நமது சமூகத்தில் பெண்களை இழிவாக நடத்துவது பற்றி விராட் கோலி தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை தவிர வேறு எதைப்பற்றியும் இதுவரை பேசாத விராட் கோலி, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சமூக அக்கறைகள், கிரிக்கெட் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், மூத்த குடிமக்கள் மீதான தாக்குதல்கள் தன்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதாக விராட் கோலி தெரிவித்தார்.
“இத்தகைய விவகாரங்கள் நீண்ட காலமாக கவலைக்குரிய விஷயங்களாக உள்ளன, குறிப்பாக பாலியல் பலாத்காரங்கள், பாலியல் துன்புறுத்தல்கள், ஈவ்-டீசிங் ஆகியவை கவலையளிப்பதாகும். பெண்களை இவ்வாறு அவமதிப்பது கவலையளிக்கும் விஷயமாகும்.
பெண்களை கீழாவனர்களாகப் பார்க்கும் நடத்தும் ஒரு சமூகத்தை நாம் கட்டமைத்துள்ளோம் அதுதான் மூலக்காரணம். எப்படி நாம் அவர்களை அவ்வாறு நடத்த முடியும்? இந்த மனநிலை என்னை தொந்தரவு செய்கிறது, இதனை கடுமையாகக் கண்டிக்க வேண்டும்” என்றார்.
விராட் கோலியின் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:
கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
நான் அதனை உயர்ந்த அளவில் மதிப்பிடுகிறேன். கிரிக்கெட் எப்படி பரிணாமம் அடைந்தது, கடந்த தலைமுறை வீரர்கள் சந்தித்த சவால்கள் என்னன்ன என்பதை அறிய வேண்டும். அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட ரன்கள், சதங்கள், விக்கெட்டுகள் ஆகியவற்றை நாம் பாராட்ட வேண்டும்.
ஹெல்மெட்கள், தொடை காப்புகள் இல்லாமல் சராசரியான கால்காப்புகள், இதனைக் கொண்டு முறையாக தயாரிக்கப்படாத பிட்ச்களில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது என்பது பாராட்டப்பட வேண்டியது.
களத்தில் உங்களுக்கு நீங்களே சவால் அளித்துக் கொள்வதுண்டா?
ஆம். களத்தில் எப்போதும் என்னையே நான் சவாலுக்குட் படுத்திக் கொள்வேன். மற்ற ஒருவர் என்னைப் பற்றி தீர்ப்பு அளிப்பதை விட நானே என் ஆட்டத்திறனை மதிப்பிட்டு தீர்ப்பு வழங்கி கொள்வேன். இது எனக்கு ஊக்கத்தை அளித்து மேலும் ரன்களை குவிக்க உதவுகிறது. இதனால்தான் ஒவ்வொரு முறை ஆட்டமிழக்கும் போதும் எனக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது.
நான் எனக்கான தரநிலையை நிர்ணயித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தவே களத்துக்குள் செல்கிறேன். அணி வெல்வதை உறுதி செய்வதே என் நோக்கம்.
நீங்கள் கேப்டனாக இருப்பதால் அணி தோல்வியடையும் போது உங்கள் மீது குற்றம் சுமத்திக் கொள்வீர்களா?
நான் கேப்டனாக தற்போது இருப்பதனால் மட்டுமல்ல. நான் நிறைய முறை எனது பயிற்சியாளர் (ராஜ் குமார் ஷர்மா) இடம் பேசும் போது என்னால்தான் தோற்றது என்று கூறியிருக்கிறேன்.
இங்கிலாந்தில் டி20 ஆட்டம் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் 70 ரன்கள் எடுத்து புல்ஷாட்டில் அவுட் ஆனேன். அந்தப் போட்டியில் நாங்கள் தோற்றோம். நிறைய முறை தோல்விக்கு நானே காரணம் என்று குமுறியதுண்டு, நண்பர்கள் கூட இதனை இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றனர்.
களத்தில் ஏன் கோபமாக இருக்கிறீர்கள்?
இதற்கு என்னுடைய சாதாரணமான பதில் வெற்றி பெற விளையாடுகிறேன் என்பதே. நானும் களத்தில் நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்வேன் ஆனால் எப்போதுமே அல்ல. நான் இப்போது கேப்டன் எனவே நான் அடுத்தவர்களை முட்டாளாக்கக் கூடாது. களத்தில் எப்போதும் தீவிரமாகவே இருப்பேன். இதுதான் நான் கோபமாக இருப்பது போன்று வெளியே தெரிகிறது, உண்மையில் நான் கோபமாக இருப்பதில்லை. நான் கோபமாக இருப்பேன், ஆனால் எப்போதும் அல்ல.
ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் வளர்ச்சியடைந்ததாக கருதுகிறீர்களா?
வளர்ச்சியடைந்ததாகவே நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் நான் உண்மையில் ஒரு நல்ல பேட்ஸ்மெனாக வளர்ச்சியுற்றிருப்பதாகவே கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி நினைக்கும் கட்டத்தை நான் இன்னும் எட்டவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னமும் அந்த இடத்துக்கு நான் வரவில்லை. சூழ்நிலைக்கேற்ப விளையாடி வருகிறேன். டெஸ்ட் பேட்ஸ்மெனாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் டெஸ்ட் பேட்ஸ்மெனாக பரிணாமம் அடைந்து விட்டேன் என்று கூறும் மனநிலையை எட்டவில்லை, அதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படும்.
வேறு எந்த வீரராவது விளையாடிய ஒரு குறிபிட்ட ஷாட்டை நீங்கள் விளையாட ஆசை கொண்டதுண்டா?
நிச்சயமாக. ஷார்ஜாவில் சச்சின் டெண்டுல்கர் மைக்கேல் காஸ்பரோவிச் பந்தை நேர் பேட்டில் நேராக அடித்த சிக்சர்! அதனை நான் டென்னிஸ் பந்தில் ஆட முயற்சி செய்திருக்கிறேன்.
எதைப்பற்றியாவது அச்ச உணர்வுண்டா?
கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது சரியாக ஆட முடியாமல் ஒரு பேட்ஸ்மெனாக தோல்வியடைந்தது பற்றி எனக்கு அச்சம் இருந்தது. ஆனால் அதன் பிறகு நிறைய கற்றுக் கொண்டேன். வாழ்க்கை முழுதும் எந்த ஒன்றுடனும் பற்றுடன் இருக்க முடியாது. அது நண்பர்களாக இருக்கலாம், குடும்பமாக இருக்கலாம், ஏன் குழந்தைகளாகக் கூட இருக்கலாம். அதாவது கைவிட முடியாது என்ற அளவுக்கு எதனுடனும் பற்றுதல் வைத்துக் கொள்ள முடியாது.
எனவே தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமல்ல. சில சமயங்களில் அது ஊடுருவுகிறது, ஆனல் நான் அதனைத் தடுத்தாட்கொள்ள பழகிவிட்டேன்.
குடும்பத்தின் செல்வாக்கு?
மிகப்பெரிது. 3வது குழந்தையாக நான் பிறந்ததில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். எனக்கு எந்தவித சுமையும் அழுத்தமும் இல்லை. குடும்பப் பொறுப்புகளை எனது சகோதரர் கவனித்துக் கொள்கிறார். என்னுடைய் தந்தை (பிரேம் கோலி, இப்போது உயிருடன் இல்லை), மிகவும் சுதந்திரமான மனிதர், மிகவும் கடினமாக உழைத்தார்.
டெல்லி அண்டர்-14 அணியில் என்னை புறக்கணித்தது என்னை சிதறடித்தது. டெல்லியில் அனைத்தும் எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். யாருக்காவது எதாவது சாதகம் செய்து விட்டு என்னை அணியில் நான் தேர்வு செய்ய வைக்க வேண்டும். இது என் தந்தையிடம் வைக்கப்பட்டது, நான் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தேன். அடுத்த ஆண்டே எனது திறமைகளின் அடிப்படையில் அணியில் நுழைந்தேன். என்னுடைய தாயார் (சரோஜ்) என்னிடம் கிரிக்கெட் பற்றி பேசமாட்டார். எனக்கு குடும்ப ஆதரவு விலைமதிக்க முடியாதது.
ஊடகம் பற்றி உங்கள் பார்வைகள்?
அறரீதியாக சரியாகச் செயல்படுவது முக்கியம். சில சமயங்களில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. கடந்த தொடரை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் நல்ல முறையில் ஆடினோம். ஆனால் எழுதப்பட்டதோ பிட்ச்கள் பற்றி. இந்திய பேட்டிங் எப்படி நன்றாக ஆடவிலை என்பது பற்றி எழுதப்பட்டது. பவுலர்கள் எப்படி திறமையாக வீசினர்.. அது பற்றி ஒன்றும் பேசப்படவில்லை.
நம் வீரர்களையே நாம் விமர்சிப்பதா? நீங்கள் எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தால், வீரர்கள் மட்டும் உங்களிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். எப்போதுமே கெடுதல்களையே எழுதி கொண்டிருக்க முடியுமா? எங்களை விமர்சிக்க வேண்டாம் என்று கூறவில்லை, போதுமான அளவுக்கு பாராட்டுதலும் தேவை.
நீங்கள் எவ்வாறு நினைவுகொள்ளப் பட விரும்புகிறீர்கள்?
கிரிக்கெட்டுக்கு வித்தியாசம் ஏற்படுத்திய ஒரு நபராக. இந்த ஆட்டம் எனக்கு நிறைய அளித்துள்ளது, எனவே இளைஞர்களை கிரிக்கெட் ஆட்டத்தை கையிலெடுக்கச் செய்ய என்னால் ஆனதை நான் கிரிக்கெட்டுக்காக திரும்பி அளிக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் எங்கு இருந்ததோ அதனிடத்துக்கு மீண்டும் கொண்டு செல்ல வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ஸ்டேடியம் முழுதும் ரசிகர்களுடன் நான் கண்டிருக்கிறேன். இது மீண்டும் நிகழ வேண்டும். வலுவான நட்புமுறைகளுடன், நான் கூட விளையாடிய வீரர்களுடன் எனது கிரிக்கெட் வாழ்வும் நிறைவுற்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago