புனேயில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 101 ரன்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி பிறகு இலக்கை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி 18 ஓவர்களில் 105/5 என்று வெற்றி பெற்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தப் பசுந்தரை பிட்சிற்கு உரிய மரியாதை அளிக்காமல் இந்திய பேட்ஸ்மென்கள் விட்டேத்தியான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியாவில் பேட்டிங் சாதக மட்டைப்பிட்சில் அடித்து நொறுக்கி வெற்றி பெற்று வந்த பிறகே புனேயில் பிட்ச் டெஸ்ட் போட்டிகளுக்கான பசுந்தரை ஆட்டக்களமாக அமைய, அதற்கான எந்த வித உத்தியும் இல்லாமல் மட்டையை ஆங்காங்கே சுழற்றி இந்திய பேட்டிங் சரிவுக்கு ஆளானது. இந்தப் பிட்ச் ஐபிஎல் ரக மட்டையடிக்கு ஆதரவானது அல்ல, கொஞ்சம் நிதானித்து சரியான உத்தியுடன் ஆடுவதற்கான பிட்ச். ஆனால் பந்துகளும் நன்றாக ஸ்விங் ஆனதோடு நல்ல பவுன்சும் இருந்தது, இதனை இலங்கை பவுலர்கள் சரியான லெந்த்தில் வீசி பயன்படுத்திக் கொண்டனர். இந்திய வீரர்களின் ஷாட் தேர்வும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
டாஸில் வென்ற இலங்கை கேப்டன் சந்திமால் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார்.
ஆனால் முதல் ஓவரிலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. ரஜிதா என்ற அறிமுக வேகப்பந்து வீச்சாளரின் முதல் ஓவரிலேயே 2-வது பந்தில் ரோஹித் சர்மா ரன் எடுக்காமல் வெளியேற 5-வது பந்தில் ரஹானே 4 ரன்களில் வெளியேறினார். இருவருமே கிட்டத்தட்ட ஒரே விதமாகவே ஆட்டமிழந்தனர். ரோஹித்திற்கு பந்து கண்சிமிட்டும் நேரம் நின்று வந்ததால் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. ரஹானே வந்தவுடன் தேர்ட்மேனில் பவுண்டரி அடித்தார், ஆனால் அடுத்தபந்து சற்றே ஷார்ட் பிட்ச் ஆகி சற்றே வெளியே சென்ற பந்து, ரஹானே லெக் திசையில் ஆட முயன்றார் முன் விளிம்பில் பட்டு எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் ஆனது.
ரெய்னா வந்தவுடனேயே தேர்ட்மேனில் கொடுத்த அல்வா கேட்சை குணதிலக கோட்டை விட்டார். ஆனால் அதன் பிறகு திசரா பெரேரா வர, லெந்த் பந்தை மிக அருமையாக மிட்விக்கெட்டில் தவண் தனது பாணியில் பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார்.
பிறகு 2 விக்கெட் எடுத்த ரஜிதாவை ஒரே ஓவரில் ரெய்னா ஒரு ஃபைன் லெக் பவுண்டரியும், பிறகு லெந்தில் விழுந்த ஒரு பந்தை மிக அருமையாக கிளீனாக மிட்விக்கெட் மேல் சிக்ஸ் விளாசினார். அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது. ஆனால் தவண் 9 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ஒரு சுழற்று சுழற்ற பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு தேர்ட்மேனுக்கு பறந்தது, அதனை குணதிலக அருமையாக பிடிக்க தவண் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
அதாவது ரெய்னா அடித்தது போல் மிட்விக்கெட்டைக் குறி வைத்தார் தவண், ஆனால் ரெய்னா பந்து சற்றே உள்ளே வர அவருக்கு வாகாக அமைந்தது சிக்ஸ் அடித்தார், ஆனால் தவணுக்குப் பந்து சற்றே வெளியே ஸ்விங் ஆனதால் மிட்விக்கெட்டில் அடிக்கப் பார்த்தது மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு தேர்ட்மேனில் கேட்ச் ஆனது.
யுவராஜ் களமிறங்கியவுடன் சேனநாயகவை மேலேறி வந்து அழகான முறையில் நேராக ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஷாட்டில் அவர் கண்களில் உறுதி தெரிந்தது.
ஆனால் வேகப்பந்து வீச்சாளர் சமீரா வந்து யுவராஜைப் படுத்தினார், தனது வேகம், கோணம் மற்றும் லெந்த் ஆகியவற்றால் யுவராஜ் சிங் பந்தை தொடமுடியாது செய்தார். 3 ரன்களே அந்த ஓவரில் வந்தது. 7 ஓவர்கள் முடிவில் 43/3 என்ற நிலையில் ரெய்னாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு நழுவ விடப்பட அதனை அவர் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை, ஷனகா என்ற வேகப்பந்து வீச்சாளரும் அருமையான வேகத்துடன் வீசினார். அவரது பந்து ஒன்று நேராக உள்ளே ஸ்விங் ஆக ரெய்னா பவுல்டு ஆனார். 20 ரன்களில் அவர் வெளியேற அதே ஓவரில் தோனி அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்து அதற்கு அடுத்த ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்தை ஹூக் செய்ய முயன்றார் பந்து மட்டையில் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது, அது அருமையான கேட்ச், எம்பிப்பிடித்தார் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா.
அதற்கு அடுத்த ஓவரில் யுவராஜ் சிங் 10 ரன்களில் அருமையான சமீரா பவுன்சரில் தாமதமாக புல் ஆட பந்து சமீராவிடமே கேட்ச் ஆனது. ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் ஷனகா பந்தில் எல்.பி. ஆனார். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 58/7 என்று ஆனது.
அதன் பிறகு அஸ்வின் இறங்கி பந்து வந்த பிறகு ஆடினார். இதனால் அவர் 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஜடேஜா 6 ரன்களில் சேனநாயகவின் நேர் நேர் தேமா பந்துக்கு எல்.பி.ஆனார். 18.5 ஓவர்களில் இந்தியா 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரஜிதா, ஷனகா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சமீரா என்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
102 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு இறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் டிக்வெல்லா, நெஹ்ராவை அருமையாக ஒரு மிட் ஆஃப் பவுண்டரி அடித்தார், ஆனால் அதே ஓவரில் நன்றாக எழும்பிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று தவணிடம் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பும்ராவின் பந்து வீச்சு உண்மையில் அச்சுறுத்தலாக அமைந்தது. முதல் ஓவரை அவர் மெய்டனாக வீசினார், பந்து பேட்ஸ்மெனின் மட்டைக்கும் உடலுக்கும் இடையிலெல்லாம் புகுந்து சென்றது, அவரை இலங்கை வீரர்களால் சரியாக ஆட முடியவில்லை. அவ்வளவு ஸ்விங், நல்ல வேகம் அவரது பந்து வீச்சு ஆக்சன் வேறு வித்தியாசமான கோணங்களை ஏற்படுத்தியதால் கடுமையாக இலங்கை அணியினர் திணறினர்.
இந்நிலையில் நெஹ்ரா மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் குணதிலகவை 9 ரன்களில் வீழ்த்தினார், மீண்டும் தவண் கேட்ச்.
ஆனால் அதன் பிறகு பும்ராவைத் தவிர மற்ற அச்சுறுத்தல்கள் ஏற்படவில்லை. சந்திமால் 35 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுக்க, கபுகேதரா 26 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை எடுக்க இருவரும் 3-வது விக்கெட்டுக்காக 39 ரன்களை 7 ஓவர்களில் சேர்த்தனர்.
ஜடேஜா அருமையாக பீல்டிங் செய்தார், அவர் பீல்ட் செய்து எடுத்து ஸ்டம்பில் அடித்த பந்துகள் ஸ்டம்பில் பட்டிருந்தால் ரன் அவுட்களுடன் இலங்கையை கொஞ்சம் நெருக்கியிருக்கலாம் ஆனால், அது ஸ்டம்பை நூலிழையில் தவறவிட்டுச் சென்றது.
அஸ்வினை 10 ஓவர்கள் கழித்து கொண்டு வந்தார் தோனி, அவர் 3 ஓவர்களில் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கபுகேதராவையும், ஷனகாவையும் அவர் வீழ்த்தினார். ஆனால் சந்திமால் அவுட் ஆகும் போது ஸ்கோர் 84 ரன்கள் என்று நெருங்கியதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சந்திமாலை ரெய்னா எல்.பி.செய்தார். சிரிவதனா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து நாட் அவுட்டகா இருக்க பிரசன்னா 3 ரன்களில் நாட் அவுட்டாக நிற்க 18 ஓவர்களில் இலங்கை 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசியில் பும்ராவை சிரிவதனா ஒரு பவுண்டரி, பிறகு ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை அருமையாக புல் ஆடி சிக்ஸருக்கு விரட்டி வெற்றி ரன்களை எடுத்தார். அஸ்வின், ஜடேஜா, நெஹ்ரா தங்களது ஓவர்களை முடிக்கவில்லை. தோனி இன்னமும் கொஞ்சம் நெருக்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஆகியோர் இருந்திருந்தால் இலங்கை தோற்றிருக்கவும் வாய்ப்புள்ள பிட்ச் ஆகும் இது.
மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பந்து வீச்சு சவாலாக அமைந்த ஒரு பிட்சில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மோதிய ஒரு சவாலான டி20 ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது.
ஆட்ட நாயகனாக தனது அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, ரஹானேயை வீழ்த்திய ரஜிதா தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago