நியூஸிலாந்து ஒரு முறை; இந்தியா 5 முறை: ஐசிசி தொடர்களில் உயரப் பறக்கும் இந்திய வெற்றிக் கொடி!

By டி. கார்த்திக்

முதன்முறையாக நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவைத் தாண்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒன்றுதான் இறுதிப் போட்டிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லா எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கிவிட்டு, நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் இந்தியாவும் நியூஸிலாந்தும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது இது இரண்டாவது முறை. அதற்கு முன்பு இந்தியாவும் நியூஸிலாந்தும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி ஒன்றில் மோதியுள்ளன. 8 அணிகள் பங்கேற்ற ஐசிசி நாக் அவுட் டிராபி (இப்போது ஐசிசி சாம்பியன் டிராபி) தொடர் 2000ஆம் ஆண்டில் கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்றது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 1975ஆம் ஆண்டு முதல் ஐசிசி நடத்தும் தொடர்களில் விளையாடி வரும் நியூஸிலாந்து அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தத் தொடரில்தான் முதன்முறையாக நடந்தது.

அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி எடுத்த 264 ரன்களைத் துரத்திய நியூஸிலாந்து அணி, 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோல்வி நிச்சயம் என்றிருந்த வேளையில் கிறிஸ் கெய்ன்ஸ், கிறிஸ் ஹாரிஸ் ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப்பில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. முதன் முறையாக ஐசிசி நாக் அவுட் டிராபியை நியூஸிலாந்து வென்றது. அதுமட்டுமா? இதுவரை ஐசிசி நடத்திய தொடர்களில் நியூஸிலாந்து அணி முதலும் கடைசியுமாக வென்ற ஒரே ஐசிசி தொடரும் இதுதான்.

இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்தான் அப்போது நியூஸிலாந்து அணியின் கேப்டன். அவர்தான் ஐசிசி கோப்பையை நியூஸிலாந்துக்குப் பெற்றுக் கொடுத்த முதல் கேப்டனானார். அதன்பிறகு ஐசிசி தொடர்களில் 2015, 2019 என இரண்டு முறை 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிப் போட்டிவரை நியூஸிலாந்து அணி தகுதி பெற்றபோதும், கோப்பையை வென்றதில்லை. டி20 உலகக் கோப்பையில் ஒருமுறை கூட நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை 1983, 2003, 2011 என மூன்று முறை 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று 1983, 2011 என இரு முறை கோப்பையை வென்றுள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பையில் 2007, 2014ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, 2007 உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஐசிசி சாம்பியன் டிராபியில் 2000, 2002, 2013, 2017 என நான்கு முறை இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதில் 2002, 2013-ம் ஆண்டு இந்தியா கோப்பையை வென்றுள்ளது.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளில் ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டியில் அதிகமாகப் பங்கேற்ற அணியாகவும் கோப்பைகளை வென்ற அணியாகவும் இந்தியா உள்ளது. ஆனால், கடந்தகாலப் புள்ளிவிவரங்கள் என்பது அணிகளை எடை போடுவதற்கு உதவும் அம்சம் மட்டுமே. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அன்றைய போட்டியில் நாளில் முத்திரை பதிக்கும் அணியின் பக்கமே வெற்றிக் காற்று வீசும். முதன்முறையாக நடக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அந்த வெற்றிக் காற்று யார் பக்கம் வேண்டுமானாலும் வீசலாம்.

2007ஆம் ஆண்டில் தொடங்கிய முதல் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. அதேபோல இந்த ஆண்டு தொடங்கியுள்ள முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் இந்தியா தகுதி பெற்றிருக்கிறது. 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாதித்ததைப் போல இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் சாதிக்க வாழ்த்துகளை மட்டும் இப்போது சொல்லிவைப்போம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்