ஷமி, இஷாந்த் சர்மா அசத்தல்: உணவு இடைவேளைக்கு முன் 5 விக்கெட்டுகளை இழந்த நியூஸி.

By செய்திப்பிரிவு

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று உணவு இடைவேளையின்போது நியூஸிலாந்து அணி 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியவில்லை. தொடர் விக்கெட்டுகள் சரியவே மொத்தம் 217 ரன்களுக்குத் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் நடந்த இரண்டு நாட்களுமே ஒளி மங்கியதாலும், மழையாலும் ஆட்டம் தடைப்பட்டு வந்தது.

தொடர்ந்து திங்கட்கிழமை அன்று நான்காம் நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டமும் மழையால் சற்று தாமதமாக ஆரம்பித்தது.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மிக நிதானமாக ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. களமும், சிறப்பான பந்துவீச்சும் நியூஸி. பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 88 பந்துகளைச் சந்தித்து 14 ரன்களும், ராஸ் டெய்லர் 36 பந்துகளில் 11 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ராஸ் டெய்லர் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினார்.

அடுத்து ஆடவந்த ஹென்றி நிகோல்ஸ் 23 பந்துகளில் 7 ரன்களுக்கு இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே, புதிய பேட்ஸ்மேன் பிஜே வாட்லிங்கை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் முகமது ஷமி. துரித கதியில் 3 விக்கெட்டுகளை இழந்த நியூஸி. அணி 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் உணவு இடைவேளை வந்தது.

மழையால் இழந்த 2 நாட்களுக்கு ஈடுகட்ட நாளைய இருப்பு நாள் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE