மரடோனா ஆவாரா மெஸ்ஸி?- உலகக் கோப்பை கால்பந்து அலசல்

By செய்திப்பிரிவு

2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணிதான் சாம்பியன் ஆகும் என்று கருதப்படும் சூழ்நிலையில் நாம் அர்ஜெண்டீனா அணியை மறந்து விடலாகாது.

இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டீனா அணியில் இந்த முறையும் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர்.

எஃப் பிரிவில் அர்ஜெண்டீனாவுடன் ஈரான், நைஜீரியா, மற்றும் புதிதாக தகுதி பெற்றுள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா ஆகிய அணிகள் உள்ளன. இதில் போஸ்னியா-ஹெர்செகோவினா அணி பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் திறன் கொண்டதாகவே உலகக் கோப்பை கால்பந்து அவதானிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் அணி 1978, 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது. ஆனால் குரூப் மட்டத்தைத் தாண்டிச் சென்றதில்லை.

நைஜீரியா அணி 1994 மற்றும் 1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் 2002 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முதல் நிலையைக் கடக்க முடியாமல் வெளியேறியது.

ஆகவே இந்தப் பிரிவில் அர்ஜெண்டீனா அணி மீதே அனைவரது கவனமும் உள்ளது. நட்சத்திர வீரர்களான லயோனல் மெஸ்ஸி, ஏஞ்செல் டி மரியா, செர்ஜியோ அகிரோ, மற்றும் கொன்சாலோ ஹிகுவைன் ஆகியோர் உள்ளனர்.

2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டீனா மோசமாக ஆடிய பிறகே பயிற்சியாளர் பேடிஸ்டாவிடமிருந்து பொறுப்புகளைப் பெற்ற அலெயாண்ட்ரோ சபெல்லா அணிக்கு ஒரு ஸ்திரத் தன்மையை கொடுத்திருக்கிறார்.

இவர் செய்த பெரிய விஷயம் என்னவெனில் வந்தவுடன் மெஸ்ஸியை கேப்டனாக்கினார். சபெல்லா பொறுப்பேற்கும் முன்னர் 16 போட்டிகளில் ஒன்றுமே செய்யாத மெஸ்ஸி அதன் பிறகு 21 ஆட்டங்களில் 20 கோல்களை அடித்து பார்முக்கு வந்துள்ளார்.

பார்சிலோனா அணிக்காக சாம்பியன்ஸ் லீகில் ஆடும் மெஸ்ஸி அங்கு ஆடும் ஆட்டத்திறனை தன் சொந்த அணிக்கு ஆடும்போது வெளிப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. இந்த முறை 1986ஆம் ஆண்டு மரடோனா செய்ததை மெஸ்ஸி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

களத்தில் 5 வீரர்கள் முன்களத்திலும் 3 வீரர்கள் நடுக்களத்திலும் 2 வீரர்கள் பேக்கி நிலையிலும் ஆடவைக்கப்படும் பாரம்பரிய கால்பந்து உத்தி முறையையே சபெல்லா கடைபிடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்தும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளராக டீகோ மரடோனா இருந்தார். ஆனாலும் அவரால் அணியை ஒருமுகப்படுத்தி கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் காலிறுதியில் ஜெர்மனியிடம் 0- 4 என்று படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. ஆகவே இந்த முறை எப்படியும் அரையிறுதி வரை முன்னேறி ஆட்டத்தை மேலும் மேம்படுத்தினால் 3வது உலகக் கோப்பையை அர்ஜெண்டீனா வெல்லும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் பிரிவில் உள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா அணியை சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது. இது இந்த அணிக்கு முதல் உலகக் கோப்பை. ஆனாலும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இவர்கள் கலக்கிய கலக்கு பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 30 கோல்களை அடித்துள்ள இந்த அணி வெறும் 6 கோல்களையே வாங்கியுள்ளது. உண்மையில் கிரீஸ் அணிதான் தகுதி பெற்றிருக்கவேண்டும், இந்த அணியும் கிரீஸ் அணியும் ஒரே புள்ளிகள்தான் ஆனால் கோல் வித்தியாச அடிப்படையில் போஸ்னியா-ஹெர்செகோவினா தகுதி பெற்றது. இந்த அணியின் மிக முக்கிய வீரர் சீகோ (Zeko) இவர் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர். போஸ்னியா-ஹெர்செகோவினா அணிக்கு சீகோ 35 கோல்களை அடித்துள்ளார். அதில் 10 கோல்கள் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகளில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியின் கோல் கீப்பர் அஸ்மிர் பெகோவிச் மிகப்பெரிய கோல் கீப்பர் என்று கருதப்படுபவர்.

இந்தப் பிரிவிலிருந்தும் 2014 உலகக் கோப்பை கால்பந்து விறுவிறுப்பான ஆட்டங்களை எதிர்பார்க்கலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்