இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கும் ரிஷப் பந்த்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்திய அணியுடன் டர்ஹம் நகருக்குப் பயணப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உறுதி செய்திருக்கும் பிசிசிஐ அதிகாரி ஒருவர், கடந்த 8 நாட்களாக பந்த் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது வரை அவருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்றே இருப்பதாகவும் கூறியுள்ளார். ரிஷப் பந்த் மீண்டும் எப்போது அணியினருடன் இணைவார் என்பது குறித்துச் சொல்லப்படவில்லை.
ரிஷப் பந்த் ஹோட்டலில் இல்லாமல் அவரது நண்பர் வீட்டில் இருந்ததால் மற்ற வீரர்கள் யாருக்கும் தொற்று பரவவில்லை என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா கூறியுள்ளார்.
கடந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த, நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா நெருக்கடியை மனதில் வைத்து இந்திய அணி மீண்டும் இந்தியா வராமல், இங்கிலாந்திலேயே ஓய்வெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிரிட்டனில் அதிகரித்து வரும் கரோனா தொற்று குறித்து எச்சரிக்கை செய்து, அனைவரும் கண்டிப்புடன் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய அணிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கூட்ட நெரிசல் அதிகமான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், போடப்பட்டிருக்கும் தடுப்பூசி பாதுகாப்புக்காக மட்டுமே, கிருமிக்கு எதிரான முழு எதிர்ப்பை அது தராது என்றும் இந்த மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த முடிந்த விம்பிள்டன், யூரோ கோப்பை போட்டிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்தக் கடிதத்தில் தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பிரிட்டனில் டெல்டா வகை கரோனா கிருமியால்தான் தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ரிஷப் பந்த்துக்கும் டெல்டா வகை கரோனா தொற்றே ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து ஆட்டத்தைக் காண ரிஷப் பந்த் சென்று வந்திருந்தார். தான் கால்பந்து ஆட்டத்தை ரசிக்கும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆட ஆரம்பிக்கிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடக்கமாக இது இருக்கும். இந்தத் தொடருக்கு முன் ஜூலை 20ஆம் தேதி பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா ஆடவுள்ளது. இந்தப் போட்டி டர்ஹம் நகரில் நடைபெறுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு மாற்று அணியை ஏற்பாடு செய்து ஆடவைத்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago