின்றாலும் இவரது இருப்பினால் கோலி தைரியமாக ஆட முடிந்தது.

இவரும் கோலியும் இணைந்து 68 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது வெற்றிக்கான மிக முக்கிய பங்களிப்பாக அமைந்தது. வஹாப் ரியாஸ் 3.3 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்டார், இவரை கோலி அலட்சியமாகவே ஆடினார். ஒருவேளை ஆமிருடன் தொடக்கத்தில் புதிய பந்தில் வஹாபிடம் கொடுத்திருந்தால் ஏதாவது ஆகியிருக்கலாம். மொகமது இர்பான் 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்தார், அவ்வப்போது யுவராஜை அச்சுறுத்தினாரே தவிர பெரிய பவுலிங் இல்லை. கடைசியில் இந்திய அணி 15.3 ஓவர்களில் 85/5 என்று வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக விராட் கோலி மிகச்சரியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்