தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கடல் சாகச விளையாட்டு போட்டிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
வரும் 12-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 200 கடல் சாகச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
கடல் சாகச விளையாட்டு
திருச்செந்தூரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் தான் மணப்பாடு. இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையை கொண்ட மணப்பாடு தமிழகத்தின் குட்டி கோவா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பல வகையான கடல் சாகச விளையாட்டுகளை நடத்தும் இயற்கை அமைப்பை கொண்ட ஒரே பகுதி மணப்பாடு கடற்கரை தான் என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் முறையாக மணப்பாடு கடற்கரையில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. தமிழக அரசின் சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகிய வற்றுடன் இணைந்து மணப்பாடு சர்பிங் ரிசார்ட் என்ற அமைப்பு மணப்பாடு கிளாசிக் என்ற பெயரில் இந்த போட்டியை நடத்தியது.
பாய்மரப்படகு (SAILING), அலைச்சறுக்கு ஓட்டம் (SURFING), காத்தாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம் (KITE BOARDING), குறும்படகு ஓட்டம் (KAYAKING), நின்றபடி துழாவல் ஓட்டம் (STAND UP PADDLE) ஆகிய 5 வகையான கடல் சாகச விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
அங்கீகாரம்
18 மாநிலங்களில் இருந்து சுமார் 150 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டிக்கு வீரர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடைசி நாளில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் போட்டிகளை கண்டுகளித்தனர். இந்நிலையில் இரண்டாவது ஆண்டாக ‘மணப்பாடு கிளாசிக்- 2016' போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு 6 வகையான கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இது தொடர்பாக மணப்பாடு சர்பிங் ரிசார்ட் அமைப்பின் இயக்குநர் அருண் மிராண்டா ‘தி இந்து' நாளிதழிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு பாய்மரப்படகு (SAILING), அலைச்சறுக்கு ஓட்டம் (SURFING), காற்று அலைச்சறுக்கு ஓட்டம் (WIND SURFING), காத்தாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம் (KITE BOARDING), குறும்படகு ஓட்டம் (KAYAKING), நின்றபடி துழாவல் ஓட்டம் (STAND UP PADDLE) ஆகிய 6 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவில் ஒரே இடத்தில் இத்தனை வகையான போட்டி களை நடத்தும் வசதி மணப்பாட்டில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் உள்ள 3 கடல் சாகச விளை யாட்டு கூட்டமைப்புகளின் அங்கீகாரத் துடன் அதிகாரப்பூர்வ போட்டியாக நடத்தப்படுகின்றன.
சென்னையில் பயிற்சி
இதுவரை போட்டிகளில் பங்கேற்க 140 பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் அதிகமானோர் பதிவு செய்வார்கள். இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டினர் 23 பேர் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். ஆனால், மழை வெள்ள பாதிப்பு காரணமாக போட்டியை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர்களால் தற்போது பங்கேற்க முடியவில்லை.
இந்த ஆண்டு உள்ளூர் இளைஞர்களை அதிகளவில் பங்கேற்க செய்ய ஏற்பாடு செய்துள் ளோம். மணப்பாடு, தருவைகுளம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த இளைஞர்களை சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்துள்ளோம். உள்ளூர் வீரர்கள் சுமார் 15 பேர் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
மேலும், இந்திய கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் அணியினரும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
கலைநிகழ்ச்சிகள்
போட்டி நடைபெறும் நாட்களில் கடல் சாகச விளையாட்டு பயிற்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. முதல் முறையாக மும்பையை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் 'ஸ்லாக் லைன்' என்ற சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு போட்டிகளை காண கூடுதல் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே, விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்த போட்டி மூலம், மணப்பாடு சர்வதேச கடல் சாகச விளையாட்டு மையமாக விரைவில் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago