தில்ஷன், திரிமானே, குணதிலக அபாரம்: இலங்கைக்கு பெரிய வெற்றி

By இரா.முத்துக்குமார்

நெல்சன், சாக்ஸ்டன் ஓவலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை 2-1 என்று உயிர்ப்புடன் வைத்துள்ளது.

நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து பெரிய வெற்றியை ஈட்டியது.

முதல் 2 போட்டிகளில் இலங்கையை ஆட்டிப்படைத்த ஹென்றியோ, தனது அபாரத் தலைமைத்துவ திறனாலும் அவ்வப்போதைய அதிரடியாலும் மிரட்டி வரும் மெக்கல்லமோ இந்த போட்டியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2 படுமோசமான தோல்விகளுக்குப் பிறகு இலங்கை அணி 3-வது போட்டியில் மீண்டெழுந்துள்ளது குறிப்பிடத்தகுந்த எழுச்சியாகும்.

277 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது தில்ஷனின் 91 ரன்கள், திரிமானேயின் 87 ரன்கள் ஆகியவை முக்கியமான பங்களிப்புகள் என்றாலும், விரட்டலுக்கான புத்துணர்வை அளித்தது குணதிலகவின் அதிரடி ஆட்டமே. இவர் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து அடிப்படை அமைத்துக் கொடுத்தார். குணதிலக ஆஃப் திசையில் பாயிண்ட், கவர் பாயிண்ட் இடையே 5 பவுண்டரிகளை விளாசினார். 4 மிகப்பெரிய சிக்சர்களில் ஒன்று டக் பிரேஸ்வெல் பந்தை நேராக அடித்தது, 2 சிக்சர்கள் அற்புதமான ஹூக் ஷாட்களாகும். 6 ஓவர்களில் 50 ரன்களை இலங்கை எட்டியது.

13-வது ஓவரில் அவர் மெக்லினாகன் பந்தை திருப்பி விட முயன்று வைடு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்த போதும் இலங்கை ஓவருக்கு 8 ரன்கள் பக்கம் எடுத்திருந்தது. திரிமானே இறங்கியவுடன் அவரது சாதக ஷாட்டை முடக்கினார் கேன் வில்லியம்சன், ஆஃப் திசையில் பீல்டர்களை நெருக்கி அவர் ஷாட்கள் தடுக்கப்பட்டன. அவர் இடைவெளிகளைக் கண்டுபிடிக்க நேரம் எடுத்துக் கொண்டார். அப்போதே அவரை வீழ்த்தியிருக்க வேண்டும், ஆனால் அவரை செட்டில் ஆகவிட்டனர்.

தில்ஷன் நிதானப்போக்கைக் கடைபிடித்தார், அவர் எந்த வித சிரமமுமின்றி ஆடினார் 9 பவுண்டரிகளும் லெக் திசையில் வந்தன. 92 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த அவர் ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் சிங்கிள் இருப்பதாக நினைத்து ஓட, திரிமானே அவரைத் திருப்பி அனுப்ப ரீச் செய்ய முடியாமல் ரன் அவுட் ஆனார். ஆனால் இலங்கை 33.5 ஓவர்களில் 209/2 என்று வலுவான நிலையில் இருந்தது.

கடைசியில் திரிமானே 103 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தும், தினேஷ் சந்திமால் 27 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ 22 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலங்கை 277/2 என்று வெற்றி பெற்றது. மந்தமான பிட்சில் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்சாக வீசினர், ஸ்பின் பந்து வீச்சிலும் தாக்கம் இல்லை. சாண்ட்னர் 10 ஓவர்களில் 59 ரன்களையும், பிரேஸ்வெல் 6.5 ஓவர்களில் 45 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். கேன் வில்லியம்சன் 8 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்தார். சவுதீ, மில்ன ஆகியோரும் தங்களுக்கிடையேயான 12 ஓவர்களில் 94 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

ஆட்ட நாயகனாக அதிரடி இன்னிங்ஸ் ஆடிய குணதிலக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக நியூஸிலாந்து அணியில் அதிரடி மன்னன் மார்டின் கப்தில் 30 ரன்களில் சமீரா பந்தில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேன் வில்லியம்சன் வழக்கம் போல் அனாயசமாக ஆடினார், ஆஞ்சேலோ மேத்யூஸ் ஓவரில் ஆஃப் திசையில் 3 தொடர் பவுண்டரிகள் வில்லியம்சனின் பேட்டிங் ஸ்டைலை நிரூபித்தது. அவர் அதிகபட்சமாக 73 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து சிறீவதானவிடம் வீழ்ந்தார். லேதம் அதிரடியாக 47 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 ரன்கள் விளாசி லெக் ஸ்பின்னர் வாண்டர்சேயிடம் வெளியேறினார். லேதம், மற்றும் டெய்லர் (0) ஆகியோரை வாண்டர்சே ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

லூக் ரோங்க்கி 7 ரன்களில் அவுட் ஆக, 191/6 என்ற நிலையில் சாண்ட்னர் (38), பிரேஸ்வெல் (30), மில்ன (17), சவுத்தி (18) ஆகியோர் பங்களிப்பினால் நியூஸிலாந்து 276/8 என்று முடிந்தது. இலங்கை தரப்பில் பிரதீப், சமீரா, வாண்டர்சே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சிறீவதனா 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்