கேப்டவுனில் நேற்று நடைபெற்ற 5-வதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் டிவில்லியர்ஸ் அருமையாக சதம் எடுக்க இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 45 ஓவர்களில் 236 ரன்களுக்கு மடிய, தொடர்து ஆடிய தென் ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸின் அபாரமான 101 நாட் அவுட்டுடன் 44 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் 2 போட்டிகளில் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா அதன் பிறகு எதிர்பாராத எழுச்சி பெற்று அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி கண்டது. அதாவது இலக்கைத் துரத்தும் போது டாப்ளி அருமையாக வீசி தொடக்கத்திலேயே டி காக் (4), டுபிளிஸ்சிஸ் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பிறகு ரைலி ரூசோவையும் (4) 8-வது ஓவரில் வீழ்த்த தென் ஆப்பிரிக்கா 22/3 என்று சரிவு கண்டது.
ஆனால் மீண்டும் ஆம்லா (59), டிவில்லியர்சுக்கு பக்கபலமாக நிற்க இருவரும் 4வது விக்கெட்டுக்காக 22 ஓவர்களில் 125 ரன்களைச் சேர்த்து மீட்டனர்.
அப்போது ஸ்கோர் 147-ஆக இருந்தது. இந்நிலையில் ஆம்லா 59 ரன்களில் மொயின் அலி பந்தில் பட்லரிடம் ஸ்டம்ப்டு ஆகி வெளியேற, 4 ஓவர்கள் சென்று பர்ஹான் பெஹார்டீன் 1 சிக்சருடன் 13 ரன்கள் எடுத்து ரஷீத்திடம் அவுட் ஆனார். ஒரு சிறு சரிவில் தென் ஆப்பிரிக்கா 35-வது ஓவரில் 166/5 என்று ஆனது. ஆனால் டிவில்லியர்ஸ் ஒரு அற்புதமான, சாதுரியமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, டேவிட் வீஸ-வும் தன் பங்குக்கு மட்டையை வீச இருவரும் இணைந்து 71 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
வீஸ 32 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுக்க, 200-வது ஒருநாள் போட்டியை ஆடும் டிவில்லியர்ஸ் தனது 24-வது சதத்தை எடுத்து 97 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 101 என்று நாட் அவுட்டாகத் திகழ தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது.
டிவில்லியர்ஸ் மோசமான பந்தை வெளுத்துக் கட்டுவதோடு, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி இங்கிலாந்து கேப்டனின் பீல்ட் ஏற்பாடுகளைக் குழப்பி விட்டதும் அவர் ஏன் மிகச்சிறந்த வீரர் என்பதை எடுத்துக் காட்டியது.
முன்னதாக டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் மேகமூட்ட வானிலையில் இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஆனால் கிறிஸ் மோரிஸ் சரியாக வீசவில்லை அவர் 8 ஓவர்களில் 59ரன்களை விட்டுக் கொடுத்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை வீண்:
5-வது ஓவரில் இம்ரான் தாஹிர் அழைக்கப்பட்டார். லெக் பிரேக்கில் ஜேசன் ராய் 8 ரன்களில் பிளம்ப் எல்.பி ஆகி வெளியேறினார். கடுமையான பார்மில் இருக்கும் ஜோ ரூட்டிற்கு ஹஷிம் ஆம்லா கேட்சை விட்டார், ஆனால் அவர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்திருந்த போது இம்ரான் தாஹிரை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார். கேப்டன் இயன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர்ந்தது 2 ரன்களில் வீஸவின் சாதாரண பந்தில் டி காக்கிடம் எட்ஜ் செய்தார். ஸ்கோர் 85/3 என்று ஆனது.
அதன் பிறகு பென் ஸ்டோக்ஸ் (29), அலெக்ஸ் ஹேல்சுடன் இணைய இருவரும் 11 ஓவர்களில் 70 ரன்களை விளாசினர். அப்போது ரபாதாவின் பந்தை ஆஃப் திசையில் ஒதுங்கிக் கொண்டு ஆட முயன்று ஸ்டோக்ஸ் லெக் பைலை இழந்து பவுல்டு ஆக, அடுத்த பந்தே ஜோஸ் பட்லருக்கு அருமையான இன்ஸ்விங்கராக அவரும் பவுல்டு ஆனார். பிறகு அடுத்தடுத்து மொயின் அலி (12), கிறிஸ் வோக்ஸ் (0) ரஷீத், பிராட் என்று வெளியேற ஹேல்ஸ் மட்டுமே ஒரு முனையில் 128 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக ரபாதாவிடம் ஆட்டமிழந்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் இந்தத் தொடரில் 76.60 என்ற சராசரியில் அதிபட்சமாக 383 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்காக 5 அரைசதங்கள் தொடர்ச்சியாக எடுத்த 5-வது வீரரானார் ஹேல்ஸ், அதுவும் ஒரே தொடரில் இவர் எடுத்துள்ளது புதிய சாதனையாகும். இதனால் இவர் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாதா, இம்ரான் தாஹிர் டேவிட் வீஸ ஆகியோர் தலா 3விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago