டெல்லியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியது இந்தியா.
தென் ஆப்பிரிக்க அணி ஒரு அசாத்தியமான டிராவுக்காக வரலாறு காணாத தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 143.1 ஓவர்கள் விளையாடி 143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொத்தம் 859 பந்துகளை தென் ஆப்பிரிக்க அணி இந்த இன்னிங்சில் சந்தித்ததில் பவுமா (117 பந்துகள்), ஆம்லா (244 பந்துகள்), டிவில்லியர்ஸ் (297 பந்துகள்), டுபிளெஸ்ஸிஸ் (97 பந்துகள்), டேன் விலாஸ் (50 பந்துகள்) அகியோர் சேர்ந்து 805 பந்துகளை எதிர்கொண்டு 125 ரன்களை சேர்த்தனர். இத்தகைய ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு இதற்கு முன்னால் கண்டிருக்குமா என்பது ஐயமே. கடைசி 5 விக்கெட்டுகள் 7 ரன்களில் விழுந்தது.
உமேஷ் யாதவ், கைல் அபாட்டுக்கு வீசிய ரிவர்ஸ் ஸ்விங் விளையாட முடியாத ஒரு பந்து. ஒன்றுமே செய்ய முடியவில்லை, பந்து லெக் ஸ்டம்பை உடைத்தது.
கடைசியாக, மோர்னி மோர்கெலை அபாரமான பந்து ஒன்றில் பவுல்டு செய்தார் அஸ்வின், இதுவே வெற்றி விக்கெட்டாக அமைந்தது. அஸ்வின் 49.1 ஓவர்களில் 26 மெய்டன்களுடன் 61 ரன்களுகு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 21 ஓவர்களில் 16 மெய்டன்களுடன் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்த 143.1 ஓவர்களில் 89 ஓவர்கள் மெய்டன் ஓவர்களாகும்.
5-ம் நாளான இன்று காலை 23 ரன்களில் களமிறங்கிய ஆம்லா மேலும் 2 ரன்கள் சேர்த்து 25 ரன்களில் ஜடேஜாவின் பந்தை தவறான லைனில் தடுப்பாட்டம் ஆட பந்து லேசாக திரும்பி மட்டையைக் கடந்து ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது.
தனது 10 ரன்களுக்கு 97 பந்துகள் விளையாடி தடுப்பாட்டத்தின் உச்சத்தை டிவில்லியர்ஸுடன் இணைந்து காட்டிய டுபிளெஸ்ஸிஸ் ஜடேஜாவின் பந்து ஒன்று திரும்பும் என்று எதிர்பார்தார், ஆனால் அது நேராகி கால்காப்பைத் தாக்க எல்.பி.ஆனார்.
டுமினி 12 பந்துகள் சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் நேராக எல்.பி.ஆனார். இது அஸ்வின் இந்தத் தொடரில் கைப்பற்றிய 30-வது விக்கெட்டாகும்.
டிவில்லியர்ஸ் ஆச்சரியப்படும்படியான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், ஆனால் அவருக்கு அஸ்வின் ஒருபந்தை நன்றாகத் திருப்பி எழும்பச் செய்ய பந்து அவரது கிளவ்வில் பட்டு லெக் ஸ்லிப்பில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. அவரை உணவு இடைவேளைக்கு முன்னதாக உமேஷ் யாதவ் தனது எகிறு பந்துகளினால் தடுமாறச் செய்தார். இருமுறை உமேஷ் யாதவ் பந்தில் டிவில்லியர்ஸ் கையிலிருந்து மட்டை நழுவியது. உணவு இடைவேளைக்கு பின்னரும் தனது எகிறு பந்துகளினால் உமேஷ் டிவில்லியர்ஸை படுத்தி எடுத்தார். இருமுறை கிளவ்வில் வாங்கினார். ஆனாலும் அவரது உறுதிப்பாடு கவனிக்கத் தக்கது.
முன்னதாக டேன் விலாஸுக்கு உமேஷ் யாதவ் அருமையாக ஆஃப் கட்டரை வீச அவரால் மட்டையை சமயத்தில் கொண்டு வர முடியவில்லை இதனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.
பியட் 11 பந்துகள் விளையாடி 1 ரன் எடுத்து சஹாவின் அதி அற்புத கேட்சுக்கு யாதவ்விடம் அவுட் ஆனார். இந்தப் பிட்சில் சஹாவின் விக்கெட் கீப்பிங் அபரிமிதமனதாக இருந்தது. இந்தப் பந்தும் இன்கட்டர். மார்புயர பந்தான அது மட்டையில் பட்டு பின்னால் செல்ல, சஹா டைவ் அடித்து ஸ்லிப்புக்கு முன்னால் ஒரு கையில் பிடித்தார். கடைசியாக மோர்னி மோர்கெல் அஸ்வின் பந்தில் பவுல்டு ஆக, தென் ஆப்பிரிக்காவை 3-0 என்று வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறியது.
தென் ஆப்பிரிக்கா கடுமையாக போராடினாலும், இந்திய பவுலர்கள் கடைசி வரை உற்சாகம் குன்றாமல் வாய்ப்புகளை உருவாக்கி அது கைகூட காத்திருந்தனர், கோலியின் களவியூகம் தென் ஆப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுத்தது. ஒரு போதும் விராட் கோலி நெருக்கமான களவியூகத்தைக் கைவிடவில்லை.
ஆட்ட நாயகனாக இரு இன்னிங்ஸ் சத நாயகன் ரஹானே தேர்வு செய்யப்பட அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago